துளி தீ நீயாவாய் 16 (2)

“ஆன்டி, ரொம்பவும் சாரி ஆன்டி, இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு கோபப்படுறதுக்கும் உரிமை இருக்கு, உங்க வலி புரியுது, ஆனா நீங்களே சொல்லுங்க, உங்களால இத்தனைக்குப் பிறகும் உங்க வீட்டுக்காரர டிவோர்ஸ் செய்யவோ, விட்டுட்டுப் போகவோ முடியல, உங்க அன்போ இல்ல அவர்தான் உங்க வீட்டு bread winnerன்றதோ எதோ ஒரு காரணம், ஆனா மனசு வரல, அவர் இல்லாம நீங்களும் உங்க மகனுமா சுயகால்ல நிக்க முடியும்ன்ற தைரியமும் வரல, இதில் ஒரு 15 வயசு பொண்ணுக்கு வீட்டவிட்டு ஓடுற தைரியம் வரணும்னோ, இல்ல போலீஸ் க்ஷ்டேஷனுக்கு போய் தனக்குன்னு இருக்க ஒரே சொந்தமான அம்மா மேலே கேஸ் குடுக்க முடியணும்னோ எப்படி எதிர்பார்க்கிறீங்க? ஆனா இனிம நாங்க வந்துட்டோம்ல, எல்லாம் சரியாகிடும் ஆன்டி” என அதற்கு கெஞ்சல் தொனி குரலில் படர விளக்கிய வேணி,

“பைதவே அப்றம் அந்த தற்கொலை செய்றது, அதென்ன ஆன்டி ஆம்பிள மானம் மட்டும் அங்க இங்கன்னு அவன் எங்க கைய கால வச்சாலும் அவன விட்டு எங்கயும் போகாம கூடவே இருக்கும், ஆனா பொண்ணு மானம் மட்டும் அவள யாராவது என்னதாவது செய்துட்டாலே பொசுக் பொசுக்குன்னு போய்டும்? அதை காப்பாத்த அவ தற்கொலை வேற செய்யணும்?” என முடிக்கும் போது உட்சபட்ச தீவிரம் இருந்தது அவளது வார்த்தைகளில்.

கூடவே “இப்படில்லாம் பேசுறேன்றதால மது செய்றது சரின்னோ, இல்ல உங்க கோபம் ஆதங்கத்த தப்புன்னோ சொல்லல ஆன்டி, மது செய்றது தப்புதான், குற்றம்தான், உங்க ஆதங்கம் முழுக்க முழுக்க நியாயமானதும்தான், ஆனா அவ வயசுக்கு இதை கையாள முடியலைனு மட்டும்தான் சொல்றேன் ஆன்டி” என்றும் தாழ்மையாய் விளக்கினாள்.

“ஆனா சீக்கிரம் மது பக்கம் எல்லாம் சரி ஆகிடும் ஆன்டி” என ஒருவிதமாய் அழுத்தம் கொடுத்து சொல்லி முடித்தாள். ‘ஆனா உங்க கணவர் பக்கம் சரியாகிடுமா?’ என்பது போல் ஒரு மௌனக் கேள்வி அதில் எதிரொலித்தது.

“அவ எப்படி திமிரா பேசுறா பார், அவதான் ஒன்னும் தெரியாத குழந்தையா?” என இப்போதும் அந்தப் பெண்மணி எதோ ஆரம்பித்தார்தான், அதற்குள் அவர் மகன்,

“அம்மா கிளம்புமா, சொன்னாலும் சொல்லாட்டாலும் இதுல முதல்ல மாற வேண்டியது அப்பா, நீ அவரால அழுதுகிட்டு இருக்கது பத்தாதுன்னு தெருவுல வேற வந்து நிக்கணுமா?” என தன் அம்மாவை அழைத்தான்.

“அந்தப் பொண்ணு எதோ படிச்சுதான் முன்னேறப் போகுதாம், போய்ட்டு போது போ, அவளுக்கே படிச்சா விடிவு காலம் வந்துடும்னா, தப்பே செய்யாத எனக்கும் உனக்கும் வராதா? எப்படியும் சீக்கிரம் எனக்கு வேலை கிடச்சுடும், இல்ல அப்படி எதுவும் நடக்கலன்னா இருக்கவே இருக்கு எலி மருந்து” என்றபடி இப்போது தன் அம்மா கையை பற்றியும் இழுக்க,

தன் புடவை முந்தானையை வாயில் வைத்து வந்த சத்தத்தை அடக்கிக் கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தார் அந்தப் பெண்மணி.

