துளி தீ நீயாவாய் 18 (5)

சுருட்டை முடியோடு ஒல்லியாய் வெள்ளையாய் குட்டியாய் இருந்த மாளவியை இவளது தாயாப்பா இவளை கூப்பிட்டு அறிமுகம் செய்து வைக்கும் போதே இவளுக்குப் பிடித்தது. நட்பு நிறைந்த கண்கள் மாளவியோடது.

தயாப்பாவின் தாத்தா காலத்திலிருந்தே ஊருக்கு ஒரு பள்ளி என்ற ஒரு கொள்கையோடு அருகிலிருக்கும் பல சிற்றூர்களில் பள்ளி தொடங்கி நடத்தி வருகிறது இவர்கள் குடும்பம். இப்போது அவை எல்லாம் அரசின் எய்டட் பள்ளிகள் பிரிவில் வரும். அப்படியென்றால் நிர்வாகம் மற்றும் நிலம், கட்டிடம் போன்ற செலவுகள் இவர்களது குடும்பம் சார்ந்தது, ஆசிரியரின் சம்பளம் அரசிடமிருந்து வரும்.

அதாவது அந்த அரசு ஆசிரியர் வேலைக்கு ஆள் நியமிக்கும் உரிமை தயாப்பாவின் கையில் இருக்கிறது. அதில் ஒரு வேலையை இந்த மாளவிக்கு கேட்டு வந்திருந்தார் அவளது தாயார்.

தன்னால் இயன்ற அளவு போராடி பிள்ளையை படிக்க வைத்துவிட்டதாகவும், இப்போது நல்ல சம்பளமுள்ள இந்த வேலை கிடைத்துவிட்டால் என் மகளுக்கும் எனக்கும் விடிவுகாலம் வந்துவிடும் எனக் கோரினார் அந்த அம்மா.

தயாப்பாவுக்கும் பெரிதாய் மறுப்பு எதுவும் இல்லை. பெண்ணுக்கு தகுதி இருக்கிறது எனும் போது நியமிக்கலாமே என்று எண்ணினார். வெளியூரிலிருந்து அடிக்கடி இழுத்தடிக்க வேண்டாம் என அவர்களை இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து வேலைக்கு விண்ணப்பிக்கும் அடிப்படை காரியங்களை முடித்துக் கொடுத்துவிட்டு போகச் சொன்னார் அவர்.

பவி தீவிரமாய் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை என்பதால், வீட்டில் தங்கிய மாளவி அவளை தொந்தரவும் செய்யாமல் அதே நேரம் பவிக்கு எந்நேரம் என்ன தேவைப்படும் என கவனித்து செய்து கொடுத்ததும், உறவு என ஓவராய் ஆடாமல் அதே நேரம் யார் வீடோ நாமக்கென்ன என ஒதுங்கியும் போகாமல் வீட்டின் சின்ன சின்ன வேலைகள் தேவைகளை பாந்தமாய் மாளவி பார்த்துக் கொண்டதும் தயாப்பாவுக்கு இன்னுமாய் பிடிக்க,

பவி எப்போதாவது படிப்புக்கு இடைவெளி கொடுக்கும் நேரத்தில் மாளவியும் அவளும் பேசி சிரிக்கும் சத்தம் அவர் காதில் விழ அவருக்கு வேறு ஆசை வரத் துவங்கியது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பவியை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றானே ப்ரவி, திரும்பி வரவும் முதல் வேலையாக இவரிடம் வந்து “நீங்க பேசுனத கேட்கணும்னு நினச்சு கேட்கல, ஏதேச்சையா காதில் விழுந்துச்சு, பவிய எனக்கு செய்யணும்னு நினைக்கிறீங்கன்னு புரிஞ்சுது. முன்ன எனக்கு அப்படி எண்ணம் இல்லைனாலும் இப்ப எனக்கு இது சரின்னு படுது. பிடிச்சிருக்கு, ஆனா இப்பவே அவளுக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம், அவ படிச்சு முடிக்கட்டும், அப்ப சொல்லுங்க, அவளுக்கும் இஷ்டம்னா செய்வோம்” என சொல்லி இருந்தான்.

ஆக பவி ப்ரவி திருமணம் என்பது அவர் வகையில் உறுதியான ஒன்று. விஷயம் காதில் விழவும் ப்ரவிக்கு பிடிக்கும் என்றால் பவிக்கும்தான் அவனைப் பிடிக்கும் என்று எண்ணினார் அவர். சரியாய் சொல்வதானால் ப்ரவியை வேண்டாம் என அவள் சொல்லிவிடக் கூடாதே என்று இருக்கிறது. ப்ரவி மனம் வலிக்கும்தானே! ஆசையை இவரை அறியாமல் இவரே அல்லவா அவன் மனதில் ஏற்றி இருக்கிறார்!

