துளி தீ நீயாவாய் 18 (2)

மாலை நாலு முப்பதுக்கு பள்ளி முடியவும் அரை மணி நேர இடைவெளிக்குப் பின் இவர்களது பயிற்சிகள் துவங்குவதாக அறிவித்திருந்தனர். சரியாய் அந்த நேரத்திற்கு வந்து சேர்ந்த பவித்ராவின் காரிலிருந்து பவித்ரா மட்டும் இறங்க, இவனுக்குள் எல்லாமே வாடிப் போயிற்று.

இவன் பாட்டுக்கு உன்ட்ட பேச மாட்டேன்னு வேணிட்ட ஜம்பம் காட்ட, ஏற்கனவே மதுவிற்காக மட்டுமே இங்கே வந்தவளல்லவா வேணி, அதுதான் மது இவனிடம் மனம் திறந்து பேசும் அளவுக்கு அறிமுகமாகிவிட்டாளே, இனி எதற்கு நான் வர வேண்டும் என அவள் வராது இருந்து கொண்டாளோ? இனி வரவே மாட்டாளோ? என்றெல்லாம் திகிலடிக்கிறது இவனுக்கு.

இதில் அவசர அவசரமாய் பவித்ராவிடம் போனவன் தான் செய்து வைத்திருக்கும் இரவுப் படிப்பு (night study) ஏற்பாடுகளைச் சொல்ல, (பேச்சுவாக்கில் உங்க அண்ணிட்ட இருந்து வேணி பத்தி விஷயத்த பிடுங்கிடணும்னு நீ நினைக்கிறன்னு தெரியுதுடா, ஆனா யார்ட்ட?! ஆனானப்பட்ட உங்க SPயே ஆடிப் போய் நிக்கிற இடம்பா அது) கேட்டிருந்த பவியிடம் உண்மையிலேயே அத்தனை அத்தனை மகிழ்ச்சி.

அனைத்து ஏற்பாடுகளையும் இவன் சொல்லி முடிக்கும் வரை வெகுஆர்வமாய் கேட்டிருந்தவள்,

“வாவ், சூப்பர், நிஜமா இந்தப் பிரச்சனைக்கு என்ன செய்ய முடியும்னு ரொம்பவும் யோசனையா இருந்தது, அவ்வளவு அழகா எல்லாரும் ஏத்துக்குற மாதிரி வழி செய்து கொடுத்துருக்கீங்க, Really very thoughtful of you” என உணர்ந்து பாராட்டும் போதெல்லாம் இவனுக்குள் அமுத பொழிவுகளும் ஜீவ பெருமிதங்களும்தான்.

பொதுவாகவே முதல் நாளிலிருந்தே இவனை ஒருவாறு அசட்டை செய்து, தள்ளி நில் என விலக்கி வைத்தே பேசுவது போல்தான் இருக்கும் பவித்ராவின் பேச்சு.

அது இவன் பெரிதாய் மரியாதை வைத்திருக்கும் அண்ணிக்கு இவன் மீது அத்தனையாய் மரியாதை இல்லை என்று காட்டி உறுத்திக் கொண்டே இருக்கும்தான். (நீ அத்தன ஒன்னும் நல்லவன் இல்லைன்றத முதல் பேச்சுலயே உன் அண்ணி கண்டுபிடிச்சு விலக்கி நிறுத்றதாலதான உன் அண்ணி மேலயே மரியாதை உனக்கு, அப்பறம் என்னடாமா ஃபீலிங்கு?)

இப்போதோ அந்த முள் வேலியை பிரித்துவிட்டது போல், இவனை மரியாதை களத்தில் ஏற்றுக் கொள்வது போல் ஒரு உணர்வும்தான். (அப்படின்னா நிஜமாவே நாம நல்லவனா ஆகிட்டமோன்னு நினைக்கதான?! தெரியும்டாடேய் உன்னப் பத்தி)

பிடிச்சவங்கட்ட நல்ல பேர் வாங்கின குழந்தை போல உள்ளே ஒரு குதுகலுமும்தான். (அது மட்டும்தானா ராசா? இந்த உன் அண்ணி சர்டிஃபிகேட்ட வேணிட்ட சொல்லி அவள கவுக்கலாம்னு நினைக்கலன்னா சொல்ற நீ? கள்ளாளி)

ஆனால் அதற்காகவெல்லாம் பவி இந்த பள்ளித் திட்டங்களைத் தவிர எது பற்றியும் பேச்சை திருப்பக் கூட விடவில்லை.