அதே நேரம் அந்த மகன் தோளில் நட்பாய் கை வைத்தது பால்கனி.

“என் சென்னை ஆஃபீஸ்ல வேலை தர்றேன், சேர்ந்துக்கிறியா? என்ன படிச்சுருக்க?” எனவும் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

அதற்குள் அந்த மகனோ வெடுக்கென இவன் கையை தட்டிவிட்டான். மதுவை ஒரு தீ வைக்கும் பார்வை பார்த்துவிட்டு அடுத்து பால்கனியையும் பார்வையால் எரித்தான்.

’அவளுக்கு வக்காலத்து வாங்குற நீயெல்லாம் வேலை தந்து நான் செய்யவா?’ என்பது அப்பார்வையின் பொருள் என வார்த்தையின்றி புரிகிறதுதானே!

“எனக்கு அவ தங்கச்சி போலன்னா, நீ தம்பி போல, நீயும் நல்லா இருக்கணும் அவளும் நல்லா இருக்கணும்ன்றத தவிர எனக்கு இதுல வேற ஒன்னுமில்லப்பா, என்ட்ட வேலை செய்யப் பிடிக்கலைனா விடு, எனக்குத் தெரிஞ்ச பேங்க் ஆஃபீசர் ஒருத்தர் இருக்கார் சென்னைல, ப்ரைவேட் பேங்க்லதான் வேலை செய்றார், கை ரொம்பவும் சுத்தம், ரெக்கமென்டேஷன்ல வேலையெல்லாம் தரமாட்டார், ஆனா பேங்க்ல நல்லதா இன்டர்வ்யூ ஏற்பாடு செய்து தருவார். வேல கிடச்சா சம்பளம்லாம் ரொம்ப நல்லா இருக்கும், அதுக்காவது போறியா?” என்றான் பால்கனி இப்போது. தனது விசிடிங் கார்டை வேறு எடுத்து நீட்டினான்.

“நான் பேசின விதம் தப்புன்னு பட்டுதுன்னா மன்னிச்சுக்கோ, உங்க நல்லதுக்குத்தான் சொன்னேன், இத்தனை பிரச்சனைலயும் உன் அம்மா உன்ன விடலையே, அப்ப நீயும் அவங்கள கலங்காம பார்த்துக்கணும்ல, மனசுல எதையும் வச்சுக்காம நாளன்னைக்கு என் நம்பருக்கு கூப்டு” என்றும் அடுத்து அவன் சொல்ல,

இப்போது வேணியும் “நானும் எதாவது தப்பா பேசி இருந்தா சாரிண்ணா, பிரச்சனை முடியணும்றதுதான் இங்க எல்லோருக்கும் விஷயமே தவிர, உங்கள கஷ்டப்படுத்தணும்றது நோக்கமே கிடையாது” என்க,

அந்தப் பையனின் அம்மாவும் “உதவ வர்றவங்கள முறிக்காத தம்பி, எதோ நம்ம எல்லோரோட போதாத காலம் இந்த மூதேவியால நாம இப்படி தெருவுல நின்னு சண்டை போட்டுக்கணும்னு இருந்திருக்கு போல” என் மதுவின் மேல் மட்டும் கோபத்தை நிறுத்திக் கொண்டு, இவர்களை அங்கீகரிக்க,

சிரிப்பென எதுவும் இல்லை என்றாலும், இவனது கார்டை கை நீட்டி வாங்கிக் கொண்டு வண்டியை கிளப்பிக் கொண்டு போனான் அந்த மகன்.

ஏதோ அவள் உயரத்துக்கும் மேலாக எழும்பி எழும்பி அடித்துக் கொண்டிருந்த அலை ஓய்ந்தது போல் இருந்தது வேணிக்கு. கூடவே எதுவோ வெகு பாரமாகவும் மகா சோர்வாகவும்தான். திரும்பி மதுவைப் பார்க்க அவளோ மின்னல் சுட்ட புழு போல் கரிந்தும், அதிர்ந்தும், மௌன ஓலத்தின் பெண் வடிமாகவும் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தாள். அவமானமும், நிந்தையும் அவளை அறித்துப் பிடுங்கி அணு அணுவாக தின்று கொண்டிருப்பதை வேணியால் உணர முடிந்தது.

அடுத்த பக்கம்