துளி தீ நீயாவாய் 15 (3)

அவ்வளவுதான் இருந்த இனிமை எல்லாம் மறைய பற்றி ஏறிக் கொண்டு வந்தது வேணிக்கு. ஆனாலும் அவள் எதற்கு காரணம் இல்லாமல் இவர்களை இப்படிப் பேச வெண்டும்? தூரத்திலிருந்து பார்க்க எதையோ என்னதாகவோ யோசிக்கிறேனோ என்ற ஒரு எண்ணமும் சின்னதாய் வந்து இவள் சினத்தை மட்டுப்படுத்தியது..

இதில் மேடை நிகழ்ச்சிகள் எல்லாம் வெகு விரைவில் முடிய, இப்போது மாணவ மாணவியர் அவர்கள் விரும்பும் போட்டி மற்றும் பயிற்சிக்கு பெயர் கொடுக்க அழைக்கப்பட்டனர்.

அதற்கென தன்னார்வ ஊழியர்களாக விருப்பம் தெரிவித்து வந்திருந்த இன்னும் சில பெண்களுடன் பவியும் வேணியும் மேடையில் இருந்து இறங்கி, மாணவ மாணவியர் அமர்ந்திருந்த பகுதியில் இவர்களுக்கென குறிக்கப்பட்ட இடங்களை நோக்கிச் சென்றனர்.

சதுரங்கப் போட்டியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் பவியிடம் பெயர் கொடுக்க வேண்டும், வினாடி வினாப் போட்டிக்கு வேணி.

வேணி அவள் இயல்பின் படி பவியின் அருகிலேயே நின்று கொள்ள, விருப்பமுள்ளவர்கள் குழுவாகவோ தனியாகவோ வந்து பெயர் கொடுத்துவிட்டுச் சென்றனர். இதில் மதுவின் அருகில் இருந்த பெண்ணும் பவியிடம் பெயர் கொடுக்க வந்தாள். மதுவோ எதிலும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. சற்று தள்ளி தன் தோழிக்காகக் காத்து நின்றாள்.

வேணிக்கோ ஏமாற்றமாக இருந்தது. மது இதில் கலந்தே கொள்ளவில்லை எனில் எப்படி மதுவிடம் பேசுவது என்ற தவிப்பு அவளுக்கு. ஆக மதுவின் மீதே முக்கால் கவனத்தை வைத்தபடி வேலை செய்து கொண்டிருந்தாள்.

அப்போது பெயர் கொடுத்து முடித்த மதுவின் தோழி மதுவிடமாக சென்றவள், செல்லும் போதே “ஏய் நிஜமாவே அந்த அக்கா செம்மயா இருக்காங்க, அதுவும் அவங்க சாரி சூப்பரா இருக்கு, அந்த த்ரெட் வர்க் இருக்குதுல்ல அது நிஜ சணல் போல, அந்த வெள்ளை கலர் சாரிக்கு அந்த வர்க் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு” என பவியையும் அவளது புடவையையும் ஆராதித்துக் கொண்டே செல்ல,

மதுவின் மீதே கவனத்தை வைத்திருந்த வேணியின் காதில் இதுவும் விழுகிறது, அதற்கு மது

“ஐய, நீயும் உன் டேஸ்ட்டும் சகிக்கல, அதெல்லாம் ஒரு மூஞ்சி, அதெல்லாம் ஒரு புடவை, நீதான் மெச்சிக்கணும், கழுத கலர்ல டிசைன், வெள்ள கலர்ல ஒரு சேல, வீட்டுக்காரன் சட்டுன்னு போய் சேர்ந்துடணும்னு இப்படி தேடிப் பிடிச்சு கட்டுவா போல” என பதில் கொடுப்பதும் சேர்ந்தே விழுகிறது.

இதுதான், இதுமட்டும்தான் வேணிக்குத் தெரியும், இது எதிர்பாராமல் காதில் விழுந்திருந்தால் ஒரு வேளை அதிர்ச்சியோடு நின்று போயிருப்பாளோ என்னவோ, இவளென்றால் அப்போதிருந்தே மது இவர்களை நல்லவிதமாக காணவில்லை என்ற புரிதலில் இருக்கிறாளே, ஆக எப்போது சென்றாள் என்றே தெரியாது, பவி பதறி வந்து இவள் கையைப் பிடிக்கும் போது “சீ உனக்குன்னு போய் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தமே, கடவுள் யார எங்க வைக்கணும்னு பார்த்துதான் வைக்கிறார் போல, எங்க அக்கா என்னடி பண்ணாங்க உன்ன? எவ்வளவு இருந்தா எங்க சார இப்படி பேசுவ நீ?” என மதுவிடம் கத்திக் கொண்டிருந்தாள் அவள். அதற்கு முன்பாக மதுவின் கன்னத்தில் இரண்டு அறையை இறக்கி இருந்தாள் என்பது முக்கிய விஷயம்.

