துளி தீ நீயாவாய் 16 (5)

உண்மையில் பால்கனி மதுவை தங்கை எனக் குறிப்பிட்டது வேணிக்குப் பிடிந்திருந்தது. ஒரு பெண்ணை அவள் நிறை குறைகள் தாண்டி மனிதப் பிறவியாக ஏற்பதே இங்கு பெரிய சவாலாக இருக்க, அவளை பேச்சளவிற்குத்தான் என்றாலும் உறவாகப் பிரகடனப் படுத்துவது என்பது மகாமனிதம் அல்லவா?

அந்த அவனது அணுகுமுறை மீது மரியாதை உண்டாகிறதே இவளுக்கு! இதில் இப்போதுதான் இன்னொன்றும் அவள் கவனத்திலேயே வருகிறது. பால்கனிக்கு இவளது கடந்த காலம் ஓரளவுக்கு நன்றாகவே தெரியுமே! இருந்தும் இவளை மணக்க கேட்டு வந்திருக்கிறான்! இப்பொழுதும் இதுவரையும் ஒரு முறைகூட அவன் இவளை கடந்த காலத்தைச் சுட்டிக் காட்டி குத்தியதே இல்லையே! இது இவனது அணுகுமுறை என்று இல்லை, இவனது சுபாவமே போலும் இது.

அவன் இவளை மணக்கக் கேட்டான் என்ற விஷயம் இப்போதுமே எரிச்சலூட்டுகிறதுதான் என்றாலும், கடந்தகாலம் தாண்டி இவளை அங்கீகரித்திருக்கிறான் என்ற வகையில் மரியாதை இன்னுமாய் வர்த்திக்கிறது.

இவள் மனம் இங்கு இப்படி ஓடிக் கொண்டிருக்க, “தெரியல சட்டுன்னு தங்கச்சி தம்பின்னுதான் வந்துச்சு, அப்றம் அப்படி யோசிக்கிறப்ப மனசுக்கு இன்னுமே நல்லா இருக்குது” என அவனோ அந்த பைக்காரனை தம்பி எனக் குறிப்பிட்டதையுமாக யோசித்து தன் மனநிலையைச் சொன்னான்.

இதில் வேணிக்கு அந்த பைக்காரன் நியாபகம் வர “சென்னையிலலாம் ஆஃபீஸ் வச்சுருக்கீங்களா?” என இவள் விசாரித்தது, தப்பித் தவறி கூட தங்கைப் பேச்சிலிருந்து பெண் கேட்டு வந்த சம்பவத்துக்கு உரையாடல் போய்விடக் கூடாதே என்பதற்காக மட்டும்தான்.

ஆனால் பால்கனியோ “இல்லையே!” என வெகு சாதாரணமாக பதில் சொன்னானே பார்க்கலாம்!

“அப்போ?” அதிர்ந்து போய் திரும்பினாள் இவள். “வேலை தரேன்னு ஏமாத்தப் பார்த்தியா?”

“அப்ப அந்த பேங்க் ஆஃபீசர்? அந்த இன்டர்வ்யூ?” அது இதுக்கும் மேலயும் பெரிய காதுல பூச்சுத்தலா? எவ்வளவு பெரியா ஃப்ராடா இருக்க நீ? வேலை இல்லைனு தெரியுறப்ப அந்தப் பையனுக்கு எப்படி இருக்கும்? ஏற்கனவே எலிமருந்து அது இதுன்னு சொல்லிகிட்டு இருந்தான்” இவள் கொந்தளிக்க,

“ஹேய் கூல் டவ்ண், அந்த பையன் சரின்னு சொல்லி இருந்தான்னா, அவனுக்காகவே நான் சென்னையில் ஒரு ஆஃபீஸே கூட ஓபன் பண்ணிடலாம்னுதான் நினச்சேன், இந்த ஊரவிட்டு போனா அவங்களுக்கு நல்லா இருக்கும்னு நீதான அவங்கட்ட சொன்ன? ஆனா அதுக்காக ஆஃபீஸ் ஆரம்பிக்கேன்னு சொன்னா அவனுக்கு ரொம்ப ஓவரா தோணும்ல, ஏதோ ப்ளான் பண்றோம்னு யோசிச்சுட்டான்னா என்ன செய்ய? அதான் அப்படி அங்க ஏற்கனவே என் ஆஃபீஸ் இருக்காப்ல சொல்லி வேலைக்கு வரக் கேட்டேன், ஆனா அவன் அதுக்கு சரின்னு ஒத்துக்கல, அதான் அந்த பேங்க் இன்டர்வ்யூ பத்தி சொல்றதா ஆகிட்டு.

