துளி தீ நீயாவாய் 14 (4)

அடுத்தெல்லாம் ஒன்று தட்ட அடுத்தது விழுவது போல்,

அந்த ஸ்டண்ட்லதான் இவன் கைல அடிபட்டுட்டோ?

நம்மட்ட இங்க்லீஷ், SP சார் ஆட்கள் முன்ன படிக்காதவன் போல தமிழ்னு ரெட்டை வேஷம் போடுறானோ?

அதோட அந்த பக்கமா கேஸ் எப்படி மூவ் ஆகுதுன்னு தெரிஞ்சுக்க ப்ரெசுக்கு போவேன்னு மிரட்டி விஷயம் வாங்குறானோ?

SP சாருக்கும் இவன் மேல சந்தேகம் இருக்கோ? அதான் இவன் விஷயத்தை மட்டும் நம்மட்ட கசியவிட்டு இவன நம்பாதன்னு ஹிண்ட் கொடுக்காங்களோ? என வரிசையாய் சரியத் துவங்கியது.

பால்கனி அந்தத் திருடனைப் பார்த்ததையும், அவனைத் தேடி ஓடியதையும் வேணி பார்த்திருக்கவில்லை அல்லவா, ஆக இப்படித் தோன்றிவிட்டது அவளுக்கு.

ஆனால் இதனாலெல்லாம் வர வேண்டியது அதிர்ச்சியும் பயமும் அல்லவா? அப்படி எதுவும் தோன்றாமல் அவன் மேல் பாய்ந்து சாய்கிறதே இரக்கம் ஒன்று நீள் ஆழ நதியென்று. இது காதல் என்றெல்லாம் கட்டாயமாய் இல்லை. ஆறாவது அறிவும் அடிப்படை மனிதமும் இவளுக்கு இருக்கும் வரை அப்படி ஒரு புதைகுழிக்குள் புதைந்தழிய இவளுக்கு இயலவும் செய்யாது.

இங்கு இந்த இரக்கத்தின் பிறப்பிடம் அடுக்கடுக்காய் கொடும் கொடும் குற்றமாய் செய்து வைத்திருக்கிறேனே என குமுறிக் கொண்டிருக்கும் அவளது குற்ற உணர்ச்சியே!

தான் மாபெரும் பாவி என துடித்துக் கொண்டிருக்கும் அவளது நிலைமைக்கு, அவனும் பெரிய குற்றவாளி என்றதும், என்னைப் போலத்தான் இவனுமா? என்று சாய்க்கிறது ஒன்று. இரக்கச் சுனைகள் இவள் இதயச் சுவர்களில்.

நோய்கட்டிலில் கிடப்பவனுக்கு சக நோயாளியைப் பார்க்கும் போது வரும் ஒரு வகை உணர்வு நிலை இது என எடுத்துக் கொள்ளலாம்.

சரியாய் அந்நேரம் க்ரீச்ச் என டயர் தேய கடைக்கு அருகில் வந்து நிற்கிறது ஒரு கார். அதன் கதவை திறந்து கொண்டு பாய்ந்து வந்த ஒரு வெள்ளை வேட்டி உருவம், இவளுக்கு அடுத்து நின்ற பால்கனியின் காலில் படீர் என சாஷ்டாங்கமாய் விழ,

“ஐயோ” என அலறியபடி துள்ளிப் போய் தூர நின்றாள் இவள்.

கையில், தலையில் என கட்டோடும், நொண்டிய காலோடுமாய் வந்த அந்த நபர் “அண்ணாச்சி மன்னிச்சிடுங்க அண்ணாச்சி, உங்க உப்ப தின்னவன் நான், உங்களுக்கு எதிரா எதையாச்சும் செய்வனா நான்?” என கதறிக் கொண்டு இருந்தார் பால்கனியின் காலைப் பற்றியபடி.

அன்று பால்கனி பெண் கேட்டு வந்த போது தட்டு தூக்கி வந்த நபர் என்பது மெல்லத்தான் புரிகிறது இவளுக்கு. சுற்றிலும் பார்த்தால் தெருவில் வருவோர் போவோர் அனைவரும் நின்றுபோய் இந்த காட்சியைத்தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் யாரும் அருகிலும் வரவில்லை. இவளோ கடையின் ஓரமாய் ஒண்டினாள்.