அதனால் கருணுக்குத்தான் வெளியிடத்தில் பெண் பார்க்க வேண்டும், பவி படிப்பு முடியவும் இரண்டு திருமணங்களையும் நடத்திவிட வேண்டும் என எண்ணி இருந்த அவருக்கு இந்த மாளவியை கருணுக்குச் செய்தால் என்ன எனத் தோன்றத் துவங்கியது.

அந்தஸ்து என்றால் ஏணி வைத்தாலும் எட்டாதுதான் ஆனால் அதெல்லாம் சந்தோஷமான குடும்ப அமைவிற்கு எதற்குத் தேவை? இளையவர்கள்  நால்வருக்கும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போனால் போதாதா? இவர் குடும்பத்தின் எல்லா வளமும் அவர்களுக்குத்தானே என்ற நிலையில் அவர் இருக்க,

இதில் மாளவி ஊருக்குக் கிளம்ப வேண்டிய நாளில் ஏதேச்சையாய் கருணும் வந்து சேர்ந்தான். சொல்லாம கொள்ளாம வர்றதுதானே அவன் வேலையே! பவிக்கு விடுமுறை எனத் தெரியுமாதலால் வந்திருந்தான் அவன்.

அவனை மாளவி எதிர்க் கொண்ட விதமும் இவருக்கு வெகுவாக பிடித்திருந்தது. ஓடி ஓடி அவனிடம் போய் பேசவும் இல்லை, ஆண் என்ற வகையில் அவனைக் கண்டாலே தெறித்து ஓடவும் இல்லை அவள். அளவான பேச்சு வார்த்தை.

கருண் எப்போதுமே சொல்வதுதான், “எனக்கெல்லாம் ஆஃபீசாட்கள பார்க்கவும் தெறிச்சுப் போய் அடுப்படியில செட்டில் ஆகுற பொண்ணெல்லாம் செட் ஆகாது, வர்றவங்கட்ட நம்ம மேல மரியாதை வர்ற அளவுக்கு பேசிப் பழகத் தெரியணும்” என.

ஆக மாளவி ஊருக்குக் கிளம்பும் முன்னும் பவியையும் கருணையும் நிறுத்தி வைத்துக் கொண்டு இந்தத் திருமண காரியத்தைப் பற்றி கேட்டேவிட்டார் தயாப்பா.

பவிக்கு இன்னும் பரீட்சை முடியவில்லை என்பதோடு, ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாய் ப்ரவிக்கு தன் திருமண எண்ணம் பற்றி பவியிடம் தானே முதலில் பேசும் எண்ணமும் இருக்கலாம் என்ற நினைவில், இந்த காலப் பிள்ளைங்களுக்குத்தான் வித விதமா ப்ரொபோஸ் செய்ற ஆசையெல்லாம் இருக்கே என்ற புரிதலில், பவி ப்ரவி திருமண திட்டம் பற்றியெல்லாம் எதையும் குறிப்பிடாமல்,

இது கருணுக்கும் குடும்பத்திற்கும் சரியென அவருக்கு படுகிற மற்ற காரணங்களை மட்டும் சொல்லி அவர் பேச்சை துவக்க,

இந்த காலகட்டத்தில் இவன் திருமண பேச்சும் வரும் என புரிந்து வைத்திருந்த கருண், ஆமாம் என்னதான் ப்ரவி பவி மேல் தனக்கு இஷ்டம் என இவனிடம் சொல்லவில்லை என்றாலும், கூடப் பிறந்த இவனுக்கு அதை புரிந்து கொள்ள முடியாமலா இருக்கும்?

பவி படிப்பு முடியும் வரை இந்தப்பேச்சு வேண்டாம் என காத்திருக்கிறார்கள் தனது இரு சகோதரர்களும் என்றும் புரிந்து வைத்திருந்த அவன், இந்த நேரத்தில் ப்ரவி திருமணத்தோடு இவன் திருமணத்தையும் முடிக்க விரும்புவார் இவனது அண்ணா என்றும் நிதானித்திருந்தான், ஆக மாளவியிடம் அவனுக்கும் எதிர்மறையாய் எதுவும் தெரியாததால், உங்க எல்லோருக்கும் சரின்னு பட்டா எனக்கும் ஓகேதான் என தெரிவித்தான்.

அடுத்த பக்கம்