துளி தீ நீயாவாய் 16 (3)

ஒரு கணம் என்ன செய்ய வேண்டும் என வேணிக்குப் புரியவில்லை. ஆனால் அடுத்த நொடி பவி முன்பு வெகு அவமானத்தோடு இவள் நின்றபோது பவி இவள் முகத்தை  பார்த்துவிட்டு இழுத்து அணைத்துக் கொண்டது ஞாபகம் வருகிறது இவளுக்கு.

அதில் இவள் உணர்ந்த அந்த மகா பாதுகாப்பும், நம்பிக்கையும் கூட. சரியாய் சொல்வதென்றால் அந்த நொடிதான் இவளுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கை வந்த பொழுதாகக் கூட இருக்கலாம்.

அதைத்தான் இவள் மதுவுக்கும்  செய்ய வேண்டும் என நினைக்க முடிந்தாலும், உடலோ மனமோ அதற்கு இயைய மறுக்கிறது.

காரணம் சட்டென இவள் அம்மா உட்பட யாரையும் அணைக்கும் வழக்கம் இவளுக்குக் கிடையாது. அதோடு இந்த மது பவியைப் பேசியது இன்னும் கூட இவள் மனதில்  நின்று கொண்டிருக்கிறது.

அரை நொடி போலும் இந்த உணர்வுக் கலவையில் நின்றவளுக்கு, “கடவுளே கூட சிலுவையில் தன்னைத்தானே விட்டுக் கொடுக்காம, மனுஷங்க மனம் மாறணும்னு எதிர்பார்க்கலைனா, நாமளும் சுயத்தை விட்டுக் கொடுக்காம அண்ணா மனம் மாறணும்னு எப்படி எதிர்பார்க்கன்னு கருண் கேட்கிறான்…” எனப் பவி எதையோ ப்ரவியிடம் இன்று இங்கு வரும் முன் மொபைலில் பேசிக் கொண்டிருந்ததும், இவள் வரவும் அந்தப் பேச்சு நின்று போய் “கிளம்பிட்டியா வேணி? நானும் அல்மோஸ்ட் ரெடி” என பவி திரும்பியதும் இப்போது காரணத்தோடும் காரணம் இல்லாமலும் ஞாபகத்தில் வர,

தன் சுயத்தை கொஞ்சமாய் விட்டுக் கொடுத்து கை நீட்டி மதுவை அணைத்துக் கொண்டாள் இவள். ஆனால் இந்த சுயமறுப்பெல்லாம் அந்த நொடி மட்டும்தான். இவள் அணைக்கவும் ஒரு நொடி விதிர்விதிர்த்துப் போன மது, இவளை பதிலுக்கு இறுகப் பற்றிக் கொண்டு குலுங்கலாய் ஓலமாய் ஆரம்பிக்கவுமே இவளுக்குள் இதயத்திலும், இருகண்களிலும் பொழியப் பொழிய மழை. அணைத்தல் என்பதும், அழுகின்றவள் பின் தலையை ஆதுரமாய் வருடுவது என்பதும் அதாக நடந்து கொண்டிருந்தது.

இதில் எதோ ஒரு உணர்வில் பக்கத்தில் நிற்கும் பால்கனியின் மீது இவள் பார்வையைச் செலுத்த, அவனும் முகத்தில் ஒருவித மென்மை படர இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதுவும் அந்தப் பார்வையை என்னவென்பதாம்? ஆண் பார்வை, பெண் பார்வை என்ற எல்லை தாண்டிய ஒரு மானுட வகைப் பார்வை அது. வேணிக்கு அதைப் பிடித்தது.

இதில் சற்று நேரம் குலுங்கிய மது இப்போது “எல்லாம் தெரிஞ்சும் என்னை ஏத்துகிட்டதுக்கு, என் நிலமைய புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்பவும் தேங்க்ஸ்க்கா” என கேவியபடி இவளிடமிருந்து மெல்ல விலகி, இவள் முகத்தை ஆறுதல்பட்டவளாகப் பார்த்தவள்,

“இதுல இருந்து நிஜமாவே வெளிய கூட்டிட்டு வந்துடுவீங்களாக்கா?” என அதீத ஏக்கத்தோடு கேட்க, வேணிக்கு வெகுவாக தவித்தும் போனது.

