துளி தீ நீயாவாய் 14 (3)

அதுவும் “இங்க பாரு நீ எவ்வளவு ஃபெரிய ஃப்ராடு, சின்ன மீன போட்டு பெரிய மீன பிடிக்கிற காரியவாதி, பொய் சொல்றது உனக்கு எந்த அளவுக்கு தண்ணிபட்ட பாடு அப்படின்னுல்லாம் இந்தா இப்ப இந்த உன் விஜியக்காட்ட பேசினியே அதுலயே புரிஞ்சிட்டு எனக்கு, அதனால புதுசா காதுல பூ சுத்த ட்ரைப் பண்ணாம உண்மைய மட்டும் சொல்லு” என ஒரு கட்டளையும் போட்டுவிட்டு நின்றாள்.

“அடுத்தவங்கட்ட சொல்றேன்றதால உன்ட்டயும் பொய் சொல்வனா வேணிமா?” என வந்தது அவனது உடனடி பதில்.

“ஆமா கண்டிப்பா சொல்வ” என மூக்கில் குத்தும் குத்தாய் வந்தது இப்போது இவளது வெடுக். “அடுத்தவங்கட்ட நியாயமா நடக்காத எவனும் நம்மட்டயும் நியாயமா நடக்க மாட்டான்னு அடிச்சு அடிச்சு சொல்லி கொடுத்ருக்கு வாழ்க்கை” ஆதங்கத்தால் ஆக்ரமிக்கப்பட்டவளாய் ஆரம்பித்தவள், எதற்கு இவனிடம் போய் இதையெல்லாம் கொட்டிக் கொண்டு இருக்கிறோம் என நேற்றைய பொழுதில் சிந்தித்தது ஞாபகம் வர சட்டென மௌனமானாள்.

சாத்தானிடம் போய் வெட்டியாய் பேசித்தான் விளங்காமல் போனாளாம் ஏவாள்.

“எனக்கு எதுனாலும் ஆதாரம் தா, நீ சொல்றதாலயே நம்பிட என்னால முடியாது” என மட்டும் சொல்லி வைத்தாள்.

“இன்னும் விஷயம் என்னதுன்னே நீ சொல்லல” ஒரு பெருமூச்சுக்குப் பின் வந்தது அவனது வினா.

“அந்த இன்ஸ்பெக்டர் வாசன்ட்ட உன் ஆட்கள் மூலமா கம்ப்ளெய்ண்ட் கொடுத்தியா இல்லையா?” இவளும் விஷயத்துக்கு வந்தாள்.

“வாசனா? அவர்ட்ட…? இப்ப என்ன?” என தனக்குத் தானே கேட்டுக் கொண்ட பால்கனி உடனடியாய் மொபைலில் வாசனை அழைக்க, ஃபோனை ஸ்பீக்கரிலும் போட,

பரஸ்பர உற்சாக உபச்சாரங்களுக்குப் பின்

“நேத்து நம்ம பசங்க எதுவும் உங்கட்ட வந்து நின்னாங்களா என்ன?” என இவன் விசாரிக்க,

“என்ன அண்ணாச்சி, உங்க சோலராஜன்  வந்தாரே, பக்கத்து வயல்ல மர்மமா எதோ நடக்குது, உங்களுக்கு பாதுகாப்பு வேணும், இல்லனா ப்ரெசுக்குப் போவோம்னு எல்லாம் பேசினாரே, உங்களுக்கே தெரியாதா?” என அவர் பெரிதாக ஆச்சர்யப்பட்டார்.

“என்ன வாசன் சார், SP சார் எங்க வீட்ல பொண்ணெடுத்த மாப்பிள்ளைனு சொன்னனே, எதுனாலும் அவர்ட்டயே பேசிக்க மாட்டனா? இப்படியா அவர எதுத்து நான் எதுவும் செய்வேன்? இந்த சோலராஜன் இப்ப என் கூட இல்ல சார், எனக்கும் SPசாருக்கும் பிரச்சனை இழுத்து விடன்னே எதோ செய்துகிட்டு அலையுது நாய். எண்ணி இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அவன் மென்னி எலும்ப நான் உடைக்கலையாங்கும் பாருங்க. இதை இப்படியே நான் சொன்னேன்னு அவன்ட்ட சொல்லிடுங்க” என்ற செய்தியோடு பேச்சை முடித்தான் இவன்.

