துளி தீ நீயாவாய் 18

ற்கனவே மடித்துவிட்டிருந்த தன் சட்டை கையை இன்னுமாய் சற்றாய் மடித்துவிட்டபடி ஒரு கள்ளத்தனமான ரசனைச் சிரிப்போடு மொபைலை காதில் வைத்தபடி நடந்து கொண்டிருந்த அந்த நரேன், ஜானி படத்துல ரெண்டு ஹீரோ, ரெண்டு பேரும் தப்பு செய்தவங்க” என புதிரை அவிழ்க்கத் துவங்கினான்.

“ஆனா தண்டனை அனுபவிச்சது ஒரே ஒருத்தர்தானே? ஏனாம்? ஒருத்தரே ரெண்டு பேர் செஞ்சதையும் தன் தலையில தூக்கிப் போட்டுகிட்டு நான்தான் கிரிமினல், நான் மட்டும்தான் கிரிமினல்ன்னு சரண்டர் ஆகிடுவாராம், அடுத்தவங்க  அம்சமா வாழ்வாங்களாம், பார்த்திருப்பியேமா படத்த” அவன் விளக்கிக் கொண்டு போக,

“அப்படி இப்ப உள்ள போகப் போறது நீயாம், பெர்மனன்டா இந்த போலீஸ் புடலங்கான்னு இந்த தொல்லையே இல்லாம ஜாலியா இருக்கப் போறது நானாம்” தெளிவாய் முடிக்க,

“விளங்கிச்சு” என்ற பால்கனி இப்போது “சரி ப்ரோ, சரண்டர்தான ப்ரோ ஆகிட்டா போச்சு ப்ரோ, நீ வேற என் பங்காளின்னுட்ட, உனக்காக ஆகாம யார்காக ஆகப் போறேன் ப்ரோ, செஞ்சுடலாம் ப்ரோ, நீ ஒன்னும் வருத்தப்படாத, டாக்டர் குடுக்ற மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்ட்டு ரெஸ்ட் எடு, சீக்கிரம் உனக்கு ஒரு நல்ல காலம் பிறக்கும்” எனச் சொன்னவன்,

“பாவம் யார் பெத்த பிள்ளையோ த்ரில்லர் படமா பார்த்து மூள குழம்பி போச்சு போல” எனவும் முனங்க,

முழு நக்கல்தானே இது, எரிச்சல் பட வேண்டிய புலிக்காரனோ வாய்விட்டு சிரித்தவன்,

“ஆனா நீ வருவ ப்ரோ, போலீஸ்ட்ட மாட்டிக்கிறதுக்குன்னு வரத்தான் செய்வ, வர வைப்பேன்” எனும் போதும் அதில் சிரிப்பென எதுவுமில்லை.

“சின்னதா ஒரு சாம்பிள் சொல்றேன், SP சார் அங்க வந்திருப்பதே குடோன் திருட்டு கல்ப்ரிட்ட பிடிக்க, ஆனா நீ என்ன செய்திருக்க? அவர் வந்த நாள்ல இருந்து அவர் விற்க விரும்பாத குடும்ப வயல கேட்டு மிரட்டி இருக்க, அவர் வீட்டு மைனர் பொண்ண கல்யாணத்துக்கு கேட்டு டென்ஷன் கொடுத்துருக்க,

போதாத பாக்கிக்கு உன் ஆளவச்சு மொட்ட லெட்டர் எழுதி அந்த வீட்டுக்கு எதிரா சதி பண்ணி இருக்க, அதாவது மொத்தத்தில் அவர் சொந்த வாழ்க்கையில பிரச்சனை கொடுத்து ஊரவிட்டு துரத்தப் பார்த்திருக்க,

நீ என்னத நினைத்து எதை செய்தியோ? ஆனா இதெல்லாம் பார்க்க அப்படித்தானே இருக்கு? போலீஸ துரத்த பார்க்கவன திருடன்னு காமிக்க எவ்வளவு நேரம் ஆகும் செல்லம்?

