துளி தீ நீயாவாய் 14 (2)

இத்தனை சின்ன கடைக்கு அவன் ஏன் வந்தான்? இவளைப் பார்க்கவா? என அந்த விஜியக்காவுக்கும் இங்கு யாரும் இதை கவனித்துவிட்டால் அவர்களுக்கும் தோன்றிவிடக் கூடாது என்பதற்காக போலும் இது.

“அண்ணா அண்ணி நல்லா இருக்காங்களா? கேட்டதா சொல்லுங்க” இதை இவளிடம்தான் பேசினான்.

“ஆமான்ன? SP சார் தங்கச்சின்னா உங்களுக்கும் தங்கச்சியாகுதுல்ல? முன்னமே சொன்னீங்களே அது உங்க அண்ணி வீடுன்னு” என இப்போது ஆவலாய் விசாரித்தது அந்த விஜி அக்கா.

இத்தனை நிலையிலும் குபுக் என சிரிப்பு வருகிறது வேணிக்கு. பின்ன இவளை அவனது தங்கை என்றதும் அவனுக்குப் புரையேறுதே!

“SPசார் எனக்குத்தான் அண்ணா, இது எங்க அண்ணி தங்கச்சில்ல” ஒருவாறு அவசரமாய் அவன் விஷயத்தை தெளிவுபடுத்த முயன்றான்.

“அப்படீங்களா? இது SP சார் தங்கச்சின்னுதான் இங்கல்லாம் பேச்சு” என அந்த விஜி அக்கா இப்போது இவள் முகத்தைப் பார்க்க,

“SP சார் வீடெல்லாம் அப்படித்தான், வீட்டம்மா தங்கச்சிய தன் சொந்த தங்கச்சியாதான் பார்த்துப்பாங்க” என முடித்துவிட்டான் அவன்.

கூடவே இவர்கள் முன் துணி எடுத்துப் போட இருந்த மேஜையின் ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு புடவையை கையில் எடுத்தவன், “என்னக்கா இது 542ரூபாதானா? இந்த துணில பெரிய கடை எதுல சேலை எடுத்தாலும் 730ரூபாக்கு குறஞ்சு தர்றது இல்லக்கா” என பேச்சை திருப்பினான்.

“இப்ப எங்கப்பா நினைவுநாள் வருதுல்லக்கா, அதுக்கு நம்மட்ட வேலை செய்றவங்களுக்கு, அவங்க வீட்டாள்களுக்குன்னு கொடுக்றதுக்கு ஒரு எழுபது எம்பது சேலை தேவைப்படும்கா, உங்கட்ட ஸ்டாக் இருந்தா இதுலயே நாலஞ்சு கலர்ல தந்துடுங்களேன்” என தெளிவாய் அந்த விஜியக்காவை சீனிலிருந்து கிளப்பினான்.

“மாடிலதான் வீடு, அங்கதான் ஸ்டாக் கொஞ்சம் இருக்கு, பார்த்துட்டு இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துடுறேன் என தெறித்து ஓடியது அந்த விஜியக்கா.

இப்போது இவனும் வேணியுமாக மட்டுமாக கடையில். அதில் அவன் உடல் மொழியில், பார்வை தினுசில் உரிமை வண்ணம் அதாக அதிகரிப்பதாய் படுகிறதே! அது உண்மையா? இல்லை இவளது பய பிரமையா?

“இப்ப எப்படி இருக்க வேணி?” என கனிந்தும் தழைந்தும் வந்த அவன் ஒற்றைக் கேள்வியில் கோடி காதலும் கூடவே கெட்டி கெட்டியாய் அக்கறையும் கொட்டிக் கிடந்தது. அன்று இவள் மயங்கி விழுந்ததைக் கேட்கிறான், ஆனால் அதை வெளிப்படையாக கேட்டால் கூட இவள் எடுத்தெறிந்து பேசுவாள் என அறிந்து இதோடு நிறுத்துகிறான் என்பதுவரை வேணிக்குப் புரிகிறது.

கூடவே ‘அன்னைக்கு நீ கீழ விழுந்தத பார்த்து ரொம்பவும் கஷ்டமா போச்சு, இப்ப உன்ன பார்த்த பிறகுதான் நிம்மதியா இருக்கு’ என அவன் கண்கள் மௌனமாய் அறிவித்த செய்தியும் கூட இவளுக்கு கேட்கிறதுதான்.