அடுத்ததாய் இவளிடம் திரும்பி “பாரு இது எனக்கு தெரிஞ்சே நடக்கல வேணிமா, இந்த சோலராஜன்தான் அந்த லெட்டர் அனுப்பின நாய்” என இவளிடம் அவன் காரணம் சொல்லத் துவங்க,

“எனக்குத் தேவை ஆதாரம்” என அமைதலாய் அறைதலாய் வருகிறது இவளது குறுக்கீடு. இவன் முகத்தையே பார்க்கவில்லை அவள்.

“அந்த பக்கமா அந்த சோலராஜன விட்டு இந்த வாசன் சார்ட்ட போய் எகிறச் சொல்லிட்டு, இந்தப் பக்கமா எனக்கே இது தெரியாதுன்னு அதே வாசன்ட்ட நீ சொல்லிகிட்டு இல்லைன்னு என்ன நிச்சயம்?” அதே இயந்திர குரலில் அவன் புறமே பாராமல் அடுத்துமாய் அவள் கேட்க,

தன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துவிட்டான் பால்கனி.

“எப்படி வேணி இப்படி?” என மெல்ல வருகிறது அவன் வார்த்தைகள் சில நொடிகளுக்குப் பின்பாக.

கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டமோ? என இவள் இதில் யோசிக்கத் துவங்க,

அவனோ “இதனாலயே உன்ன இன்னுமா பிடிக்குதே” என்றான் வெகு சின்ன குரலில். அதாவது தனக்குள்ளாக முனங்கினான்.

அவ்வளவுதான் “குற்றாலம் மலைல ஏறி விழுந்து சாவு” கோப கத்தலாயோ கொதிக்கும் எரிச்சலாயோ எதுவும் இல்லாமல் சாந்தம் தலைவிரித்தாட, சமாதானம் அறைந்து அறைந்து அலையடிக்க மெல்லிய குரலில் சொன்ன வேணி, வாசலை நோக்கி விறுவிறுவென நடக்கவும் துவங்கினாள்.

ஓ மை காஷ், காதுல விழுந்துட்டா? சாரி. நீ என்ன தப்பா புரிஞ்சுகிட்ட வேணிமா” இவனோ பாய்ந்து போய் அவளுக்கு முன்பாக நின்றவன்,

“ப்ளீஸ் வேணி, கல்யாணம் அது இதுன்னு பேச மாட்டேன்னு நேத்தே சொன்னேன்ல, இது ஜஸ்ட் நீ யோசிக்கிற விதத்தை அட்மயர் பண்ணேன், அவ்வளவுதான்..ப்ளீஸ்” எனவும் கெஞ்ச,

இங்கு இவளுக்கோ பளீரென எதோ ஒன்று புரிந்து கொள்கிறது. வயலில் வைத்து பால்கனியிடம் ஏதோ மாற்றம் தெரிகிறதென நினைத்தாளே அது என்னவென தெரிந்துவிட்டது இவளுக்கு.

ஓ மை காஷாம்… இப்போது மட்டுமல்ல எப்போதுமே தனிமையில் இவளிடம் படித்தவன் போல் ஆங்கிலம் கலந்து பேசுகிறான் இந்த பால்கனி. ஆனால் அடுத்தவர் முன்னிலையில் அவனது பாஷை கிராம வகைதான்.

இது உறைக்கும் இந்த முதல் நொடி கூட வித்யாசமாய் இவளுக்குள் எதுவும் இல்லைதான். ஆனால் மெல்லமாய் மின்சார வதை சுளுக்கு ஒன்று சின்னதாய் துவங்கி சூராவளியாய் துவள்கிறது இவளுக்குள்.

‘இவன்தான் ஒரு வேளை நேற்று வந்த திருடனோ?’ இவள் மனதில் சரியத் துவங்கிய முதல் செங்கல் இதுதான்.

அடுத்த பக்கம்