துளி தீ நீயாவாய் 15

அடுத்து ஐந்து நாட்கள் கடந்திருந்தது. அது அதிகாலைப் பொழுது. குளியிலறையிலிருந்து ஈரம் சொட்டும் முடியோடும் அப்போதுதான் மாற்றி இருந்த உடையோடும் வெளியே வந்த பவியின் முகம் ஏறத்தாழ மின்னிக் கொண்டிருந்தது. ஒரு வகையில் பூரிப்பு, மறுவகையில் தன்னை  தானே கடிந்து கொள்ளும் வெட்கச் சிணுங்கல்.

சற்று முன்தான் அவர்கள் கூடல் முழுமையடைந்திருந்தது. அதை எண்ணுக்கையில்தான் தனக்கு எதுவும் குறைபாடு இல்லை என்ற இந்த பூரிப்பும், கூடவே ‘அட லூசே எவ்வளவு சின்ன விஷயத்துக்கு இப்படி டென்ஷனாகி, அழுது வடிஞ்சி, அவன வேற தெறிக்க விட்ருக்க என்ற ஞானக் கண்டனமும், அது தந்த வெட்க ரூபமும்.

இதே நேரம் இவளருகில் வந்த ப்ரவியோ முழு உரிமையாய் இரு கைகளாலும் அவளை இடுப்போடு வளைத்து “என்ன மேடம் பயங்கர சந்தோஷமா தெரியுது? மிஷன் அக்கம்ளிஷ்டுக்கா? அப்ப இதுக்கும் ஸ்பெஷல் ட்ரீட் தரணுமே” என்றபடி தன்னோடு சேர்க்க,

அவளோ சட்டென அவன் மார்பில் கைகள் ஊன்றி “போடா ஓடிடு, பக்கத்தில் வந்தியோ அப்றம் இருக்கு” என விலக்கித் தள்ளினாள்.

அவனது பிடியை இவள் எங்கிருந்து விலக்க? “ஏன் வாலு இது என்ன புது கேமா?” என்றபடி அவன் இதையும் அனுபவிக்க.

“கேமா? மண்டையில கொட்டிடுவேன்,  நீ மட்டும் ஜூசியா லவ் பண்ணி, ஜாலியா சைட் அடிச்சு, அமோகமா எஞ்சாய் பண்ணி கல்யாணம் செய்துருக்க? எனக்குப் பாரு? இப்ப வரை ஒரு சைட் அடிக்க கூட வாய்க்கல, இதுல கல்யாணம் ஆகி, என்னமோ ஏதோனு ஒரு டென்ஷன்லயே இதுவரைக்கும் வந்தாச்சு, இனிம எப்ப எனக்கு சைட் அடிக்க வந்து, லவ் பண்ணல்லாம் தெரியுதோ அப்றம்தான் இதெல்லாம்” அவள் நிஜமாகவே அவன் பிடியிலிருந்து விலக திமிறிக் கொண்டிருந்தாள்.

“அடப்பாவமே உனக்கு என்னப் பார்த்தா இளிச்சவாய்னு தெரியுதா?”

“இல்லையா பின்ன?” இது அவள். தன் திமிறலை நிறுத்திவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். ஒரு ஈஈஈஈஈ பாவம் வேறு.

இப்போது அவன் கீழ் உதடை இரு விரல்களால் பிடித்துக் கொண்டவள் அவன் நெற்றி முட்டி,

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ரவி எனக்கும் அந்த லவ் மட்டுமா பண்ற பீரியட், அந்த த்ரில் எல்லாம் எஞ்சாய் பண்ணணும்னு ஆசையா இருக்கு” என செல்லம் கொஞ்ச,

“உதபடப் போற நீ, நான்தான் முதல்லயே சொன்னனே, இப்ப இது வேண்டாம், இப்பதான் நீ என்ட்ட பேசவே ஆரம்பிச்சுருக்கன்னு, நீதான் பிடிவாதமா ஆனாலே ஆச்சுன்னு சொன்ன?” என அவனோ இன்னுமே வாதாடிப் பார்க்க,

“ஆன் அப்ப நீ  இன்னும் என்னை சைட் அடிக்க கூட இல்ல, இந்த லவ் மட்டுமான பீரியட்ல எஞ்சாய் பண்ண நிறைய இருக்குன்னு விலாவரியா ஞாபகபடுத்தி இருக்கணும், செய்யலதான நீ? அதவிட்டுட்டு உனக்கு ஆசை, எனக்காக மட்டும்தான் பார்க்கிறன்னு என் ஈகோவ தூண்டிவிட்டுட்ட, அதனால all is your faultதான், நான் சொல்றபடிதான் நீ கேட்கணும்” என அவளோ சிறு பிள்ளை பாவத்தில் முறுக்க,

கூடவே தொடர்ந்து “உன் பவி பாவம்ல, ஆசையா கேட்கேன்ல, சரின்னு சொல்ல மாட்டியா நீ?” என்று வேறு சரணடைய,

“ஐயோ எங்க இருந்துடா பிடிச்சாங்க இந்த பெட்ரமாக்ஸ் லைட்ட?” என தலையில் அடித்துக் கொண்டான் அவன். சரின்னு சொல்லிட்டான்னு தானே அர்த்தம்.

