துளி தீ நீயாவாய் 16

இப்படி தெறித்தார் போல் வந்த வேணி பள்ளி மைதானத்தின் மையப் பகுதியை அடையும் போதுதான் அந்தக் காட்சி  அவள் கண்ணில் பட்டது. மது பள்ளியின் பிரதான வாசல் அருகில் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு இடப்பக்கம் ஒரு பைக்கில் ஒரு ஆண் அமர்ந்தபடி பாதையை மறைத்திருக்க, வலப்பக்கம் சற்று தடிமனான ஒரு பெண் நின்றிருந்தார். அதுவும் ஆவேசமாய் ஏதோ பேசியபடி.

சட்டென விஷயம் புரிய பாய்ந்து போய் அவளிடம் ஓடத் துவங்கினாள் இவள். இவளுக்குப் பின்னால்தான் வந்தான் போலும் பால்கனி. இவளைத் தாண்டி முன்னால் ஓடினான் அவன்.

மதுவோ தன் ஒரு கையால் அடுத்த கையை கொக்கி போல பற்றிக் கொண்டு ஒருவாறு இறுகிப் போய் நெற்றி புடைக்க நின்றிருக்கிறாள் என்றால் வந்திருந்த பெண்மணியோ “இங்க பாரு என் புருஷன் ஆம்பிள, ஆம்பிளன்னா முன்ன பின்னதான் இருப்பான், கண்ட சாக்கடையிலும் கைய கால வைக்கத்தான் செய்வான். ஆனா நீ சின்னப் பொண்ணு, வாழ வேண்டியவ, உனக்குத்தான் தெரியணும், உண்மையச் சொல்லு அன்னைக்கு மூனு நாள் ஊட்டிக்கு அவன் கூடப் போனது நீதான?”

பெரும் சத்தமாய் அந்தப் பெண்மணி கேட்பது ஓட ஓட இவள் காதில் தெளிவாய் விழுகிறது, இதைக் காதில் கேட்க இவளுக்கே அருவருப்பாய் குமட்டிக் கொண்டு வருகிறதென்றால், பாவம் மதுவிற்கு எப்படி இருக்கும் என்று பாய்கிறது இவள் உள்ளம். கூடவே இதையெல்லாம் கூட தெருவில் வந்து நின்று பேச வேண்டியிருக்கும் அந்தப் பெண்மணியின் நிலையைக் கண்டும் பரிதாபமாக இருக்கிறது.

ஆனால் அங்கு மதுவோ “ஆமா நான்தான் போனேன், இப்ப என்ன செய்யணும்ன்ற? முடிஞ்சா உன் வீட்டுக்காரன கைய கால கட்டி வீட்ல போடு” என் அரிவாள் வெட்டாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இவளுக்கும் முன்பாக மதுவை அடைந்தது பால்கனிதான். அவனது முதல் கேள்வி அங்கு நின்றிருந்த அந்த பைக்காரனைப் பார்த்து “யார்ல நீ?” என்பதுதான்.

“இது யார்ல உங்க அம்மாவா? இப்படி தெருவுக்கு கூட்டிட்டு வந்துருக்கியே அறிவில்ல? இது இந்த சின்ன பிள்ளைக்கு மட்டுமா அசிங்கம்? உன் அம்மாவுக்கும் வலிக்காதா? உங்க அம்மாவ இங்க கூட்டிட்டு வர்றதுக்கு பதிலா இவ்வளவு வளந்திருக்கியே, உங்கப்பன் கிழவனாதான இருக்கணும்? அவன் கால தரிச்சி படுக்கையில போட வேண்டியதான? எங்க வந்து நியாயம் கேட்க வந்துட்ட?” என ஆத்திரப்பட்டான்.

கூடவே “அம்மா அது என்னமா ஆம்பிளைன்னா அங்க இங்க கால வைக்கலாம்? அப்படின்னு நீங்க உங்க பிள்ள முன்னாலயே சொல்றீங்களே, அப்பன்னா இப்படிதான் நீங்க உங்க வீட்டுக்காரனுக்காக மட்டுமில்ல, நாளைக்கு உங்க பிள்ளைக்காகவும் எங்கயோ எவளையோ தேடிப் போய் தெருவுல நிக்கணும்” என அந்தப் பெண்மணியைப் பார்த்துச் சொன்னவன்,

“இப்படி வளந்த ரெண்டு முழுத்த ஆளே உங்க வீட்டு கிழவனை அடக்கி வைக்க முடியலையே, இந்தச் சின்ன பிள்ளையா இவ அம்மாவ அடக்கிறப் போறா?  இவ அம்மா சொன்னதத்தானே இவளால செய்ய முடியும்? ஒரு பச்ச மண்ணுட்ட வந்து வீரத்தை காமிக்கீங்க” என்றும் கேட்டான்.

