துளி தீ நீயாவாய் 15 (2)

ஆனால் அவள்தான் இதற்கும் முன்பாக நேற்றே SPசாரிடம் பால்கனியின் திட்டத்தை சொல்லிவிட்டாளே, ஆக அவருக்கும் இது புரிந்திருக்கும் என இவள் சாரைப் பார்க்க, அவருக்கும் புரிந்துவிட்டதன் அடையாளமாய் சாரிடமிருந்து சின்னதாக புன்னகைக் கிடைத்தது.

அதில் ஏனோ சட்டென முன்பு எப்போதையும் விட இந்தத் திட்டம் மிகப் பாதுகாப்பான ஒன்றாக, நிச்சயமாக வெற்றி பெறும் ஒன்றாக இவளுக்குத் தோன்றுகிறது.

அங்கோ ப்ரவி “பவி நீயும் வேணியுமா போய்ட்டு வாங்க, உங்களுக்கு பிடிச்சிருந்தா நீயும் வேணியும் கூட வாலண்டியர்ஸா சேர்ந்துக்கோங்க” எனச் சொல்ல,

விழாவுக்கு அழைக்க வந்திருந்தவர் ஏக மகிழ்ச்சியாகக் கிளம்பிப் போனார்.

இப்பொழுது வேணியும் பவியும் அந்த விழாவுக்குத்தான் சென்று கொண்டிருக்கின்றனர். வேணி ப்ரவியிடம் பால்கனி பற்றி பேசிவிட்டாளே தவிர இன்னும் பவியிடம் நேரடியாக அதைப் பற்றி எதையுமே வாய் திறந்திருக்கவில்லை. ஏனெனில் SP சாரிடம் போல ‘மதுவை எப்படித் தெரியும் என சொல்லமாட்டேன்’ என பவியிடம்வேறு சொல்ல வேண்டுமே! அது மிகக் கடினமான ஒன்றாகத் தோன்றியது இவளுக்கு.

தன் வாழ்க்கையின் மிகத் தாழ்வான காரியங்கள் என இவள் நினைப்பதைக் கூட பவியிடம் சொல்லி இருப்பவள் இவள், இதில் இதை மட்டும் ஏன் மறைக்கிறாள் என பவியக்காவிற்கு தோன்றுமே என்ற தடுமாற்றம் முக்கியக் காரணம்.

SP சார் எப்படியும் இவள் சொன்னதை பவியக்காவிடம் சொல்லி இருப்பார். அதனால் அதை இவள் திரும்பவும் சொல்லும் கட்டாயம் இல்லை என ஒருவாறு தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பவியுடன் காரில் அமர்ந்திருந்தாள். இவள் நிலை உணர்ந்தோ என்னவோ பவியும் அவளிடம் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் இயல்பாகவே இருக்க முடியவில்லை வேணிக்கு.

இதில் விழா ஏற்பாடாகி இருந்த மதுவின் பள்ளிக்குள் சென்றால், மேடையில் பவி அருகில் இவளை வேறு அமர்த்தியாகிவிட்டது. இவளுக்கோ உடலெல்லாம் படபடத்துக் கொண்டு வருகிறது. உள்ளங்கையோ வியர்த்து நனைந்து பிசுபிசுக்கிறது. எதிரில் இருக்கும் பார்வையாளர்கள் யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்க இயலவில்லை. மேடை பயம்.

அதற்காக தலையை குனிந்து கொண்டா அமர முடியும்? ஆக கூட்டத்தை கவனியாமல் அந்த கூடத்தின் இந்த மூலையையும் அந்த மூலையையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் இவள் பார்வையில் பட்டாள் அந்த மது. வீடியோவில் பார்த்திருக்கிறாளே! மது அந்தக் கூட்டத்தின் இறுதி வரிசைகளில் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் இருந்தது அவள் வகுப்புத் தோழியாக இருக்கும் போலும் அவளிடம் எதுவோ பேசிக் கொண்டிருந்தாள். வேணி இங்கு வந்திருப்பதே மதுவுக்காக அல்லவா? ஆக அவளைக் காணவும் ஒரு ஆவலில் அவள் மீதிருந்து பார்வையை விலக்காமல் அவளையேப் பார்க்க,

இவள் பார்வை உணர்ந்தோ என்னவோ மது அனிச்சையாக இவள் புறம் நோக்கியவள், அடுத்த நொடி ஒரு வித ஏளன எரிச்சல் முகச்சுழிவுடன் அருகில் இருந்த பெண்ணிடம் எதையோ சொல்லிக் கொண்டே பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

ஒரு மாதிரி ஆகிப் போனது வேணிக்கு. இதை வைத்து எதையும் மனதில் நினைத்துக் கொள்ளக் கூடாது, உண்மையில் மது இவளைப் பற்றி எதுவும் பேசி இருக்க வாய்ப்பே கிடையாது என எத்தனைதான் இவள் எண்ணிக்கொண்டாலும், ஒரு உறுத்தலாகவே இது மனதிற்குள் நிற்கிறது.

