துளி தீ நீயாவாய் 18 (8)

“என்னடா உன் மாலு என்ன சொல்றா?” என்றபடி இவள் கருணிடம் போக,

“ம், அப்றம், இது ரெண்டையும்தான் சொல்றா” என வருகிறது அவனது பதில்.

“அதுக்கெல்லாம் அவளையும் பேசவிடணும்டா தம்புடு, நீ மட்டுமா பேசிகிட்டு இருந்தா பாவம் அவளும்தான் என்ன செய்வா?” இது இவள்.

“என்னது தம்புடுவா?” அவனோ இதில் சீண்டப்பட்டான்.

“பின்ன இல்லையா? கல்யாணம் ஆகிட்டா அவங்க யங்கி, ஆகாதவங்கதான் சீனியர், ஏன்னா ஆகாதவங்களுக்கு அறிவிருக்கும், ஆனவங்களுக்கு அது இருக்காது, பொதுவா குழந்தைங்களுக்குத்தானே அவ்வளவா விஷயம் தெரியாது, அதான் நீ யங்கி” இவள் இப்படி எக்குதப்பாக காரணம் சொல்ல,

அவன் “நீ மங்கி” என விடை கொடுக்க,

இதே நீயா நானாவிலே இவர்கள் பட்டு எடுத்து வேலை முடித்து வீட்டுக்கும் வந்தாயிற்று.

மறுநாள் நிச்சய விழா அல்லவா? பவி வந்து தேர்வு செய்யும் வரை நிச்சய புடவை எடுக்க வேண்டாம் என நிறுத்தி வைத்திருந்த தயாப்பா மதுரையிலேயே நிச்சய புடவையும்,  பவிக்கான புடவையும் எடுத்து இவர்களுக்கு வழக்கமாக தைக்கும் தையல்காரரிடம் தைத்தே வாங்கி வந்துவிடும்படி சொல்லி இருந்தார்.

இவர்கள் வீட்டை அடையும் போது, வாசலில் பந்தல் போடும் வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

“அஹம் அஹம் என்னதிது வரவேற்பெல்லாம் ஒன்னும் சரி இல்ல, இதுக்குள்ள பந்தல் போட்டு மேள தாளமெல்லாம் வச்சுருக்கணுமே!” தலை வாசல் படியேறியபடியே சொன்னாள் அவள். படிப்பு முடிந்து வரும் அவளை அப்படி வரவேற்க வேண்டுமாம்.

“மேள தாளம்தானே, எனக்கும் ஆசைதான், நீ சொன்னா உடனே செய்துடுவோம்” இது இவளுக்குப் பின்னால் வந்த கருண். இவளது கல்யாணத்தை குறித்துச் சொன்னான் அவன்.

“தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ” அதற்கான இவளது எகிறல் இது. வழக்கமாக பவி இப்படித்தானே அவனிடம் பேசுவாள், அதைப் போலவே பேசிக் கொண்டு இவள் வீட்டுக்குள் நுழைய,

“ஐயையோ அம்மா பயமா இருக்கே, இப்ப என்ன செய்ய?” என நக்கல் செய்தபடியே கருணும் வர,

“என்னது தூக்குல தொங்க போறியா? என்னடிம்மா இது கல்யாண மாப்ளைய இப்படி மிரட்டிட்டு இருக்க?” என வருகிறது வீட்டுக்குள் இருந்து குரல். வேறு யார் அந்த செவ்வந்தியம்மாதான்.

தன் தம்பி மகளை வேண்டாம் என்றுவிட்டு இந்த கருணுக்கும் வேறு இடத்தில் பெண் முடிவு செய்துவிட்டார்களே என்ற எரிச்சல் அவருக்கு! இந்த இவளுக்கு வந்த வாழ்வப் பாரேன், இத்தன நாளும் எல்லோரையும் ஆட்டி வச்சது இல்லாம, இனி முழு உரிமையா எல்லாத்தையும் ஆண்டு அனுபவிப்பா என பவித்ராவின் மீது காந்தல் மறுபுறம். அதுதான் காதில் தெளிவாக விழுந்தும் வேண்டுமென்றே இப்படிச் சொல்ல வைத்தது.

