துளி தீ நீயாவாய் 18 (7)

ஆக முதல் வேலையாக தயாப்பாவிடம் போய் ”ப்ரவி இருக்கப்ப ஏன் தயாப்பா கருணுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் செய்துருக்கீங்க?” என ஒருவாறு தன்னை திரட்டிக்கொண்டு கேட்டவள், “ப்ரவிக்கு எதுவும் பெருசா பிரச்சனையா?” என கேட்டு முடிக்கும் முன்னும் அழுது வைத்திருந்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த தயாப்பாவுக்கு எப்படி இருக்கிறதாம்? உண்மையில் அவர் வெகுவாக நெகிழ்ந்து போய்விட்டார். மகிழ்ந்தும்தான். “மண்டு, எதையும் நல்லதா யோசிக்க மாட்டியா நீ?” என இவள் ஆறுதலுறும் வகையில் இவள் தலையில் கை வைத்து சின்னதாய் ஆட்டியவர்,

“போ, போய் முதல்ல பெரியவன்ட்ட பேசு, குழப்பம் எல்லாம் சரியாகிடும்” எனச் சொல்லி ப்ரவியிடம் இவளை கைகாட்டிவிட்டு, இவள் அறையைவிட்டு வெளியே போகவும் முதல் வேலையாக ப்ரவியை அழைத்து விஷயத்தைச் சொன்னார்.

“ஏடா நீ பாட்டுக்கு அவ படிப்பு அது இதுன்னு சொல்லிட்டு இருக்க, பிள்ள இப்படி குழப்பிகிட்டு இருந்தாலும் பரீட்சை நல்லா செய்வான்னா நினைக்கிற? உனக்கு என்ன சொல்லணும்னு தோணுதோ அதை அவட்ட சொல்லிக்க, அதையே நானும் பிடிச்சுகிறேன்,

ஆனா அவ எனக்கு சிரிச்ச முகமா சுத்தி வரணும், அடுத்தும் சின்னவன் கல்யாணம் வரைக்கும்தான் உங்களுக்கு டைம், அதுக்குள்ள உங்க நிச்சயமும் நடக்கணும், அதுக்கப்புறம் நீயாச்சு அவளாச்சு எப்ப நீங்களா வந்து கல்யாணம் செய்து வைன்னு சொல்றீங்களோ அதுவரைக்கும் நான் கல்யாணப் பேச்சே எடுக்கமாட்டேனே” என்று இவனுக்கு கெடுவும் வைத்தார்.

பவியின் இந்த அலைப்பறையில் மனம் நிறைந்து போயிருந்தார் மனிதர். ப்ரவிக்குத்தான் பவி என நினைத்துக் கொண்டிருப்பவர் அல்லவா? இப்படி அவனுக்காக பரிதவிப்பவளா ப்ரவியை வேண்டாமென்றுவிடுவாள் என்பதுதான் அவர் கவனத்தில் படுகிறதே தவிர, இத்தனைச் சூழலிலும் தனக்கு ப்ரவியை செய்ய நினைத்திருப்பார்கள் என அவள் எண்ணவேயில்லையே என்பது அவருக்கு உறைக்கவே இல்லை.

ப்ரவியோ இரண்டு வருடமாக காத்திருப்பவன் அல்லவா? வந்து விழுந்த நிபந்தனையில் அவனுக்குள் காட்டு வாழை கூட்டத்தில் வந்து விழும் சாரல் மழையின் தாளமும் சுகந்தமும். முல்லைக் காட்டின் கார்மேக இரவுகளில் மண்வாசனை ஓதும் பண்ணும் பாடலும் உயிர்ச் சுவர்களில்.

ஆனாலும் இத்தனை காலம் காத்திருந்தது பரீட்சைக்கு நான்கு நாட்கள் இருக்கும் போது காதலைச் சொல்வதற்காகவா? அதுவும் மொபைலில்.