இதுக்கெல்லாம் மேல லட்டு போல ஆப்பர்சுனிட்டியா அன்னைக்கு நான் வயல்க்கு வந்தப்ப SP சார் குடும்பத்த தவிர ஸ்பாட்ல இருந்த ஒரே வெளியாள் நீ மட்டும்தான். ஆக குடோன் திருடன் நீதான்னு எவ்வளவு சாட்சி கொடுக்க முடியும்னு தெரியுதா? இதெல்லாம் வெறும் சாம்பிள்தான், இன்னும் எவ்வளவோ இருக்கு என்ட்ட, அதான் சொல்றேன், நீ போலீஸ்ட்ட மாட்டிகிறதுக்குன்னே வருவ, வர வைப்பேன், see you buddy” என்றபடி இணைப்பை துண்டித்துவிட்டான்.

சற்று நேரம் பால்கனிக்கு எதுவும் ஓடவில்லை. மேலே சொன்ன விஷயங்களைத் தவிர வேணி வேறு இவன்தான் வயலுக்கு வந்த திருடனா என்று SPசாரிடமே கேட்டு வைத்திருக்கிறாள். அதுவும் காரணம் சொல்லி.

ஆக எத்தனை எளிதாக இந்த நரேன் 2 வால் இவனை மாட்டிவிட முடியும்? இந்த புலிக்காரனுக்கே இந்த விஷயங்கள் இத்தனை அபத்தமாய் கண்ணை உறுத்துகிறது என்றால் போலீசுக்கு எத்தனையாய் இவைகள் உறுத்த முடியும்?

ஆனால் எத்தனை நேரம் இப்படியே திகைத்துப் போய் நிற்க? முதல் வேலையாக மதுவிடமிருந்து போனில் அழைத்தவரை கண்டுபிடிக்க அவளது மொபைல் வேண்டும் என வாங்கிக் கொண்டு அவளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.

அடுத்தும் இவன் மனம் இந்த புல்லட் புலிக்கார நரேனிடம்தான்.

உண்மையில் வேணியை திருமணம் செய்ய இவன் வைத்திருக்கும் திட்டத்தில் இவனும் இந்த புலிக்காரனைதான் குறி வைத்திருக்கிறான் என்றால் அவனும் இவனை இலக்காக்கி இருப்பது விபரீத வினோதமாக ஏன் அமனுஷ்யமாகக் கூட தோன்றுகிறது.

ஆனால் சற்று நிதானமாக யோசிக்கும் பொது இது வெகு இயற்கை என்றும் படுகிறது, இவன் அவனை மாட்டிவிட்டு தன் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்க முடியுமென்றால், அவனும் இவனை பலியிட்டு தப்பிக் கொள்ள வழி இருக்கும்தானே!

ஆக இவனைப் பற்றி அந்த நரேன் விசாரித்திருக்கிறான், அதுவும் அளவுக்கு அதிகமாகவே!

அப்படியானால் இப்போது இவன் முந்துகிறானா அல்லது அவனா என்பதில்தான் இவனது வாழ்க்கையே நிற்கிறது என்றா நிலை?! ஆனால் இப்ப எதுக்கு அவன் ஃபோன் செய்தான்?

சும்மா கூப்ட்டு ஒருத்தன் தகவல் சொல்லிட்டு போனை வச்சுடுவானா?

ஆக இந்த அழைப்பின் நிமித்தம் இவன் எதாவது செய்யப் போய்தான் வம்பில் மாட்டுவானாக இருக்குமோ? சும்மா இருந்துக்கிறதே பாதுகாப்போ?!

கட்டைவிரலால் தன் நாடியை தேய்த்துக் கொண்டிருந்தவன் கண்ணுக்குள் செய்ய வேண்டிய விஷயங்களும், எய்ய வேண்டிய அம்பும் காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த விஷயங்களை எல்லாம் இவன் வேணியிடம் சொல்லவே போவதில்லை.

இப்படி ஒரு முடிவோடுதான் பால்கனி வேணிக்காக காத்திருந்தான். ஆனால் இவன் மட்டும் காத்திருந்தால் போதுமா? வேணி வரவே இல்லை.

அடுத்த பக்கம்