துளி தீ நீயாவாய் 18 (3)

இன்னும் ஒரிரு மணி நேரத்தில் பவித்ரா கிளம்பிவிடுவாள்தான், ஆனாலும் இவனுக்கு உருட்டிக் கொண்டு வருகிறது.

இதில் மற்ற தன்னார்வ ஊழியர்களுக்கும் இந்த இரவுப் படிப்பு பற்றி சொல்லப்பட்டு, அதன் பின் மாணவ மாணவியரிடம் இதைப் பற்றி அறிவிப்பதில் பவித்ரா ஈடுபட, இவன் தன் காரிலேயே போய் இருந்து கொண்டான். (சரியா சொல்லணும்னா சார் சுருண்டுட்டார்)

சற்று நேரம் இப்படி கழிய, அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு யாரும் கவனிக்கவில்லை என உறுதி செய்து கொண்டு இவனிடமாக ஓடி வருகிறது மது.

“வாங்கண்ணா, பேசாம போய் அண்ணிய பார்த்துட்டு வந்துடலாம், உங்க முகமே சரி இல்ல, உங்க அண்ணி வீடுதான? நீங்க போறதுக்கு என்ன? பக்கத்து வீட்டுக்காரங்க யாரும் பார்த்தாகூட நீங்க தனியா போனாதான் நல்லா படாது, கூட நானும் வரேன்ணா, ஒன்னும் ப்ராப்ளம் ஆகாது” என பலத்த ஆதரவு வேறு இவனுக்கு.

“அண்ணியோட அக்காவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னா, நாம அண்ணிட்ட இதை அவங்க அக்காட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னா விஷயம் முடிஞ்சிதுண்ணா, பவித்ரா மேம் இங்கதான இருக்காங்க, அவங்க வர்றதுக்குள்ள போய்ட்டு வந்துடலாம், பக்கத்து வீட்டுக்காரங்க யாரவது ஞாபகம் வச்சு இவங்க வந்தாங்களே என்ன விஷயம்னு மேம்ட்ட தேடி வந்தா கேட்டுடப் போறாங்க?” என அம்சமாய் ஒரு ஐடியா வேறு!

இதில் உண்மையில் பால்கனிக்கு அப்படியே ‘சான்றோன் எனக் கேட்ட தாய்’ அளவுக்கு புளங்காகித பூரிப்புதான் வந்து நிற்கிறது. இவன் நினச்சுகிட்டு இருந்தத இவன் பாசமலரும் அடி பிசகாம ஐடியாவா சொல்லுதே! எனக்கொரு தங்கை வருவாள் அவள் என்னைப் போலவே இருப்பாள் மொமன்ட்.

ஆனால் வேணியிடம் இதைச் சொல்ல முடியுமா என்ன? நாங்க வந்தத உன் அக்காட்ட சொல்லாத அப்படின்னு சொன்னதும் ஒரு செவிப்பறை படீர்னு பிச்சுகிடும்னா, மதுவ வேற யாருக்கும் தெரியாம schoolல்ல இருந்து கூட்டிட்டுப் போய்ருக்கான்னு தெரிய வர்றப்ப அடுத்த சவ்வும் படீர்தான். இரண்டு கன்னத்திலும் இழுக்காமலா விடுவாள்?

ஆக “இல்லமா இதெல்லாம் உன் அண்ணிக்கே பிடிக்காது, யாரையும் எதுக்காகவும் ஏமாத்தக் கூடாதுன்னு நினைப்பா, அதிலும் அவங்க அக்காவுக்குத் தெரியாம எதை செய்றதும் அவளுக்குப் பிடிக்காது” என மட்டும்தான் இவனால் சொல்ல முடிகிறது.

“என்னண்ணா இது? இதெல்லாம் ஏமாத்றதா? அண்ணி என்ன இப்படி இருக்காங்க? கொஞ்சம் கூட ப்ராக்டிகலா இல்லைனா அது முட்டாள்தனம் இல்லையா?” என்கிறது மது. அவள் கேட்டு வளர்ந்ததைத்தானே அவள் பேசுவாள்?!

