துளி தீ நீயாவாய் 14

ஐஜியைத் தவிர யாரிடமும் சொல்லக் கூடாத விஷயமாமே! அதை இவள் முன்னிலையில் பேசிக் கொண்டால் என்ன அர்த்தம்? வினோதமான திகில் ஒன்று வேணியப் பீடிக்கிறது. அதீதமான நம்பிக்கை என்பதும் சுமப்பதற்கரிய பாரமோ என்றது அது! இதில் இவள் எதாவது தவறு செய்து வைத்தால் என்னதற்காகும்?

கூடவே சுளீர் என வந்து துடிக்க துடிக்க வெட்டி இழுக்கிறது வலிவேதனை மின்னல் ஒன்று. இப்படித்தான், இப்படியேதான் எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் நம் மகள் நம்மை ஏமாற்ற மாட்டாள் என இவளை கண் மூடித்தனமாய் நம்பினார்களோ இவளது பெற்றோர்? அந்த நம்பிக்கையை இவள் என்ன செய்து வைத்திருக்கிறாள்? இதில்தான் கிடுகிடுவென நடுங்குகிறது இவள் தேகம்.

தன்னை எத்தனை சமாளிக்க முயன்றும் தாங்காது இவள் சரீரம் தட்ப வெப்பம் மாறி வியர்த்து வியர்த்து ஊற்ற, ஏதோ ஒரு நொடியில் மனதில் வருகிறது பவி சொன்ன வார்த்தைகள்… “ஒரு தவறு செய்துட்டோம்ன்றதுக்காக வானம், பூமி, சூரியன் நிலான்னு எல்லாம் அப்படியே நின்னு போய்டாது வேணிமா, நேத்து வந்த நிலா இன்னைக்கும் நமக்கு வருதுன்னா என்ன அர்த்தம்? வாழ்க்கை நமக்கு இன்னொரு வாய்ப்பை தருதுன்னு அர்த்தம். இந்த டைம் நீ அதை சரியா செய்வன்னு கடவுள் நம்புறார்னு அர்த்தம். அதனால இனி தவறு செய்த இடத்தில் சரியா நடந்துப்பேன்னு மட்டும் முடிவெடுத்துட்டு முன்னால என்ன இருக்குதுன்னு பார்த்து போய்ட்டே இருக்கணும். நான் நல்லவன் அப்படின்னு நினைக்கிறவனவிட நான் தவறு செய்துட்டேன் அப்படின்னு உணர்றவனுக்குத்தான் கடவுள் ரொம்பவும் பக்கத்தில் இருப்பாராம், அவன் சத்தத்துக்குத்தான் உடனே பதிலும் கொடுப்பாராம். ஏன்னா உலகத்தில் ஒரு குற்றமும் செய்யாதவங்கன்னு யாருமே கிடையாது, ஆனா அதை உணர்ந்து திருந்துறவங்கதான் matters”

அப்படின்னா SP சார் இவ மேல இந்த அளவுக்கு நம்பிக்கை வைக்கிறார்னா இவ எல்லாத்திலும் நியாயமா நடந்து காமிக்க இது ஒரு வாய்ப்புன்னு எடுத்துக்க வேண்டியதுதான். ஓரளவு நிம்மதியை தோய்த்துக் கொண்டது அவள் மனது.

ஆனால் அதே நொடி சட்டென பால்கனி சொன்ன கண்காணிப்பு விஷயம் மீண்டும் விஷமாய் வீரியமாய் வந்து  மூச்சடைக்க விம்மிக் கொண்டு நிம்மதியின்மைக்குள் வந்து வீழ்கிறது பாவை மன வயணங்கள்.

ஒரு வேளை SP சார் இவ நம்பத் தகுந்த ஆள்தானான்னு கண்டு பிடிக்கதுக்காகவே இந்த தகவல இவட்ட கசிய விட்டுருக்காரோ?

ஆமா அப்படியும் இருக்கலாம். இல்ல அப்படி மட்டும்தான் இருக்க முடியும்!

ஆனால் இதில் குத்தி கூறாகிப் போகப்பட வேண்டிய இவள் மனம் ஒருவகையில் தெம்பு சேர்த்தே இறுகிக் கொள்கிறது. அதற்கும் காரணம் பால்கனி சொன்ன ‘உன்னனா வீட்டுக்குள்ள சேர்த்திருக்கிறார், என்னனா சார் உள்ள சேர்த்துப்பாரா? அதுதான் அவருக்கு உன் மேல உள்ள நம்பிக்கையும், அக்கறையும்னு புரிஞ்சுக்கணும்’ என்ற வார்த்தைகள் ஞாபகம் வந்ததுதான்.

ஆமால! இவ கல்ப்ரிட்டோட ஆள், காஃபில விஷம் கலந்து கொடுத்து போட்டு தள்ளிடுவா, அதனால போட்ட காஃபிய குடிச்சு காமின்னுன்றது போலல்லாம் SP சார் இவள சந்தேகப்பட்டாரா என்ன? வீட்டுக்குள்ள நம்பி இவளை சேர்த்துக்கிறார்னாலே இவ மேல அடிப்படை நம்பிக்கை இருக்குதுன்னுதானே அர்த்தம். கேஸ் விஷயத்த இவ வெளிய சொல்லிடுவாளோன்றத சார் செக் பண்றார்னா, பண்ணிக்கட்டும், காரணமே இல்லாம இவள நம்புறதவிட டெஸ்ட் பண்ணி பார்த்து அடுத்து நம்பினார்னா அந்த நம்பிக்கை பலமானதா இருக்கும்தானே!