மதுவோ அடி வாங்கிய கன்னத்தில் கை வைத்தபடி மிரண்டு போய் பார்த்துக் கொண்டு நின்றது.

“அச்சோ என்ன வேணி இது?” பாய்ந்து வந்து பவியின் கையைப் பற்றி இருந்த பவியோ இப்போது வேணியின் முகம் பார்த்து விசாரிக்க, மது பேசியது பவிக்குத் தெரியாதே!

“அவ என்ன சொல்லிட்டா தெரியுமாக்கா?” எனும் போதே தாங்கமாட்டாத கோபம் வேணியின் கண்களில் அடக்க மாட்டாத கண்ணீராக வடிகிறது.

“அப்படி அந்த பொண்ணு என்ன சொல்லிச்சு?” என வேணியிடம் விசாரித்த பவி “என்னமா என்ன ஆச்சு?” என மதுவிடம் கேட்டவள், “சாரிமா ரொம்பவும் சாரி” என வேணி சார்பாக மன்னிப்பும் கேட்க,

இங்கு வேணிக்கு திரும்பவும் பொத்துக் கொண்டு வருகிறது “நீங்க ஏன்க்கா சாரி கேட்கீங்க? அவ உங்களப் பத்தி என்ன சொன்னா தெரியுமா? அவதான் சாரி கேட்கணும்” என கொதித்தாள்,

அதே நேரம் அங்கு மதுவின் புஜப்பகுதியை பற்றி சற்றாய் சுரண்டினாள் அவளது தோழி. “சாரி கேளுடி மேடம்ட்ட” என முனங்கவும் செய்தாள். மதுவும் இப்போது மெல்ல “சாரி மேடம்” என பவியைப் பார்த்து முனங்கியது. அடுத்து வேணியை ஒருவிதமாய் பார்த்துக் கொண்டு நின்றது.

பவி இப்போது வேணியைப் பார்க்க, “நான் செய்ததெல்லாம் தப்பு இல்ல, அதனால சாரில்லாம் கேட்க மாட்டேன்” என வருகிறது அவளது பதில். இதில் பவியை மட்டுமாய் அனுமதிக்காய் பார்ப்பது போல் பார்த்துவிட்டு கிளம்பிப் போகிறது மது.

இங்கு வேணிக்கோ இன்னும் இன்னும் கோபமும், கூடவே கடும் ஏமாற்றமும் அழுகையாகி அடக்க மாட்டாமல் வருகிறது. இவள் இந்த மதுவுக்காக என்னவெல்லாம் யோசித்து, எதையெல்லாம் செய்து வந்தால், என்ன மாதிரியான பெண் இந்த மது? அதுவும் பவியக்கா இவளை சாரி சொல்லச் சொல்றபடி ஆகிட்டு, இவ வேற அக்காவ எதுத்து வேற பேசியாச்சி.

இந்த களேபரம் நிகழும் முன்னே பலரும் விழா முடிந்து கலைந்து சென்றிருந்தனர் எனினும் பத்து பதினைந்து தலைகள் இன்னும் அங்கிருக்க, அனைவரும் இவர்களையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்க,

அதை தவிர்ப்பதற்காக “நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடுறேன்கா” என்றபடி அங்கிருந்து அகன்று போனாள் வேணி.

இவர்கள் இருந்த வளாகத்தைவிட்டு விறுவிறென வெளியே வந்தவள், பள்ளி மைதானத்தில் ஒரு ஓரத்தில் இருந்த நீர் தொட்டியிடம் சென்றாள். அதில் வரிசையாய் இருந்த குழாய்கள் ஒன்றில் நீர் பிடித்து முகத்தில் அடித்து அடித்து இவள் தன்னை ஆசுவாசப்படுத்த முயல,

“என்னாச்சு வேணிமா?” என்றபடி அடுத்த குழாயிடம் குனிந்தது பால்கனி.

அடுத்த பக்கம்