துளி தீ நீயாவாய் 16 (4)

இங்கு வேணியின் பார்வையை சந்தித்தப் பால்கனி அவசரப் பட்டுவிடாதே என கண்களால் சைகை காட்டி கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.

வேணிக்கோ பொறுமை பறந்து கொண்டிருக்கிறது. சுயமாவது மறுப்பாவது! தூக்கிப் போட்டு ரெண்டு சாத்து சாத்தினா என்ன?

ஏதோ மது பாவம்னு இரக்கப்பட்டா, அவளுக்கு என்னன்னா என்னமோ அவ செய்றது தியாகம் மாதிரியும், நம்பி கல்யாணம் செய்து தன் அம்மா அப்பான்னு எல்லாத்தையும் விட்டுட்டு வந்து,  குடும்பம் நடத்துற ஒரு மனைவிதான் குற்றவாளின்ற மாதிரியும் என்ன ஒரு திமிர்த்தனமான நம்பிக்கை இது?

அதுவும் இப்ப வந்துட்டு போச்சுதே அந்த அம்மால்லாம், தனக்குன்னு வேலை சம்பாத்யம்னு எதையும் யோசிக்காம, கல்யாணம் பண்ணவனுக்கு கூலி இல்லாத வேலைக்காரி போல அவனுக்கு வீட்டு வேலை செய்றதுலயே தன் மொத்த வாழ்க்கையையும் தொலச்சுட்டு, குழந்தை பெத்துக்கிறதுன்ற பேர்ல தன் ஆரோக்கியத்தையும் அழிச்சுட்டு, நாப்பது வயசுல அரை உயிரா நிக்குது. அதுல அந்தம்மா செய்றது தப்பாம், இவ செய்றது தியாகமாம்.

அதுவும் பவி மீது கோபப்பட்டதற்குத்தானே மது இதை காரணமாகச் சொல்கிறாள்! இதற்கு மேலும் இங்கு நின்றால் நாலைந்து அடியாவது இவள் கையால் மதுவுக்கு நிச்சயம் எனப் புரிய, வெடுக் என விலகி, விழா நடந்த கூடம் இருந்த திசை நோக்கி நடக்கத் துவங்கிவிட்டாள் வேணி.

“இவங்க ஒழுங்கா இருந்தா இவங்க வீட்டுக்காரங்கள்லாம் நல்லாத்தான் இருந்திருப்பாங்க, எல்லாம் இவங்களாலதான் பிரச்சனை ஆகிறதேன்னு எங்க அம்மா சொல்வாங்கக்கா, எங்க அம்மா எதையும் ப்ராக்டிகலா புரிஞ்சுக்கிற டைப்கா” என தன் உணர்வை அப்படியே வேணியும் ஆம் எனச் சொல்லி ஏற்றுக் கொள்வாள் என்ற எதிர்பார்ப்போடு பேசிக் கொண்டிருந்த மது இப்போது ‘பே’ என்ற முழியோடு புரியாமல் நின்றது.

“மது இந்த சாவிய இப்படி அழுத்தினா அங்க நிக்ற கார்ல எதுல லைட் எறியுதோ, அது நம்ம கார், அதுல உள்ள தண்ணி பாட்டில் இருக்கு, எடுத்து முகம் கழுவிட்டு, அங்க விழா நடந்துச்சே அங்க வந்து சாவிய தந்துடு” என்றபடி கார்சாவியை எடுத்து இப்போது அவசரமாய் நீட்டிய பால்கனி,

“எங்க அண்ணி அங்க வேணிக்காக காத்துட்டு இருப்பாங்க, அங்க வேணிய விட்டுட்டு முடிஞ்சா அதுக்குள்ள வந்து சாவிய வாங்கிக்கிறேன்” என்றபடி வேணியை நோக்கி கிளம்பினான்.

அந்த அவசரத்திலும் “இந்த குட்டியக்கா பேர் வேணியா? இவங்க உங்க அண்ணியோட தங்கச்சியா?” என ஒருவித நட்சத்திரம் இன்னுமாய் ஏறிக்கொண்ட சந்தோஷ ஆச்சர்யத்தோடு கண் மலர்த்தி மகிழ்ந்து கொண்டது மது.

