துளி தீ நீயாவாய் 18 (6)

“அடபாவமே ஆனானப்பட்ட என்ட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம, சட்டுன்னு சரின்னுட்ட? அடடே, ஒரு குட்டைப் பொண்ணுட்ட கவுந்துட்டே என் நெட்டைக் கரண்டி” என்பதுதான் பவியின் முதல் வார்த்தைகள் இந்தத் திருமணத்தைப் பற்றி. அதில் ஒரு எதிர்மறை உணர்வும் கிடந்தது.

விஷயம் என்னவென்றால் தயாப்பா கருணின் திருமணப் பேச்சை இந்தக் காலக்கட்டத்தில் துவக்குவார் என்பதே அவள் எதிர்பாராத ஒன்று. அதை கருணும் எந்த தடையும் சொல்லாமல் ஒத்துக் கொண்டது இவளுக்கு என்னவோ போல் இருந்தது.

அவளுக்குத்தான் ப்ரவிக்கும் இவளுக்கும் திருமணம் செய்யும் திட்டம் இருப்பதே தெரியாதே, ஆக எடுத்ததும் கருணுக்கு திருமணம் என்பது வினோதமாக பட்டது அவளுக்கு. என்னதான் கருணும் ப்ரவியும் இரட்டையர்கள் என்றாலும் ப்ரவியை மூத்தவன் என்றே சொல்லியல்லவா பழக்கம்,

ஆக அவனை விட்டு இளையவனுக்கு திருமணம் என்பது ஊரில் அத்தனை சாதாரணமாக நடக்கும் சம்பவம் கிடையாதே, அதுவும் தயாப்பாவெல்லாம் அப்படி முறை மீறும் ஆளும் கிடையாது, அப்படி என்றால் ப்ரவிக்கு என்ன? என்ற ஒரு பிசைதல் அவளுக்கு முதல் நொடியிலிருந்தே!

ஆனாலும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது திருமண காரியம் ஆயிற்றே! ஆக இழுத்துப் பிடித்து இயல்பாய் மகிழ்வாய் பேசுவது போல் அவள் பேசப் போக அதுதான் அப்படி வந்து சேர்ந்திருந்தது.

இதையெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையிலா இருக்கிறார் தயாப்பா? ஆக அவருக்கு திருமணப் பேச்செடுக்கவும் வீட்டுப் பெண் இப்படி எதிர்மறையாய் பேசுவது சற்றாய் எரிச்சல் செய்தது. ஆனால் அதை அப்போதைக்கு வெளியே காட்டிக் கொள்ளக் கூட அவர் எண்ணவில்லை. பேசுவது அவரது பவியாயிற்றே! அதோடு பேச்சுத் துவங்கியதும் இவரும் எரிச்சல்பட்டார் என ஏன் இருக்க வேண்டும்?

அதற்குள் அங்கு கருணோ “அதுக்கென்ன எங்கட்ட வர்றவங்கல்லாம் வளந்துடுவாங்க, அதுதான் வரலாறு” என பதில் கொடுக்க, பவித்ராவின் அக்கா அதாவது தயாப்பாவின் மனைவி சுசித்ரா சற்று குள்ளமான உருவவாகு கொண்டவர். ஆனால் பவித்ரா உயரமானவள். இவர்கள் வீட்டில் வளர்ந்ததால்தான் இப்படி உயரமாகிவிட்டாளாம், என மறைமுகமாக அவன் குறிப்பிட, அவன் பவியிடம் இப்படி பேசவில்லை என்றால்தானே அதிசயம்!.

“டேய் யாரப் பத்தினாலும் பேசு எங்க அக்கா பத்தி பேசுனியோ மண்டைய பிளந்துடுவேன்” என பவியும் அங்கு எகிற,

“அண்ணியப் பத்தி எங்க சொன்னேன், உன்னத்தான் சொன்னேன், அரை ஆழாக்கு சைஸ்லதான இங்க வந்த நீ?” இது கருண்,

“அடப்பாவி ஆறு வயசுல ஒருத்தி எப்படிடா இருப்பா?” இது பவி.

இதற்கு மேல் தயாப்பாவின் காதில் எதுவும் விழவில்லை. ஏனெனில் அவர்கள் இருவருக்குள் சண்டை வந்தால் அது வாய் வார்த்தையாக மட்டும் இருக்காதே, ஒன்று துரத்தும், இன்னொன்று துரத்த வைக்கும். ஆக அடுத்த அறைக்குள் ஓடி இருந்தவர்களை அப்படியே அங்கேயே விட்டு, இவர் மட்டும் மாடியிலிருந்து கீழிறங்கி மாளவி அம்மாவிடம் பேசப் போய்விட்டார்.