“நம்ம விசயன்ட்ட நேத்து பேசினேன் அண்ணாச்சி, பக்கத்து வயல் பிரச்சனையால உங்க கைல அடி பட்டுருக்கு, ஆனாலும் போலீஸ் கேட்கிறத செஞ்சு கொடுன்னுட்டு சும்மா போய்ட்டீங்கன்னு சொன்னாப்ல, புது SPயோ நம்ம ஆட்கள மதிச்சு எதுவும் தகவல் சொல்றதில்லைன்னும் தெரிஞ்சுது,

நீங்க பொண்ணு கேட்டு போனது பிடிக்காம அந்த SP இப்படி உங்களுக்கு எதுவும் சொல்லாம செய்யாம அவமானப் படுத்துறார், நீங்களும் அந்த பொண்ண மனசில வச்சுகிட்டு, எல்லாத்தையும் தாங்கிட்டு போறியன்னு பட்டுது, அதான் உங்க மேல அக்கறைலதான் நான் போய் வாசன் சார்ட்ட மிரட்டிட்டு வந்தேன், சத்தியமா உங்களுக்கு எதிரா எது செய்யவும் நினைக்கல அண்ணாச்சி” என குமுறிய அந்த வெள்ளை வேட்டி,

“ஆக என் மேல அக்கறைன்னு ஐஸ் வச்சுட்டு, அப்றமா என்ட்ட வந்தா அடி கம்மியா விழும்னு நினச்சுருக்க?” என பால்கனி இப்போது கேட்டதை கணக்கில்விட்டு

“அது அந்த லெட்டர் விஷயம் செய்தது நான் இல்ல அண்ணாச்சி, வீட்ல பிள்ளைங்க செய்த வேலை, இப்பல்லாம் கம்யூட்டர வச்சு எல்லாம் செய்ய முடியுமாமே, ஒரு ஆசைல செய்துட்டாங்க, மன்னிச்சு விட்டுடுங்க அண்ணாச்சி, நாங்க ஊரயே விட்டு போய்டுதோம்”  எனத் தொடர,

“ஊர்காரன் சுத்தி நின்னு பார்க்க, வந்து காலப் பிடிக்கிறியோ நாயே, உனக்கு என்னதாவது ஆச்சுன்னா என்னையதான் நினைப்பாங்கன்னு பயந்து நான் உன்ன விட்டுடுவேன்னு திட்டம் போடுற என்ன” என்றபடி பால்கனி தெருவில் நிற்போரை ஒருகணம் கண்ணை சுழற்றிப் பார்த்துக் கொண்டான்.

இப்போது மெல்ல எழுந்து கொண்ட அந்த நபர், பால்கனி காதருகில் நன்றாகவே நெருங்கி வெகு சின்ன குரலில் முனங்கினார். மற்றவர்களுக்கு கண்டிப்பாக புரியாது. ஆனால் சற்றுத் தள்ளித்தானே நிற்கிறாள் வேணி, இவளுக்கு நன்றாகவே புரிகிறது.

“என் பெரிய பொண்ணுக்கு எப்படியோ உங்க மேல இஷ்டம் போல, நீங்க பொண்ணு பார்க்கிற விஷயம் கேள்விப்படவும் அக்காவும் தம்பியுமா சேர்ந்து இப்படி செய்துருக்குங்க, SP சார இப்படி மோசம்னு வேணி தங்கச்சிட்ட காமிச்சா, அந்த பொண்ணோட பயந்த சுபாவத்துக்கு, SPசாரப் பார்த்து பயந்து போய் அவர் வீட்ட விட்டு எங்காவது ஓடிடும்னு இந்த பைத்தியங்க நினச்சுருக்கு, அதுல நடந்த குளறுபடி அண்ணாச்சி இது” என ப்ரவி ஃபோட்டோ விஷயத்துக்கு விளக்கம் சொன்னவர்,

“உங்களுக்கே தெரியும், பெரியவ இந்த வருஷம்தான் காலேஜ் போய்ருக்கா, சின்னவன் அதுக்கும் இளையவன், அதுங்க பேர வெளிய இழுத்தா, நாங்க குடும்பமா சாகுறத தவிர வழி இல்ல” என்று வாய் பொத்தி வெடித்துவிட்டு,  திரும்பவும் சாஷ்டாங்கமாய் பால்கனியின் காலில் விழுந்தார்.

அடுத்த பக்கம்