“இங்க பாருங்கம்மா உங்க வலி வேதனை புரியுது, ஆனா இதுல நீங்க இன்னொன்னும் புரிஞ்சிக்கணும், நீங்க எப்படி இதுல பாதிக்கப்பட்டிருக்கீங்களோ அது போலதான் இந்த பிள்ளையும் கஷ்டப்படுது” என நிலைமையைச் சொன்னவன்,

“ஏல இனி உன் அப்பன் கால் இந்த பிள்ள வீட்டுப் பக்கம் வந்துச்சோ, அந்த ஆள் கால் கூட உன்னோடதையும் சேர்த்து வெட்டிடுவேன்” என அந்த மகனை திரும்பவுமாக மிரட்டினான். “அந்தாள ஒரு ரூம்குள்ள போட்டு பூட்டி வச்சு கஞ்சி ஊத்து, ஊர்காரன்ட்ட அந்தாளுக்குப் பையத்தியம் பிடிச்சுட்டுன்னு சொல்லிடு, பிரச்சனை முடிஞ்சிடும்” இப்படி ஒரு திட்டம் வேறு கொடுத்தான்.

“அதவிட்டுட்டு ஒரு குழந்தைட்ட, அதுவும் பள்ளிகூடத்துல வந்து நியாயம் கேட்க நின்னுட்டா என்ன சரியாயிடும்?” அவன் பேசிக் கொண்டு போக,

இதுவரைக்கும் விஷயத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற வேணி “சாரிண்ணா, உண்மையில் மதுவும் உங்களப் போல பாவம், ஒரு 15 வயசுப் பொண்ணு இதையெல்லாம் அதா செய்யுமான்னு நீங்க யோசிக்கலாமில்லையா? படிப்புன்ற ஒன்னுதான் இதுல இருந்தெல்லாம் தப்பிக்க அவளுக்கு இருக்குற ஒரே வழி, அதையும் இல்லாம ஆக்குற மாதிரி நீங்க அவ ஸ்கூல் வரைக்கும் தேடி வந்துருக்கீங்கன்னதும் கோபமாகிட்டு அவங்களுக்கு” என அந்த பைக்காரனிடம் பால்கனியின் செயலுக்கு ஒரு விளக்கம் கொடுத்தவள்

“சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க வெளியூர்ல வேலை தேடிட்டு உங்க அம்மா அப்பாவையும் நீங்க கூட்டிட்டுப் போய்டலாமில்லையாண்ணா?” என்றும் வழி சொன்னாள்.

வேணி தாழ்ந்து பேசியதாலோ என்னவோ, பால்கனி எகிறும் போது எதுவும் பேசாமல் திகைத்துப் போய் நின்றிருந்த பைக்காரனின் அம்மா “என்னடி ஆளாளுக்கு எங்களுக்கு அட்வைஸ் செய்றீங்க? நாங்க எதுக்கு ஊரவிட்டு ஓடணும்? அப்படி இவளுக்கு இஷ்டம் இல்லைனா, அந்த வீட்டவிட்டு இவ ஓட வேண்டியதான? இல்ல இவ அம்மாவ போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்க வேண்டியதான? அதுவும் முடியலைனா தற்கொலை செய்துகிட்டு சாக வேண்டியதான? ஒழுக்கமான பொண்ணுனா அதைத்தான செய்வா? இந்த இஷ்டம் இல்லன்றதுல்லாம் சும்மா கதை, சம்பளம் கிம்பளம்னு எல்லாத்தையும் கொண்டு வந்து அங்க கொட்டுராரே எங்க வீட்டு மனுஷன், எங்க இருந்து இவளுகளுக்கெல்லாம் இஷ்டம் இல்லாம போக?” என இப்போது குமுறலாய் கொட்டினார்.

அடுத்த பக்கம்