தயாப்பாவுக்கு இல்லாத சிந்தனை ஒன்று ப்ரவிக்கு இருந்தது. இப்போதும் பவியின் இந்த செயல் எதுவும் கள்ளமற்ற பாசம் மட்டுமே தவிர காதலின் அடிப் புள்ளி கூட கிடையாது இது. ஆக திருமணம் இவனோடு என்றதும் அவளுக்கு சிந்திக்க சற்று அவகாசம் தேவைப்படும், அதாவது இவனுக்கு நேர்ந்தது போல். அப்படி அவள் யோசிக்கும் இடம் ப்ரீட்சை ஹாலாய் இருந்தால் பொண்ணு அர்யர்ல எழுதுற போல ஆகிடும்.

இங்கு இதற்குள் கால் வெயிட்டிங்கில் பவி அழைப்பது வேறு தெரிகிறது இவனுக்கு. இவனுக்காக பரிதவித்துக் கொண்டிருப்பவளிடம் பேசாமல் இருப்பதும் சரியாமா?

ஆக கிடைத்த அரை நிமிடத்தில் யோசித்து தயாராகி அவளது அழைப்பை ஏற்றான்.

எடுத்ததும் முதல் கேள்வியே “நீ எங்க இருக்க? எனக்கு வீடியோல வா, நிஜமா திருநெல்வேலிலதான் இருக்கியா?” என்பதுதான். பையன் இவளுக்கு தெரியாம காஷ்மீர் எங்கயாவது போயிருப்பானோன்னு பயம்தான்.

பக்கத்திலிருந்த கடையின் பெயர் பலகை வரை காட்டி “நம்புமா தாயே நான் நல்லாவே இருக்கேன், நீ பரீட்சைய முடி, நான் நேர்ல வர்றேன்” என சாட்சி கொடுக்க வேண்டி இருந்தது இவன்.

“இப்ப ஏன் நீ கல்யாணம் செய்ய மாட்டேன்னுட்ட?” என அடுத்த உர்ர் பாவ அவளது கேள்வியில்,

“அட அறிவு ஜீவி என் கல்யாணத்தப் பத்தி யோசிக்கிறியே உனக்கு செய்றத பத்தி யோசிக்கலையா? உனக்கு முன்னல்லாம் நான் செய்றதா இல்ல, அவனுக்கு பொண்ணு அமைஞ்சிருக்கு செய்யட்டும்” என காரணமும் சொல்லி வைத்தான்.

இதுதான் பொதுவில் இங்கு வழக்கம் என்பது இவளுக்குத் தெரியுமே, வீட்டில் வயதுப் பெண்ணிருக்கும் போது அவ்வீட்டு ஆணுக்கு மணம் முடிப்பதில்லைதான் இங்கு. அதே நேரம் பெண் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் சம்பாதிக்கத் துவங்கிவிட்ட ஆண் மகனுக்கு திருமணம் செய்வதும் நடக்கும்தான். ஆக ப்ரவி காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டதாலும், மாளவி வீட்டில் அவசரப்படுத்துவதாலும் இப்படி போலும் என ஒருவாறு சற்று தெளிந்து (?!) கொண்டாள் பவி.

அதிலிருந்து ப்ரவி தினமும் காலை, மாலை, இரவு என அவளிடம் பேசுவது வாடிக்கையானது. ‘திருநெல்வேலிலதான் இருக்கேன், ரொம்பவே நல்லாதான் இருக்கேன்னு சாட்சி கொடுக்கணும்ல?!

இதுவரை இப்படி ஒரு வழக்கம் இல்லையே இருவருக்கிடையில். இதில் என்னதான் அவள் இன்னும் இவனை அறியாதவள் என தெரிந்தே இருந்தாலும், இன்னுமே அவளுக்குள் அடி முடியற்று விழத் துவங்கியிருந்தான் அவன்.

திருமணமானால் தங்க அதற்கேற்ற வீடு வேண்டும், விடுமுறை வேண்டும் என அடிப்படை ஏற்பாடுகளைக் கூட ஆரம்பித்தாயிற்று. ஆம்பல் நதிக்கரையில் தீங்குழல் நாதமாய் ஒற்றைப் பண்ணிசைத்து கழிந்து கொண்டிருந்தன நாட்கள்.

இதில்தான் பரீட்சை முடிந்து வீட்டிற்கு வருகிறாள் பவித்ரா.

அடுத்த பக்கம்