ஆனால் என்னதான் மதுவைப் பிடிக்கும் என்றாலும், அவள் சொன்ன வார்த்தைகள் இவனது கருத்தேதான் என்றாலும் ஏனோ மதுவே கூட வேணியை குறைத்துப் பேசியது இவனுக்குள் சுரீர் என்கிறது. ‘என் வேணி’ என்ற உணர்வொன்று பெரு மலையாய் இவனுக்குள் உட்கார்ந்திருகிறதே! அது இவனையாவது வேணியை குறை சொல்ல கொஞ்சமாவது அனுமதிக்குமாயிருக்கும், அடுத்தவர் அவளைப் பற்றி ஒருவார்த்தை பேசுவதை தாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறதே!

ஆனால் அதற்காக மதுவிடமும் கோபப்பட இவனுக்கு மனம் வரவில்லை. ஆக வந்த ஆதங்கத்தில், இப்போதுதானே சற்று முன் பவித்ரா மாணவ மாணவியர் இந்த வயதில் பொதுவாக எது எதில் ஏய்க்க முயலலாம், அது எப்படி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தாகிப் போகும், அதை தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என இவனிடம் பேசி இருந்தாள்,

அதையெல்லாம் உணர்ச்சி வேகமாக சொல்லி (அதாங்க மசாலா சேர்க்கிறது, BGM addபண்றதுன்னு எல்லாம் செய்றது) “சட்டதிட்டம்னு நமக்கு சொல்லி வச்சிருக்கதெல்லாம் நம்ம நல்லதுக்காகத்தான், வேணி செம்ம புத்திசாலி அதோட நல்ல டைப் அதான் அவ இப்படி இருக்கா” என இவன் வேணியின் கொள்கை பரப்பு செயலாளராய் அவதாரம் எடுத்தான்.

உண்மையில் இது வெகு சின்ன நிகழ்வுதான், ஆனால் பின்னாளில் இவன் அந்த புல்லட்காரன் சொன்னது போல் சரணடையச் சென்றதுக்கு ஆரம்பப் புள்ளி இந்த இவனது வார்த்தைகளேதான்.

இப்போதோ இவன் பேசப் பேச மதுவோ  ‘ஆ’ என்ற அசந்து போன நிலையில் நின்றிருந்தவள், “இதெல்லாம் நான் யோசிச்சதே இல்லண்ணா, நிஜமா அண்ணி அவங்க அக்கா நீங்க எல்லோரும் ரொம்ப க்ரேட்” என்றது.

இதனாலெல்லாம் அன்று என்ன நடந்தது என்றால், ஒன்றுமே இல்லை. பால்கனி வேணியைப் பார்க்காமலே வீட்டுக்குப் போக வேண்டியதாகியது அவ்வளவுதான். ஆனால் நாட்கள் நகர நகர அவனைச் சுற்றி இந்த வார்த்தைகளே வலையாகிப் பின்னத் துவங்கியது.

தில் இன்று வீட்டுக்குச் செல்லவும் பவி வேணியிடம் பேச்சுவாக்கில் “அந்தப் பொண்ணு மது வந்து உன்னைப் பத்தி கேட்டா” என சொல்லி வைக்க, வேணி கடைசியாக மதுவிடம் முகத்தை தூக்கிக் கொண்டல்லவா வந்திருந்தாள், அப்படி இருந்தும் மது இவளைப் பற்றி விசாரிக்கிறாள் என்றால் மதுவுக்கு எதுவும் பெரிய பிரச்சனையோ, அதைச் சொல்ல இவளைத் தேடுகிறாளோ என்ற விதை ஒன்று விழுந்து வைக்கிறது இவளுக்கு.

ஆக மறுநாள் எப்படியும் இந்த வகுப்புக்குச் சென்றுவிட வேண்டும் என அவள் முடிவு செய்து கொண்டாள். இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது பவித்ராவுக்கு வருகிறது ஒரு அழைப்பு.

கருணுக்கு பெண் பார்க்கும் காரியங்களை இவள் கையாண்டு கொண்டிருக்கிறாளே அதில் ஒரு பெண் வீட்டிலிருந்து அழைத்திருந்தனர். இவள் பதிந்த இடங்களில் தொடர்புக்கு என தயாப்பாவின் எண்ணைத்தான் கொடுத்திருந்தாள். அதுதானே மரியாதை மட்டும் முறையாக இருக்கும். ஆனால் இவர்கள் இவளது எண்ணை அழைத்திருந்தனர்.

அடுத்த பக்கம்

Advertisements