“லேட் ஆகிட்டுன்னு அவங்க அக்கா திட்டுவாங்கன்னுதான் இப்படி ஓடுறாங்களாண்ணா?” என வேணியின் செயலுக்கு வேறு காரணம் கற்பித்தது.

சென்று கொண்டிருந்த வேணியின் காதில் இது விழ, அவள் இன்னும் ரௌத்திரமாய் திரும்புவாள்தானே! அதற்குள் பால்கனியே அவசரமாய் “எங்க பவி அண்ணிக்கு வேணின்னா உயிர், திட்டல்லாம் மாட்டாங்க, ரொம்ப நேரம் ஆகிட்டே காணோம்னு தேடுவாங்க” என விடை சொல்லி யுத்தத்தை தடை செய்தவன்,

“பவி அண்ணி ரொம்ப ரொம்ப பாசமான டைப் எல்லோர்ட்டயுமே ரொம்ப தன்மையா நடந்துப்பாங்க” எனவும் சொல்லிக் கொண்டிருக்க,

அங்கு வேணியோ “அதுவும் பவியக்காவும் அவங்க ஹஸ்பண்டும் made for each other, ஒருதர்க்காக ஒருத்தர்னு அவ்வளவு அன்பா இருப்பாங்க, அவங்களப் போய் நீ அப்படி சொல்லிட்ட” என இடையிட,

வேணி இவள் மீதுதான் கோபத்தில் இருக்கிறாள் என இப்போதுதான் கொஞ்சமாய் புரிகிறது மதுவுக்கு.

“நிஜமா ரொம்பவும் சாரிக்கா, உங்க அக்கா பத்தி தெரியாம எல்லோரும் போல அவங்களும்னு நினச்சு அப்படி பிகேவ் செய்துட்டேன், ரொம்பவும் சாரி” என மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அது, “எங்க அம்மா போல சில பாசமான லேடீஸும் இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்கா” என்றதே பார்க்கலாம் தொடர்ச்சியாய்.

அவ்வளவுதான் “நேரமாகுது வேணிமா, அண்ணி வெயிட் பண்ணுவாங்க, மது நீ அங்க போ, இப்படி கேட்ல நிக்காத” என அவசரமாய் பேச்சு வார்த்தையை முடித்து ஆளுக்கொரு திசையாய் அனுப்பிவிட்டான் பால்கனி.

இன்னொரு அடிதடிய தாங்குமா சமூகம்?!

இப்போது புஸ் புஸ் என்ற கோபத்தோடு வேணி கூடத்தைப் பார்த்து நடக்க, அவளுக்கு இணையாக நடந்த இவன் “இங்க பாரு வேணிமா, நீதான சொன்ன அவங்க அம்மா என்னத சொல்லி இந்த மதுப் பொண்ண கன்வின்ஸ் செய்து வச்சுருக்கோன்னு, அவளோட அம்மா அவளோட பலவீனம்னு தெரிஞ்ச நீயே இப்படி கோபப்பட்டா எப்படி?” என சுட்டிக் காட்ட, கொஞ்சம் ஒருவிதமாக மதுவின் நிலை இவளுக்குப் புரிகிறது.

“அவளுக்கு இருக்கதுலயே யார் ரொம்ப முக்கியமா தெரியுறாங்களோ அவங்களோட பவியண்ணிய கம்பேர் செய்றா மதுன்னு மட்டுமா யோசிப்பா, அதவிட்டுட்டு அந்த சாருமதி போல அண்ணின்னு சொல்றான்னு யோசிச்சன்னா கண்டிப்பா கடியாகும்” எனவும் பால்கனி சொல்ல,

இன்னும் கொஞ்சமாய் இறங்கி வந்தாள் வேணி. ஆமாதானே! அவளுக்கு அவ அம்மாவப் பிடிக்கும் அதனால அவ அம்மா போலன்னுட்டா அவ்வளவுதானே! என ஒருவாரு சமனப்பட்டுக் கொண்டவள்,

“என்ன சார் ரொம்பவும் விழுந்து புரண்டு உங்க தங்கச்சிக்கு சப்போர்ட் செய்றாப்ல இருக்கு?” எனக் கேட்கும் போது அவள் முகத்தில் புன்னகையின் தழுவல்கள்.

அடுத்த பக்கம்