அப்போதுதான் வீட்டின் உள் அறையில் இருந்து வந்து கொண்டிருந்த தயாப்பாவின் காதில் இந்த செவ்வந்தியம்மாவின் பேச்சு மட்டுமே விழ, பவி பொதுவாகவே கருணிடம் எடக்கு மடக்காக பேசுவாள்தானே, விளையாட்டாய் இப்படி சொல்லிவிட்டாள் போலும் என எண்ணிவிட்டார் அவர்.

“பவி வார்த்தைய யோசிச்சுப் பேசு பவி” என சுள்ளென அதட்டியவர், “அவதான் சின்ன பிள்ள சொல்றான்னா, அத உன் வாயால வேற சொல்லுவியா நீ?” என செவ்வந்தியம்மாவுக்கும் சுரீரென கொடுத்தார்.

பவிக்கு ஒரு கணம் ஆடிப் போனதுதான். அவள் இந்த செவ்வந்தியம்மாவை கவனித்திருக்கவே இல்லையே, அதோடு என்ன வார்த்தைகள் இவை? கூடவே தயாப்பாவின் கோபம் வேறு.

ஆனால் அதற்குள் தலையிட்ட கருணோ “அந்த கிழவிக்கு காது கேட்காம உளருதுன்னா நீ ஏன்ண்ணா?” என தயாப்பாவின் தவறை சுட்டிக் காட்ட,

இனி கருண் பார்த்துக் கொள்வான் என பவி மாடியேறி சென்றுவிட்டாள்.

அந்த நேரம் தயாப்பாவை அங்கு எதிர்பார்த்திராத செவ்வந்தியம்மாவும், “ஆமாய்யா, காது கேட்கல போல” என சொல்லி சமாளிக்க,

“அதுக்காகன்னாலும் இப்படியா பேசுவ” என அவர் தாளிக்க, சற்று நேரம் திட்டு வாங்கிவிட்டு கிளம்பிப் போயிருக்குமாயிருக்கும் அந்த செவ்வந்தியமா.

பவி அப்படித்தான் நினைத்துக் கொண்டாள்.

இதில் ஊரிலிருந்து வரவும் இவளது வழக்கப்படி தனது அறையில் போய் குளித்து முடித்தவள், ஒரு சல்வாரை போட்டுக் கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வரும் போதுதான் அந்த எண்ணம் வருகிறது அவளுக்கு.

நாளை விழாவுக்கென தைத்து வாங்கி வந்திருந்த ப்ளவ்ஸை போட்டு அளவு சரியாகத்தான் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தாள் அவள். மாளவிக்கான புடவையையும் இவளது புடவையையும் கையோடு இவளது அறைக்கே தூக்கி வந்திருந்தவள் அப்பெட்டிகளை அது அதற்கான பையோடு கட்டிலில் வைத்திருந்தாள்.

அதில் இவளது புடவை பெட்டியிலிருந்து ரவிக்கையை எடுத்து அணிந்து பார்த்தாள். அது சரியாக இருந்தது, ஈர முடியோடு இந்த  வேலை செய்ததில் ஜாக்கெட் சற்றாய் ஈரமாகிவிட, இப்போது அதை கட்டிலில் புடவை பெட்டிகள் பக்கத்திலேயே போட்டுவிட்டு,

தலையை சரியாக துவட்டுவதற்காக, குளியலறையில் விட்டு வந்த தனது டவலை எடுக்கப் போனாள். அதை எடுத்துக் கொண்டு இவள் மீண்டுமாய் அறைக்குள் வரும் போதுதான் அக்காட்சி கண்ணில் விழுகிறது.

இவளது அறைக்கான ஜன்னல் திறந்திருக்கிறது. வெளிப்புறம் ஏதோ மனித உருவம். இவளைக் காணவும் அது விருட்டென ஓடி மறைகிறது.

முதல் தளமல்லவா இவளது அறை, அங்கு வெளிப்புற சுவரில் அதாவது அந்தரத்தில் யார்? ஏன்? அதுவும் இருட்டிவிட்ட இந்நேரம்?

“ஹேய் யார் நீ?” என கத்தினாள் இவள்.

தொடரும்….

துளி தீ நீயாவாய் 19

 

14 comments

    • I’m on medical rest Donah. If it is HIS will I’ll publish the epi next week .

Leave a Reply