ஆனால் இதற்கும் கூட இவளிடம் பதிலாய் இருப்பது கொந்தளிப்பு மட்டுமே அல்லவா? அதுவும் அவனுக்குத் தெரியும் போலும், பதில் சொல்ல இவளுக்கு அவன் வாய்ப்பே தரவில்லை.

“அந்தப் பிளான பார்த்தியா, ஓகேவா வேணி?” இன்னுமாய் ஒளி ஏற்றப்பட்ட ஒரு முகத்தோடு இப்போது இவளிடம் கேட்டான் அவன். மது விஷயமாக கேட்கிறான். இதற்கு இவளிடம் இருந்து ஆமோதிப்பான விடை வரும் என அத்தனை நம்பிக்கை போலும்.

“எதாவது சொல்லிடப் போறேன்” என இவளோ எடுத்ததும் எல்லாவற்றிற்குமாய் வெட்டினாள். ஒரு கணம் விலுக்கென நின்றிருக்க வேண்டும் அவன்.

“எங்க சார ப்ரெஸுக்கு போவேன்னு மிரட்டிட்டு, இங்க வந்து அது எங்க அண்ணி அண்ணானு ரீல் விட்டுகிட்டு இருக்க, உன்னையெல்லாம் நம்பி நீ மதுக்கு நல்லது செய்வன்னு நான் உன் பின்னால வந்தா உருப்பட்ட மாதிரிதான். நீ சொன்ன மூனு நாள் இன்னையோட முடியுது, முடிஞ்சா அந்த லெட்டர் விஷயத்ல நீ சொன்ன கதைக்கு எவிடென்ஸ் கொடு, இல்லனா போய்ட்டே இரு, அதுக்கடுத்து மதுவல்லாம் நான் எங்க சார்ட்ட சொல்லி பார்த்துப்பேன், அவளுக்கு நல்லது நடக்கணும்னு இருந்தா சாரால உதவி செய்ய முடியும்னும் இருக்கும்” சீறலாய் அவனை கொத்தி கீரிவிடும் வகையில் கடகடவென இவள் மனதிலிருந்ததைக் கொட்ட,

இப்போதும் அவனிடம் வந்திருந்தது வெறித்த பார்வை. சளைக்காமல் அவன் பார்வையைத் தாங்கி இன்னுமாய் முறைத்துக் கொண்டு நின்றாள் இவள்.

“இப்படில்லாம் உனக்கு யார் சொன்னா?” என அதே வெறித்த தொனியில் துவங்கியவன், பின் இவளிடம் முகத்தை முறிப்பதால் என்ன நன்மை என நிதானித்தான் போலும்,

“வேணிமா, என்ன விஷயம்னு ஒழுங்கா சொல்லு, ரெண்டே நிமிஷத்துல இதை நான் சரி செய்துடுறேன், ப்ரெஸ் அது இதுன்னு கண்டிப்பா எதுவோ ரொம்பவும் தப்பா உன் காதுக்கு வந்துருக்கு” என்றபடி இதற்குள் நடக்கத் துவங்கி இருந்த இவளுக்கு முன் வந்து நின்றான்.

பேச்சு வேகத்தில் அனிச்சையாய் அவன் கை இவள் முன் தடையாய் நீட்டப்பட்டிருக்க, அதிலிருந்த கட்டு இப்போதுதான் இவள் மனதில் படுகிறது. நேத்து ஒரு வேளை இவனுக்கு அடிபட்டுட்டோ, அந்த வேகத்துல எதுவும் பாதுகாப்பு கேட்டு போலீஸ்ட்ட போயிருக்கானோ?

ப்ரெஸென்றதுல்லாம் ஓவர்னாலும், அடி வாங்கினதில் கோபம் வரும்தானே! என ஒரே ஒரு புள்ளி இவளுக்குள் அவன் புறமாய் சரிய, இன்னும் கடுகடுப்பு குறையாத முகத்தோடுதான் எனிலும் அவன் சொல்வதை கேட்கும் பொருட்டு நின்றாள்.

அடுத்த பக்கம்