துளி தீ நீயாவாய் 14(5)

“தங்கச்சிட்டயோ, பொண்ணு வீட்லயோ எங்க வந்து கால்ல விழச்சொன்னாலும் நான் விழுறேன் அண்ணாச்சி, ஆனா இதோட விட்டுருங்க” என திரும்பவும் கதற,

இங்கு வேணிக்கு அடி வயிறே அறுந்து போன நிலை. கடிதம் அனுப்பிய பெண்ணுக்கும் பையனுக்கும் ஏறத்தாழ இவள் வயதுதான் போலேயே! இவளும் இவளது அப்பாவை இப்படித்தான் கால் காலாய் தேடி விழ வைத்துவிட்டாளோ?

வேணி ஓரளவு அருகிலேயே நின்றிருந்தாலும், இதுவரைக்கும் பல்கனி இவள் அருகில் நிற்பதாய் காட்டிக்கொள்ளவே இல்லை, இப்போதும் சின்னதே சின்னதாய் பார்வையை இவள் புறமாய் திருப்பினான்.

என்ன செய்யவென கேட்கிறான் போலும். ஆனால் அவன் அசைவை உணர்ந்தார் போலும் அந்த சோலைராஜன் அவரும் இப்புறமாய் நிமிர்ந்து பார்த்தவர்,

“தங்..” என கதறியபடி எழும்ப முனைய, அதாவது அப்போதுதான் இவளை கவனித்திருக்கிறார், அதனால் இவள் காலில் விழப் போகிறார் போலும், ம்!!! என்ற  பால்கனியின் ஒற்றை எழுத்து கர்ஜனையில், அவன் அதற்கு தடை சொல்கிறான் எனப் புரிய, பின்ன இத்தன ஆட்கள் பார்த்துட்டு இருக்க, ஏதோ இவளும் வேடிக்கை பார்க்கும் ஜீவன் போல் நிற்பது என்பது எப்படி, இவள் காலிலேயே அந்த நபர் வந்து விழுந்து வைப்பது என்பது எப்படி?

அந்த சோலைராஜன் மீண்டும் பால்கனியின் காலிலேயே சரணடைந்துவிட்டார்.

இதற்கு மேல் இதைப் பார்க்க சகிக்காத வேணி, “ப்ச் அவரப் போகச் சொல்லுங்க” என உதடசையாமல் முனங்க,

“ஊட்டிலதான கிடக்கியாம்? அங்கயே இருந்துடு, அந்த மலையவிட்டு என்னைக்கு எதுக்காக நீ இறங்கினன்னு தெரிஞ்சாலும் எனக்கு எதிரா கத்தி எடுக்கன்னுதான் நினைப்பேன், போய்டு” என உறும,

தட்டுத்தடுமாறி எழுந்து கையை கும்பிட்டு கும்பிட்டு தன் கண்ணில் ஒற்றியபடி முதுகுகாட்டாமலே விந்தி கெந்தியபடி போய் காரில் ஏறினார் அந்த சோலைராஜன்.

அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக “யோவ் சோலராஜன்” என பால்கனி இப்போது அழைக்க, பதறிப் போய் திரும்பி இவனைப் பார்த்தார் அவர். “அண்ணாச்சி” என்றபடி மீண்டுமாய் இவனிடம் வர ஒரு எட்டு எடுக்க,

“இல்ல கிளம்பு” என திரும்பவும் அனுப்பிவிட்டான் பால்கனி.

இந்த நபர் பெயர்தான் சோலைராஜன் என இப்படியாய் இவளுக்கு உறுதிப் படுத்துகிறான் என வேணிக்குப் புரிகிறது.

அந்த சோலைராஜன் கார் கிளம்பிப் போகவும், வேடிக்கை பார்த்த மக்களும் கலைந்து போக, வேணியோ இதுவரை தெருப் புறத்தை பார்த்து நின்றவள், இப்போது கடையின் உட்புறம் பார்த்து நகர்ந்து கொண்டு, தன் கைப்பையில் இருந்து அந்த கடிதம் மற்றும் புகைப்படத்தை எடுத்து சுக்கு நூறாய் கிழித்துப் போட்டாள்.

அதோடு அன்று இரவு வெகுவாக யோசித்து ஒரு முடிவுக்கும் வந்தாள்.