அடுத்தெல்லாம் அனைத்தும் நடந்தது அசுர வேகம்தான்.

“வீட்ல போய் உங்க பொண்ணுட்டயும் கலந்துகிட்டு முடிவு சொல்லுங்க” என மாளவி அம்மாவிடம் விஷயத்தை தெரிவித்துதான் அனுப்பினார் தயாப்பா. இரண்டே நாளில் அவரும் தங்கள் பக்க சம்மதத்தை தெரிவிக்க, கூடவே “முடிஞ்ச வரை கல்யாணத்தை சீக்கிரமா முடிச்சிடுங்களேன்” என்றும் கேட்க,

தயாப்பா சற்று அழுத்தி காரணம் விசாரித்ததில் மாளவியின் அம்மா வெகுவாக தயங்கித் தயங்கி “எங்களுக்குன்னு இருக்கது சொந்தமா வீடு மட்டும்தான், அது கூட கடன்ல இருக்கு, ஆனா மாளவி கல்யாணம்னதும் அதை விக்கலாம்னு முடிவு செய்துருக்கேன், எங்க வீட்டு நிலமை தெரிஞ்சும் பெண் கேட்கிறீங்கன்னா எதுவும் நீங்க எதிர்பார்க்க மாட்டீங்கன்னு தெரியும், ஆனாலும் கைல ஒரு பைசா இல்லாம நான் கல்யாணம் செய்து அனுப்பிட முடியுங்களா? வீட வாங்குறவங்கட்ட கல்யாணம் முடியுற வரை இருந்துக்கிறோம்னு சொல்லி இருக்கேன், அதான் சீக்கிரம் முடிஞ்சுட்டா வசதியா இருக்கும்” என விஷயத்தைச் சொல்ல,

“குடியிருக்கிற வீட இதுக்காகல்லாம் விக்காதீங்க” என இவர் சொல்லிப் பார்த்தும், “இல்லைங்க உங்க அளவுக்கு செய்யலைனாலும் ஒன்னுமே செய்யாம அனுப்ப எனக்கு தாங்காது, மாளவி அப்பா எவ்வளவோ கனவு கண்டார்” என அவர் நிற்க,

பவித்ராவின் பரீட்சை முடிந்த மறுநாள் நிச்சயதார்த்தம், அதிலிருந்து இரண்டு வாரத்தில் திருமணம் என்று முடிவாகியது. அதாவது இன்றிலிருந்து ஏறத்தாள ஒரு மாதத்தில் திருமணம் என்பது ஏற்பாடு.

அதனால் ஜரூராக ஆரம்பமாகியது திருமண வேலைகள்.

பவித்ராவுக்குள்ளோ இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் வதைபட துவங்கினாள் அவள்.

மாளவி கருணுக்கு ஏற்ற பெண் என என்ணுவதால் தயாப்பா ஒருவேளை கருணுக்கு திருமணம் பேசி வைத்துவிட்டு, அடுத்து ப்ரவி திருமணத்திற்குப் பின் கருணின் திருமணத்தை நடத்துவாராக இருக்கும் என்றும் ஒருவாறு யோசித்து சமாதானமாகி இருந்தாள் அவள்.

ஆனால் இரண்டு நாளில் கருணின் திருமண தேதியே முடிவாகிவிட, அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் என இயல்புக்கு மீறிய வேகத்தில் எனவும், ப்ரவியின் மணம் பற்றி பேச்சே எழவில்லை என்றானதும் வெகுவாகவே மிரளத் துவங்கினாள் இவள்.

அலுவலக ரீதியாக ப்ரவி எதுவும் மிக ஆபத்தான வேலையில் இருக்கிறானோ என்பதிலிருந்து அவனுக்கு எதுவும் உடலுக்கு பெரிதாய் சுகமில்லையோ என்பது வரை என்னதெல்லாமோ மனதில் வர, ஏனெனில் அப்படியென்றால் மட்டும்தான் இங்கு மூத்தவன் இருக்க இளையவனுக்கு திருமண ஏற்பாடு ஏறெடுப்பார்கள் என்பதால், ஒருவித திகிலும் பிசைதலும் அவளை உருவி உருவிக் குத்தியது.

இவள் தாங்கமாட்டாள் என இவளிடம் மட்டும் விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டார்களோ வீட்டில்?!

அடுத்த பக்கம்