“ஹி ஹி உன வீட்ல இருந்துதான், உன்னைப் போல் ஒருவள். உன்னைப் போலவே லவ் பண்ணுவேன்” என்றுவிட்டுப் போனாள் அவள்.

இதில் இன்று வேணியும் பவியும் மதுவின் பள்ளிக்குப் போக வேண்டிய முதல்நாள்.

வேணி அன்று ஜவுளிக்கடையில் பால்கனியை சந்தித்துவிட்டு வரும் போது மதுவை சந்திக்கப் போகும் திட்டத்தைப் பற்றி பால்கனியிடம் எதுவும் முடிவு தெரிவித்திருக்கவில்லை. கடித விஷயத்தில் அவள் பால்கனியை சந்தேகப்பட்டது முற்றிலும் தவறாகிப் போனதாலும், அவன் மீது நம்மைப் போலதான் இவனுமோ என ஒரு இரக்கம் தோன்றி இருந்ததாலும், பால்கனியை மது விஷயத்தில் மொத்தமாய் வெட்டிவிட அவளுக்கு அப்பொழுது மனம் வரவில்லை. இவள் மதுவுக்கு உதவலாம் என்றால் அவன் ஏன் உதவக் கூடாது? என்பது இவளுக்கு.

ஆனால் அதற்காக பவி, ப்ரவியிடம் விஷயத்தை மறைத்து பால்கனியை சந்திப்பதையும் அவளால் கற்பனை செய்யக் கூட இயலவில்லை. ஆக “வீட்டுக்கு தெரியாம செய்ய எனக்கு ரொம்பவும் யோசனையா இருக்குது. கொஞ்சம் டைம் கொடு யோசிக்க” என்று மட்டும் சொல்லிவிட்டு வந்திருந்தாள்.

அதனால்தானோ என்னவோ பால்கனி அப்படி சில ஏற்பாடுகளை செய்திருந்தான். இரண்டு நாளில் செய்தித்தாளில் இந்தப் போட்டிகளை பற்றியும், அதற்குத் தேவையான தன்னார்வ ஊழியர்கள் கோரியும் முழு பக்க விளம்பரம் கொடுத்திருந்தான். அதுவும் எதையும் அவன் பெயரில் செய்யவில்லை, திருநெல்வேலியின் பிரபல புத்தக நிலையம் இந்தப் போட்டிகளை ஏற்பாடு செய்வதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு விளம்பரம் வந்த அன்றே, அந்த புத்தக நிலைய உரிமையாளர் ப்ரவியையும் பவித்ராவையும் சந்திக்க வந்துவிட்டார். இந்தத் திட்டத்திற்கு துவக்க விழா என ஒரு நாளைக் குறித்து, அன்று பவித்ரா வந்து விழாவை துவக்கி வைக்க வேண்டும் என முறையாய் அழைப்பிதழ் வைத்து அழைத்தார்.

பேச்சுவாக்கில் இந்த ஏற்பாடுகளெல்லாம் அவரே செய்யப் போவதாகவும், அதற்கான பொருளாதார தேவைகளை மட்டும் (sponsors) சிலர் விரும்பி சந்திப்பதாகவும் தெரிவித்தார். பால்கனிதான் அவரிடம் பேசி, அவரை முன்நிறுத்தி, செலவுகளை மட்டும் இவன் செய்கிறான் என புரிந்து கொள்ள முடிந்தது வேணிக்கு.

அப்படியானால் இந்த விழாவிலோ அல்லது பயிற்சி நேரங்களிலோ கூட பால்கனி வந்து நிற்கமாட்டான் போலும். ஒற்றைப் புள்ளியாய் ஒரு பாராட்டு அவனுக்காய் இவளுக்குள். இவள் பால்கனியை சந்திக்க வருவதாக பவி குடும்பத்துக்கு மட்டுமல்ல இவளுக்கே தோன்றாதிருக்க இப்படித் திட்டம் போலும்.

அடுத்த பக்கம்