துளி தீ நீயாவாய் 13 (9)

றுநாள் காலையில் விழிப்பு வரும் போதே ப்ரவிக்கு கவனத்தில் வருவது படுக்கையில் அவனுக்கு அடுத்த பகுதியில் முட்டு கூட்டி மொட்டு போல அமர்ந்திருக்கும் அவன் மனைவிதான். சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். வழக்கமாக அவள் எழுந்து கொள்ளும் நேரம் இன்னும் வந்திருக்கவில்லை. அதற்குள் எழுந்து குளித்து, கிளம்பி உட்கார்ந்திருக்கிறாள். வெகு சீக்கிரம் விழிப்பு தட்டிவிட அடுத்து மனபாரத்தில் தூக்கம் வராமல் தவிப்பவள் எதை எதையோ செய்து நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறாள் என்பது இவனுக்குப் புரிகிறது.

ஒரு கை நீட்டி அவள் காலைப் பற்றி மென்மையாய் இழுத்தான் இவன். அதாவது கால் நீட்டி உட்காரச் சொல்கிறான்.

அதில்தான் இவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள். அதோடு இவன் செயலுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் கால் நீட்டி அமர்ந்தும் கொண்டாள். கூடவே “ஏன் ப்ரவி, இப்படி உட்காரக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்களா?” என்ற கேள்வியும் வருகிறது அவளிடமிருந்து.

“டாக்டர்ட்ட பேசினதே நீ மட்டும்தான்” என கண்டனமாய் அவளை ஒரு பார்வை பார்த்தவன், இதற்காகத்தான் இப்படி உட்காரச் சொன்னேன் என வார்த்தையால் எதுவும் சொல்லாமல் செயலில் விடை கொடுத்தான். சற்றாய் நகர்ந்து அவள் மடி மீது முகம் புதைத்துப் படுத்துக்கொண்டான். அதோடு தன் இரு கைகளாலும் அவள் இடுப்போடும் அணைத்துக் கொண்டான்.

எதிர்பாரா இந்நிகழ்வில் சிலீரென ஒரு கணம் அவளுக்குள் ஒன்று சிலிர்தடித்தாலும் அடுத்து அவசரமாய் வந்து விழுகிறது ஒரு அமுதநிலை. அது அவனுக்கும் புரிகின்றது.

உரிமையாய் அவள் கையை எடுத்து தன் முடி கலைக்க சொன்னவன், “எவ்ளவு நாள் ஆசை தெரியுமா இது? இப்படி ஆசை ஆசையா அனுபவிக்க என்னதெல்லாமோ இருக்க, எதையோ நினச்சு தலைய பிச்சுகிட்டு இருக்கு ஒன்னு” என்க,

“ப்ச் இதென்ன சின்ன ப்ரச்சனையா ப்ரவி சிரிச்சுகிட்டே மறந்து போறதுக்கு? ஒரு குழந்தைய அடாப்ட் செய்துக்கலாம்னு நீ பாட்டுக்கு சொல்லிட்ட? ஆனா என் இடத்துல இருந்து பாரு, நானே ஒரு அனாதை இதுல இன்னொரு…” என சொல்லிக் கொண்டு போனவள், அடுத்து எதையும் சொல்லாமல் நிறுத்திவிட்டாள்.

ஏனெனில் அவளிடம் இருந்தவன் உடல் இறுக, முஷ்டி இறுக  தன்னைத்தானே சமாளிப்பது அவளுக்குப் புரிகிறது.

“அம்மாப்பா இல்லாதவங்கல்லாம் யாருமில்லாதவங்க கிடையாது, தன்னத் தவிர யாரப் பத்தியும் யோசிக்காதவங்கதான் யாருமில்லாதவங்கன்னு நானே முன்னல்லாம் நம்புவேன் ப்ரவி, ஆனா இப்ப அப்படில்லாம் எடுத்துக்க முடியல” என இவளிடமிருந்து அவனுக்கு ஒரு காரணமும், இவள் கண்ணில் இருந்து நீரும் வருகிறது இப்போது.

இன்னமுமே “அப்ப நான் யாரு உனக்கு?“ என எகிறத்தான் தோன்றுகிறது இவனுக்கு. ஆனால் அழுகிறாளே! ஆக

“ப்ச் ஆனாலும் தயாண்ணா ஒரு வார்த்தை சொல்லிட்டான்னு அதை அப்படியே நீ மனசுல பிடிச்சுக்கணும்னு இல்ல பவிமா” என இறங்கி வந்தான் அவன். அவள் முகம் பார்த்து திரும்பிப் படுத்தான்.