இதில் சின்னச் சின்ன மேடைப் பேச்சுகளுக்குப் பின் விழாவை துவக்குவதின் அடையாளமாய் பவியையும் இவளையும் விழா அமைப்பாளர் விளக்கை ஏற்றச் சொல்ல,

மேடை பயத்தில் நடுங்கும் இவள் கால்கள் ஒன்றோடு ஒன்று தட்டிக் கொண்டிருப்பதாலோ என்னவோ, முதல் எட்டிலேயே விழாவுக்கென அணிந்து வந்திருந்த காக்ரா பாவடையில் மிதித்து விழுந்து வாரப் போனாள்.

அருகிலிருந்த பவிதான் இவளைப் பிடித்துக் கொண்டது. அதுவும் “அவ்வளவா மொக்க போட்டுட்டேன்? அதுக்குள்ள தூங்கி இருக்க?” என கிண்டல் செய்துகொண்டே. ஏனெனில் அப்போதுதான் உரையாற்றி முடித்திருந்தாள் பவி.

“ஐயோ மேம் அப்படில்லாம் இல்ல, நல்லா பேசினீங்க, இது எனக்கு டென்ஷனா இருக்கு அதான்” என இழுத்து வர வைக்கப்பட்ட ஒரு சிரிப்போடு இவள் விழிக்க, முன்னெச்சரிக்கையாய் காக்ராவை வேறு சற்றாய் சுருட்டி இரு கைகளாலும் பற்றிக் கொண்டு இப்போது நடக்க,

“ரிலாக்ஸ் வேணி, கீழ இருக்கவங்களும் உன் வயசுப் பிள்ளைங்கதான், உன்னைப் போலதான் அவங்களும். அவங்களப் பார்த்து எதுக்கு டென்ஷன்?” என்றபடி உடன் வந்த பவியோ, அவளிடம் கொடுக்கப்பட்ட மெழுகுவர்த்தியால் விளக்கை ஏற்றியவள், அடுத்து அதை வேணியிடம் கொடுத்துவிட்டு, வேணி விளக்கை ஏற்ற குனிந்த போது, மேற்புறம் மட்டும் க்ளிப்பிட்டு விரித்துவிட்டிருந்ததால் முன்னால் வந்து சரிந்த வேணியின் முடியை விளக்கில் பட்டுவிடக் கூடாதென சற்றாய் கை வைத்து பிடித்துக் கொண்டாள்.

பாவடையை இப்போதும் ஒரு கையால் பற்றிக் கொண்டு விளக்கேற்றும் வேணி, பதற்றத்தில் முடியை கவனிக்காமல் விட்டுவிடக் கூடாதே என முன்னெச்சரிக்கையில் பவி செய்த ஒரு சிறு செயல்தான் இது.

ஆனால் வேணிக்கோ உச்சந்தலை தொடங்கி தண்டுவடம் வழியாய் பாய்ந்து உண்டாகிறது பாசப் பிளவு. “என் அம்மா கூட இப்படி செய்தது இல்லக்கா” உண்டாகிய உவப்பின் நீர் கண்ணில் மின்ன, அழகிய அழுகையின் அடையாளச் சிரிப்போடு அவள் பவியைப் பார்த்து அடுத்து முனங்க,

“உதபடப் போற, அம்மா முன்ன முடிய விரிச்சுப் போட்டு விளக்கேத்தி இருக்க மாட்டியா இருக்கும், மத்தபடி அவங்க என்னதெல்லாமோ செய்துதான் நீ இவ்வளவு பெருசு வந்து நிக்க” என அதற்கும் ஒரு சிரிப்பை மட்டும் கொடுத்தபடி இயல்பாய் பவி கண்டனம் சொல்ல,

ஏதோ அபிமான நட்சத்திரத்தின் முன் அசந்து போய் பார்த்துக் கொண்டிருக்கும் விசிறி நிலை ஏகினாள் வேணி. அதில் அந்நேரம் எதேச்சையாய் இவள் பார்வை அந்த மதுவின் புறம் செல்ல, அவளோ முகம் சுண்ட இவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வந்துட்டாளுங்க பாரு, ஈன்னு இளிச்சுகிட்டு” அவளது வாயசைவு இப்படித்தான் புரிந்தது இவளுக்கு இங்கிருந்து பார்க்க.

அடுத்த பக்கம்