அப்படியிருக்க இவனாக ”அண்ணி உங்க தங்கச்சிய ஏன் கூட்டிட்டு வரல?” என கேட்டுவிட முடியுமா என்ன? இவன் வேணியைப் பெண் கேட்டுப் போய், அவர்கள் முடியாது என்ற பின், உறவு என்ற காரணத்தைக்காட்டி கூட வேணியைப் பற்றி இவன் எப்படி உரிமை எடுத்துப் பேச?

அப்படியே இவன் கேட்டாலும் ‘அவளப் பத்தி உங்களுக்கென்ன?’ என்ற பதில் கேள்வியை கேட்டு இவனை மூக்குடைக்கும் ரகம்தான் இவனது அண்ணி என்றும் இவனுக்குத் தெரிகிறதே! (இதத்தான் ராசா நங்க முதல்லயே சொன்னோம்)

ஆக இந்த இரவு படிப்பு திட்டத்தில் மாணவ மாணவியரின் பாதுகாப்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும், எந்த எந்த வகையில் ஆபத்துகள் மற்றும் பிரச்சனைகள் வரக் கூடும், அதை தவிர்க்க நாம் எப்படி ஒழுங்கு முறைகள் வைத்துக் கொள்ள வேண்டும்,

சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை ஏய்த்து செய்ய நினைக்கும் காரியங்களுக்கு இந்தத் திட்டமே ஒரு கருவியாய் அமையாமல் பார்த்துக் கொள்வது எப்படி, என பவி விளக்க விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க வேண்டிய நிலை இவனுக்கு. (சும்மாவா? உள்ள அழுகுறேன், வெளிய சிரிக்கிறேன், நல்ல வேஷம்தான், வெளுத்து வாங்குறேன் மொமன்ட்)

ஒரு கட்டத்தில் மது இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கவனித்திருக்க வேண்டும், இவர்கள் அறை என எதற்குள்ளும் இல்லாமல் பள்ளியின் அலுவலக அறைக்கு வெளியே நின்றபடி பேசிக் கொண்டிருந்ததால் கண்ணில் படவும் இவர்களை நோக்கி வந்தாள் அவள்.

மது கனி காரில் காத்துக் கிடக்கும் போதே கண்டுவிட்டாள்தான். போய் சந்தித்து பேச வெகு ஆவலும்தான். ஆனால் இங்கு இவளது பின்புலம் யாருக்கும் தெரியாது எனினும் இப்படி ஆணும் பெண்ணுமாய் தனிமையில் சந்திப்பது சர்வ நிச்சயமாய் சகோதர சிநேகமாக யாராலும் பார்க்கப்பட மாட்டாது என்பதால் விலகியே இருந்தாள்.

இப்போதோ அவன் தன் அண்ணியுடன்தான் நின்று கொண்டிருக்கிறான் எனவும் இவளும் போய் பேசினால் வித்யாசமாய் தோன்றாது என அவர்களிடமாக சென்றாள்.

சென்றதும் முதல் வேலையாக “Good evening mam” என பேச்சைத் துவக்கியவள் இவனைப் பார்த்து ஒரு பொங்கும் புன்னகையோடு “என்ன அண்ணா எப்படி இருக்கீங்க?” என நலவிசாரிப்புக்குப் போய் அடுத்து “உங்க தங்கை வரலையா மேம்?” என நேரடியாக விஷயத்திற்கு வர,

பால்கனியின் முகத்தில் வெள்ளை வெளிச்சத்தில் ஆயிரம் led விளக்குகள் அரை நொடியில் உதயம். (லா லலா லா)

இதிலேயே மதுவுக்கு அவளது அண்ணன் ஏக மற்றும் ஏக்க டல்லாக இருப்பது புரிந்துவிட, அதற்குள் அங்கு பவியோ “Good eveningமா, இதுக்குள்ள நீயும் வேணியும் ஃப்ரென்டாகியாச்சா? வெரிகுட், அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லமா அதான் வரல” என்க,

பால்கனி இப்போது வேறுவிதமான பரிதவிப்பாகிப் போனது. ஆனால் இதையும் அவன் காட்டிக் கொள்ள முடியாதே!

வேணிக்கு உடல் நலம் இல்லை என்பது ஒரு துயரம் என்றால் பவித்ரா இங்கிருக்க வேணி வீட்டில் இருக்கிறாள் என்றால் அவள் தனியாய் இருக்கிறாள் என்று அர்த்தமாகிறதே! அது இவனுக்கு புளிக் கரைசல்களை உண்டு செய்கிறது.

அடுத்த பக்கம்