மறுநாள் காலை அலாரம் வைத்து வழக்கத்தைவிட வெகு சீக்கிரமே எழுந்து வந்தாள் வேணி. எதிர்பார்த்தது போலவே SP சார் தனியாக அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்க,

அவருக்கும் முந்தி வருகிறது இவளது “குட்மார்னிங் சார்”

அதற்கு பதிலாக தான் வாசித்திருக்கும் செய்தித்தாளை மடித்து வைத்தபடி இவளைப் பார்த்து “குட் மார்னிங் வேணி, என்ட்ட என்ன பேசணும்?” என்றான் ப்ரவி. அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையையும் காண்பித்தான்.

இவளது குரலிலேயே இவள் நோக்கம் சாருக்குப் புரிகிறதெனவும் சற்றாய் எச்சில் விழுங்கியபடி காட்டப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்த வேணி “அது சார்” என முதலில் திக்கினாலும் அடுத்து “நம்ம வயலுக்கு வந்தானே அந்தத் திருடன், அது பால்கனியா சார்?” என தீர்மானமாகவே கேட்டுவிட்டாள். ஆம் இனி எல்லா விஷயத்திலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருந்தாளே அது அவளை இப்படிச் செய்ய வைத்தது. பாலகனியைப் பற்றி ப்ரவியிடம் பேசிவிட முடிவு செய்திருந்தாள்.

ஆனால் அதற்குள் அவள் தைரியம் கீழே போய்விட்டது, “சார் சார் இதுக்காக கோபப்பட்டுடாதீங்க சார், அடுத்து உங்கட்ட பேசவே எனக்கு பயமாயிடும், எதுனாலும் கோபமில்லாம சொல்லுங்க சார்” என படபடவென பதறப் பதற கெஞ்சினாள்.

சின்னதாய் அவனது ட்ரேட் மார்க் புன்னகை வந்து ஒட்டிக் கொள்கிறது ப்ரவியிடம்.

“இல்ல அது பால்கனி இல்ல வேணி” என நிதான திருத்தமாய் பதில் கொடுத்தான் அவன்.

“ரொம்பவும் தேங்க்ஸ் சார், இதல்லாம் நான் கேட்க கூடாது, இது டிபார்ட்மென்ட் ரகசியம் அப்படின்னுல்லாம் நிறைய இருக்குன்னு தெரியும் சார், ஆனா அவன்ட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியனுமில்லையா அதான் சார் கேட்டேன், பதில் சொன்னதுக்கு தேங்க்ஸ் சார்” என இப்போது தனது காரணத்தைச் சொன்னவள்,

“அது சார் அவன்ட்ட நான் பேசலாமா? ஏன்னா அவன் இதுவரைக்கும் மூனு தடவை என்ட்ட பேசி இருக்கான் சார், உங்களுக்கோ பவி மேம்கோ தெரியாம எதை செய்றதும் எனக்கு பிடிக்கல, சரின்னு படல” என மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டுவிட்டாள்.

இதில் ப்ரவி முகத்திலிருந்த புன்னகை காணாமல் போய் யோசனை வந்திருப்பதாய் இவளுக்குப் புரிய “கண்டிப்பா தப்பால்லாம் எதுவும் இல்ல சார்” என உறுதி கொடுத்தாள். அதற்குள் கண்ணில் நீர் கொட்டி தலை அதாக குனிந்து வைக்கிறது.

“உயிர் போனாலும் அப்படி தப்புல்லாம் செய்யவே மாட்டேன் சார்” எனும் போது அழுகை விம்மிக் கொண்டு வந்தது அவளுக்கு.

ஒருவாறு அதை அடக்கியவள் “மதுன்னு ஒரு பொண்ணு சார், ஸ்கூல் படிக்கிற பொண்ணு, அதுக்கு ஒரு பிரச்சனை, அந்தப் பொண்ணுக்கு ஹெல்ப் தேவைப்படுது, அதை இந்த பால்கனி செய்றேன்னு சொல்றான், அதைத்தான் பேசினான்” என்றவள் பால்கனி இவளுக்கு கொடுத்திருந்த மது சம்பந்தமான திட்டம் பற்றிய கடிதத்தை ப்ரவியிடம் நீட்டினாள்.

“என்னோட எதோ ஒரு காரணத்துக்காக மதுவுக்கு ஹெல்ப் கிடைக்காம போறது எனக்கு சரின்னு படலை சார்” என்றவள்,

அடுத்த பக்கம்