இது கூட அவன்தான் மகா பரிசுத்தவான்னு என்ட்ட வேலை பார்க்க மாட்டேன்னுட்டானே! அதனாலதான் என் ரெக்கமென்டேஷன்ல வேலைனா ஒத்துக்க மாட்டான்னு, சும்மா இன்டர்வ்யூதான் அரேஞ்ச் செய்வாங்க, நீ நல்லா பண்ணினாதான் வேலைன்னு சொல்லி அனுப்பி இருக்கேன்,

ஆக்சுவலி நம்ம ஃப்ரெண்ட்ட சொன்னாலே போதும், இன்டர்வ்யூ வரை இவனா க்ளியர் செய்றாப்ல காமிச்சு வேலை போட்டு கொடுத்துருவார், அவனுக்கு எப்படியும் வேலை உண்டு”  என அவசர விளக்கமாய் சமாதானப் படுத்த முயன்றான் பால்கனி. வேணிக்கு இது முழு ஏற்புடையதாக இருக்கும் என.

ஆனால் அவளோ வழக்கம் போலும், ஏன் வழக்கத்தைவிடவும் அதீதமாய் இப்போது எரிந்து விழுந்தாள் “ஆக வழக்கம் போல பொய் சொல்றது, சைக்காலஜி பார்த்து திட்டம் போட்டு அடுத்தவங்கள வளச்சு நம்ம காரியத்த சாதிச்சுக்கிறதுன்ற உன் குணத்த இங்கயும் காமிச்சுட்ட” என பற்றி எரிந்தவள்,

“இதை நீ என்ட்டயும் செய்யலைன்னு நம்ப எனக்கு மண்டைல களி மண்ணு இருந்தா கூட முடியாதே!” என கொதித்து,

“இங்க பாரு நன் ஒரு போலீஸ் ஆஃபீசர் வீட்ல இருக்க பொண்ணு, என்னை நீ தனியா மீட் பண்ண ஏதேதோ காரணம் கண்டு பிடிக்க,

என் முன்னால ஒரு டைப்பான ட்ரெஸ் கோட் (dress code), பேச்சு, அதே எங்க SP சார் வீட்டாள்ங்க முன்னாலன்னா மொத்தமும் வேற மாதிரி,

சரியா சொல்லணும்னா எங்க சாரையோ அவங்க வீட்டு ஆட்களையோ நேருக்கு நேரா நீ பார்க்கிறது கூட கிடையாது.

இன்னைக்கு கூட பாரு, உண்மையில் இந்த பங்ஷன் உன்னோடது, ஆனா உன் பேரே வராத போல செய்துட்டு ரகசியமா இங்க வந்து நிக்க, அதுலயும் பவியக்காவ உன் அண்ணின்ற, ஆனா அவங்க முன்னால கூட நீ வரல, ஆனா என்னைப் பார்க்க வந்து நிக்க.

இதெல்லாம் எனக்கு எப்படி இருக்கும்?

இதுல மது வேற!

கூடவே எல்லாரையும் அவங்கவங்க சைக்காலஜிக்கு ஏத்தது போல திட்டம் போட்டு வளச்சு காரியம் சாதிச்சுக்கிற உன் குணம்.

என்னை வச்சு, என் சைக்காலஜிக்கு ஏத்தது போல திட்டம் போட்டு,  SPசார ட்ராப் பண்ண நீ ட்ரைப் பண்ணலன்னு நான் எதை வச்சு நம்ப?

உண்மையா சொல்றேன், நான் எங்க சார்ட்டயே போய்  நம்ம வயலுக்கு வந்த திருடன் இந்த பால்கனிதானான்னு கேட்டேன் தெரியுமா? அப்படி என்ன பயம் காட்டுது உன் நடவடிக்கை எல்லாம்.

SPசார் நீ அந்த திருடன் இல்லைனு சொன்ன ஒரே காரணத்தாலதான் நான் உன்ட்ட இங்க பேசிகிட்டே இருக்கேன் தெரியுமா?” வக்கீல் போல புள்ளி புள்ளியாய் பிடித்து கேட்டாள் பெண். அவன் காலரைப் பிடித்து உலுக்காதது ஒன்றுதான் பாக்கி.

இருவருமாய் நடந்து கொண்டே நடந்த இந்த உரையாடலில் ஈடுபட்டிருக்க, எப்போது பால்கனி ஸ்தம்பித்துப் போய் நின்று போனான் என சொல்வதற்கில்லை. ஒருவாறு அவளை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் அவன்.

அடுத்த பக்கம்