“எங்களால என்னல்லாம் முடியுதோ அதெல்லாம் செய்து கண்டிப்பா” என இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவள் பார்வை இவளை மீறி பால்கனியிடம் போக,

கூடவே பால்கனிக்கு மது விஷயம் தெரிந்துவிட்டதே என மதுவுக்கு தவிக்குமே என்றும் இருக்க, மதுவோ இவள் பார்வையின் திசையில் கவனம் திரும்பி பால்கனியைப் பார்த்தவள்,

“சட்டுன்னு தங்கச்சின்னு சொல்லிட்டீங்கண்ணா, சாகுற வரைக்கும் இத மறக்க மாட்டேன்” என்றது.

மது பால்கனியை எதிர்கொள்ளும் விதமும் வேணிக்கு ஒருவாறு நிம்மதியைத் தர, அதற்குள் பால்கனியோ ”தங்கச்சித்தான், ஆனா அதுக்காக சொத்துல பங்கெல்லாம் தர மாட்டேன், படிக்கணும்னா சொல்லு, என்னனாலும் படிக்க வைக்கிறேன்” என கிண்டல் சிரிப்போடு விளையாட்டுக்குப் போக,

வேணிக்கு கருண் பவியோடு பேசும் விதம் எங்கோ ஞாபகம் வருகிறது. ஏனோ சூழலே இலகுவாவது போல் ஒரு உணர்வு.

இத்தனை இயல்பாய் அவளை ஏற்றுக் கொண்ட பாங்கில், மிக மொத்தமும் இதற்குள் மலர்ந்து போய் விட்டாலும் மதுவோ “உங்க ஆஃபீஸ்ல எனக்கு எதாச்சும் வேலை மட்டும் போட்டுக் கொடுத்துடுங்கண்ணா, வீட்டு வாடகை, சாப்பாட்டுக்கு சம்பளம் வந்தா போதும், வாழ்க்கைக்கும் எனக்கு வேற ஒன்னும் வேண்டாம், எவ்வளவு வேலைனாலும் செய்வேன்” என விளையாட்டின்றி ஆவலும், ஆசையுமாகவே கேட்டுக் கொண்டது.

“நல்லா படிச்சு அப்றமா வேலைக்கு போக முடியாதோ? ஏன் பாசாவதே சந்தேகமோ?” என பால்கனி இதற்குமே கலாய்த்தான்.

“இல்லியே, நான் மேத்ஸ், சயின்ஸ்லலாம் எப்பவும் சென்டமாக்கும்” என இப்போது சிலிர்த்துக் கொண்டது மது.

‘சென்டமா? அது என்ன பண்டம்னு கேட்கிறவங்கட்ட போய் ஏன் மது?’ என கலாய்க்க இங்கு வேணிக்கு கூட மனதில் ஓடுகிறது இந்நேரம்.

“அஹம் அஹம் அப்படின்னா இந்த பேச்ச இதோட விட்டுருவோம், படிச்சு முடிச்சு நீ வேலைக்குப் போன பிறகா மெதுவா பேசிப்போம், ஆனா இப்ப இருந்தே நீ சேஃபா இருக்கதுக்கு என்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்துப்போம்” என பால்கனியுமே இப்போது பின் வாங்க,

மதுவுக்கோ அப்படி ஒரு புளங்காகிதம். வேணியோ வெகு நாளைக்குப் பின் ஒரு துள்ளும் மனநிலைக்கு வந்திருக்கிறாள் எனச் சொல்லிக் கொள்ளலாம்.

சட்டென இந்த நிலையில்தான் சொன்னாள் மது. அதுவும் இவளிடம்தான். “பார்த்தீங்கல்லக்கா இதான் எனக்கு இந்த கல்யாணம் ஆன லேடீஸையே பிடிக்காது” என்றாளேப் பார்க்கலாம்.

அவ்வளவுதான் விலுக்கென உடல் இறுக, தன் முஷ்டி மடக்கி தன்னை சமனப்படுத்துகிறோம் என்பதையே வேணி மெல்லத்தான் உணர்ந்தாள். இழுத்து ஒரு அறை மீண்டுமாய் கொடுக்கத் தோன்றுகிறதோ இவளுக்கு?!

அதை உணர்ந்தோ உணராமலோ “இப்படி அவ்வளவு தப்பையும் அவங்க பக்கம் வச்சுகிட்டு எங்கட்ட வந்து சண்டை போடுவாங்கக்கா, ஒருத்தில்லாம் நிஜமா ஒரு கட்டைய தூக்கிட்டு வந்து என் அம்மாவ அடி பின்னிட்டாக்கா, எங்கம்மா பாவம், குறுக்கப் போன எனக்குக் கூட அடி” என தன் நெற்றியிலிருந்த ஒரு தழும்பைக் காட்டி தன் கூற்று எத்தனை நியாயமானது என விளக்க முயன்று கொண்டிருந்தது மது.

அடுத்த பக்கம்