“எனக்கென்னமோ உன் ஐடன்டி க்ரைசிசோ, இல்ல இப்ப இந்த இஷ்யூக்கு நீ ரியாக்ட் செய்ற விதமோ, இல்ல இப்ப நீ நடந்துக்கிற எல்லாத்துக்குமேவோ அடிப்படை காரணம் அண்ணா அன்னைக்கு பேசின பேச்சுதான்னு படுது” நேற்றைய நாளில் இவன் யோசித்ததில் புரிந்து வைத்திருப்பதைச் சொன்னான்.

“அவன் அடுத்தவங்க உன்ன குறை சொல்றாங்களேன்ற ஆதங்கத்தில் அவங்க வாய மூட வைக்கத் தெரியாம உன்னைப் பார்த்து எதோ சொல்லிட்டானே தவிர, நிஜமா அவன் உன்ன அப்படி நினச்சு பேசி இருக்கவே மாட்டான், சரி அப்படியே சொல்லிட்டான்னே வை, அவன் சொல்றதுதான் வேத வாக்கா? அதுக்கு முன்னயும் உன் அம்மாப்பா இல்லாம எத்தனையோ வருஷம் சந்தோஷமா நிறைவாத்தான இருந்த? இப்ப எங்க போனா என்னோட அந்த பவி?” என அவள் கண்களையே பார்த்தபடி பேசியவன்,

“நீ அவன் சொன்ன வார்த்தைய தாண்டி வந்தே ஆகணும் பவி” என்க,

“எனக்கு முடியலையே!” என தாங்க முடியா ஒரு இயலாமையில் தவித்தபடி வருகிறது அவளது பதில்.

இப்போது அவள் மடியிலிருந்து படுக்கைக்கு நகர்ந்து, அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டவன் “ஒரு தப்பான பேச்சுக்கு இவ்வளவு வேல்யூ கொடுக்கலாமா பவிமா?” என இதமாக வாதிட்டான்.

“எனக்கு எல்லாமே நீதான்னு சொல்லிட்டு இருக்கேன், வேணியப் பாரு நேத்து உன்னைக் காணோம்னதும் மயங்கி விழுந்துட்டு, கருணப் பாரு, அமரகுளத்த தெரியாத யார்ட்டனாலும் கேளு, அவன என் தம்பிம்பாங்களா? இல்ல உன் அண்ணம்பாங்களா? வந்த நேரத்துல இருந்து அவன் உன் கூட அதிகமா இருந்தானா, இல்ல என் கூடயா? இப்படி நாங்கல்லாம் உன்னையவே சுத்தி வரதுல்லாம் விஷயமா தெரியலையா?” என சுட்டிக் காட்டினான்.

அவளோ “என்ன செய்ய? எப்பவும் கெட்டதுக்கு இருக்க பலம் நல்லதுக்கு இல்லையே?” என தன் இடத்திலேயே நின்றாள்.

“ஒரு சொட்டு விஷம் விழுந்தாலும் ஒரு சட்டிப் பாலும் கெட்டுப் போயிடும், ஆனா ஒரு சொட்டு இல்ல ஒரு லிட்டர் பாலே ஊத்தினாலும் ஒரு சொட்டு விஷம் நல்லதாகிடாதே, கெட்டதுக்கு எப்பவும் பலம் அதிகம்” என இன்னுமொரு விளக்கம் வேறு.

“Nope, I completely disagree,  மொத்த வீடும் இருட்டா இருந்தாலும் ஒரு துளி தீ போதும், அத்தனை இருட்டையும் ஜெயிச்சு வழிகாட்டும் அது. அதுதான் நல்லதோட பலம்” என வருகிறது அவனது வாதம்.

“பைதவே விஷம்னு நாம சொல்ற விஷயங்கள கூட யூஸ் செய்ற விதத்தில யூஸ் செய்தா அது மெடிசின்” எனவும் அவன் தொடர,

“ஆமா ஆர்க்யூமென்ட்கெல்லாம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும், எங்க நீயே சொல்லேன் இப்ப எந்த தீய பிடிச்சு நான் என் இருட்டல்லாம் விரட்டன்னு” என முனங்கினாள் அவள்.

சரியாய்ச் சொல்வதென்றால் பவித்ராவை தனது ஆடு புலி ஆட்டத்தில் களமிறக்க ப்ரவி முடிவு செய்தது இந்த கணத்தில்தான்.

அடுத்த பக்கம்