மனதின் முரட்டுத்தனத்தோடு முடிவிற்கு வந்திருந்தாள் வேணி! ஏனோ அது வெள்ளி வகை வெளிச்ச நிம்மதியையே தந்தது அவளுக்கு.

இதில் அன்றே சில மணி நேரத்தில் இவள் பால்கனியை சந்திக்கும் நிலை ஏற்பட்டதுதான் அடுத்த திருப்பம்.

அன்று சமையல் செய்யும் மல்லிகாக்கா ஊரில் இருந்து வந்திருக்கும் தன் மகளின் ஒரு வயது மகனை கூடவே தூக்கி வந்திருந்தார் இங்கு வீட்டுக்கு. கருண் காலை இவள் விழிக்கும் முன்பே கூட பெங்களூர் சென்றிருக்க, ப்ரவியும் அலுவலகம் சென்றிருக்க, அதுவும் மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவேன் எனக் கூறிச் சென்றிருக்க, அதனால் பவி இன்று எந்த வேலைக்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க, மல்லிகாக்காவின் பேரனுடன் விளையாடுவதில் கழிந்தது பவித்ராவுக்கும் வேணிக்குமான பொழுது.

இதில் வீட்டிற்கு வந்திருக்கும் குழந்தைக்கு எதாவது வாங்கி பரிசளித்து அனுப்ப ஆசைப்பட்ட பவித்ரா, இவளிடம் “நம்ம தெரு முனையில ஒரு சின்ன ஜவுளி கடையும் இருக்குதுல்ல வேணி, அங்க போய் குட்டிப் பையன் சைஸுக்கு ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்துட்டு வர்றியா? அப்படியே டாய் எதுவும் இந்த ஏஜ்க்கு செட் ஆகுற போல கிடச்சா வாங்கிட்டு வாயேன்” என கேட்க, அதற்காக அந்த ஜவுளிக் கடைக்கு வந்திருந்தாள் இவள்.

இவர்கள் வீடிருக்கும் தெரு மெயின் ரோட்டில் சந்திக்கும் இடத்தில் இருந்தது கடை. ஒரே ஒரு அறையின் அளவிலான சின்ன கடைதான் அது. அங்கு இவள் உடைகளை பார்க்கத் துவங்கிய இரண்டாம் நிமிடமெல்லாம்

“வணக்கம் விஜிக்கா” என கை கூப்பலோடு நுழைந்து கொண்டிருந்தான் அந்த பால்கனி. விஜிக்கா என்பது இங்கு கடை உரிமையாளர். அவன் குரல் காதில் விழவும் திக்கென தூக்கி அடிக்க இவள் திரும்பிப் பார்த்தாள்.

இவளைப் பார்க்கவும் மலரும் அவன் முக வகையும், அங்கு தணியும் ஏக்க மொழியும், எழும்பிக் கொள்ளும் ஆறுதல் மதிலும், இவளுக்குள் திகிலை பரப்பாமல் இல்லை. அதில் குளிர் குளிராய் ஒரு பயத் தீ பாவைக்குள் பற்றிக் கொள்ள, பாதி நொடிக்குள் அது உட்ச கோபமாய் உருவம் பெற்றிருந்தது இவளுக்குள்.

நிச்சயமாய் இவளைப் பார்க்கவென திட்டமிட்டேதான் வந்திருக்கிறான். இவள் சினந்த மனதில் இதுவும் புரிய, அவனோ வேறு கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

“நல்லதா விலை கூடினதா ஒரு துண்டும், இந்தா இந்த புடவைக்கு ப்ளவுஸ் பிட்டும் கொடுங்கக்கா” என ஒரு புடவை பெட்டியை நீட்டிக் கொண்டிருந்தான் அவன். “இந்த இவனுங்கள வச்சு வேலை வாங்குறதுக்குள்ள தாவு தீந்துடும் போல, வல்லத்தூர்ல நம்ம பய ஒருத்தன் வீடு பால்காய்க்கான் இன்னைக்கு, வழக்கமா இதுக்கெல்லாம் முத ஜவுளி நம்மட்ட இருந்துதான்கா போவும், அதுக்கு  நல்லதா புடவையும் வேஷ்டியும் எடுத்து வைன்னு சொன்னதுக்கு, என் அரவேக்காடு மேனேஜர் புடவையும் வேஷ்டி சட்டையும் மட்டுமா எடுத்து வச்சுருக்கான், ஒரு அறிவு வேண்டாம், மத்ததுல்லாம் சொன்னாதான் எடுக்கணும்னு இருந்துருக்கான் பாருங்க, இப்ப இங்க வரவும் சொல்றான், உங்க கடைய பார்க்கவும் நல்லதா போச்சுன்னு வந்தேன்” என காரணம் ஒப்பித்தபடி இவள் பக்கமாக வந்தான் அவன்.

அடுத்த பக்கம்