துளி தீ நீயாவாய் 13 (6)

(பொதுவாக வெளிப்படையாக பேசிக் கொள்ளப்படாத ஒரு பிரச்சனையையும் அதற்கான மருத்துவ வகை தீர்வையும் சொல்லும் நோக்கில் மாத்திரமே கீழ்வரும் பகுதி எழுதப்படுகிறது. எழுத்துக்களில் 100% கண்ணியம் காக்க முயற்சிக்கிறேன். இருந்தாலும் இதை எழுதியிருக்கும் நோக்கம் புரிந்து வாசித்தால் கண்ணியக் கோடு தெளிவாகத் தெரியும் என்ற நம்பிக்கையில் முன்பே சொல்லி வைக்கிறேன்)

சற்று நேரம் வரை பவி நம்பியது போல் அருகாமையும் அன்யோன்யமும் அவளை கொண்டாடத்தான் செய்தன என்றாலும் இணைவுக்கான முதல் நொடியிலேயே அவள் உணர்ந்தது கடும் கொடூர வேதனையைத்தான்.

எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட முதல் அனுபவத்தில் வேதனை இருக்கும் என்ற ஒரு தகவல் இப்போது நியாபகம் வர, பெண்ணுக்கென இயற்கை நியமித்திருக்கும் வலிகளில் இதுவும் ஒன்று போலும், எல்லோரும் தாங்கி, தாண்டி வருவதை தானும் தாண்டிவிடலாம் என்ற ஒரு நிலையில் அவள் சமாளிக்க முனைந்தாள்.

ஆனால் நொடிகள் நிமிடங்களாகி கடக்கக் கடக்க, குறைவதற்கு பதிலாய் கொன்றெடுக்கும் வேதனை மட்டுமே அவள் முழு உலகமாய் மாறிப் போனது. அதில் எப்போது அவளை மீறி வாய்விட்டு அரற்றினாள் எனத் தெரியவில்லை.

ப்ரவியைப் பொறுத்தவரை அந்த நொடி வரைக்கும் அவள் நிலை என்ன என்பது புரியாதே இருக்க, இப்போதோ சட்டென ஆசை என்ற அனைத்தையும் நிறுத்திப் போட்டவன், தன்னவள் மீது அதீத அக்கறையிலும் கரிசனையிலுமாக அவளைத் தாங்க முனைந்தான். அவளை ஆறுதல் படுத்தவே பாய்கிறது அவன் அன்பு நெஞ்சம். மன்னிப்பு கேட்கத்தான் முதலில் வருகிறது அவனுக்கு.

“நீ என்ன பண்ணுவ இதுக்கு?” என பல்லை கடித்தபடி வந்த அவளின் வார்த்தையில்தான் அவள் வலியின் அளவும், அவள் அழுது கொண்டிருப்பதும் இவனுக்குப் புரிய இப்போது அவளைவிடவும் தவித்துப் போனது இவன்.

“ஐயோ என்னடா நீ? முதல்லயே சொல்லமாட்டியா பவிமா? இப்ப இது சரியாக என்ன செய்யணும்?” என்ற வகையில் பலதும் கேட்டு பரிதவித்தான் அவன். ஆனால் என்ன செய்ய வேண்டும் என இருவருக்கும் தெரியத்தான் இல்லை.

பவியோ சற்று நேரத்திலெல்லாம் தன்னவன் மார்போடு சென்று சுருண்டு கொண்டாள். தன்னைத்தானே ஆசுவாசப் படுத்த முயன்றாள். அப்படியே தூங்கிப் போனால் வலி தெரியாமல் போய்விடும்தானே என்றிருக்கிறது அவளுக்கு.

“சாரிடாமா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அப்றமா இதப் பத்தில்லாம் பார்த்துக்கலாம், இப்ப தூங்கு நீ, உனக்கு வேற எதாவது வேணுமா? I don’t know how to make you feel better” என்ற ரீதியில் ஏதேதோ சொல்லி அணைப்பும், நெற்றி வருடலுமாக அவளை தூக்கத்திற்குள் பத்திரப்படுத்த அவனும் முயன்று கொண்டிருந்தான்.

இதில்தான் ஒரு கணத்தில் சர்ப்பமென தலை தூக்குகிறது அப்படி ஒரு கேள்வி பவியின் மனதில். ‘கொஞ்சநாள் கழிச்சு மட்டும் இது எப்படி சரியாகிடும்?’ அதுதான் துவக்கப் புள்ளி.

அதெப்படி எல்லோருக்கும் தாங்க முடிஞ்சத இவளுக்கு மட்டும் தாங்க முடியல? பொதுவாகவே இவள் வகுப்பு சக மாணவிகளைவிட எந்த காயத்தின் வலியையும் தாங்கும் திறன் இவளுக்கு அதிகம். அப்படி இருக்க எல்லோருக்கும் இயலும் என்ற இது இவளுக்கு ஏன் இயலாமல் போகிறது?

இவளுக்கு எதுவும் உடல் ரீதியாக குறைபாடு இருக்கிறதோ? இவள் தாம்பத்ய வாழ்வுக்கு தகுதி அற்றவளோ?

இந்த ரீதியிலேயே இவள் எண்ணங்கள் ஓட, ஆகாயம் இடிந்து தலை மீது விழுந்துவிட்டது போல, அஸ்திவாரம் கழன்டு போனது போல, வெகுவாக நடுங்கியும் பதறியும் போனாள் பெண்.

இதில் தன்னவன் மார்போடு சுருண்டிருந்தவள் சற்றாய் எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, என்னவென புரியாமல் இப்போது இவளைப் பார்த்தான் அவன்.

“இல்ல ப்ரவி, கொஞ்சம் ஓவரா டென்ஷனாக்கிட்டேன் போல, எனக்கு ஒன்னுமில்ல, ஐ கேன் மேனேஜ், எல்லாருக்குமே முதல் டைம் கஷ்டமாத்தான் இருக்கும்னு கேள்விபட்டுருக்கேன்” என்ற வகையில் தொடங்கி,

இன்று இது நடந்தேறவில்லை என்றால் தான் தாம்பத்யத்துக்கு தகுதி அற்றவளோ என பயம் தன்னை வதைத்துவிடும் என்பது வரை சுட்டிக் காட்டினாள் அவள்.

இப்படி ஒரு பயம் வந்துவிட்டால் அவள் என்ன பாடுபடுவாள் என்பது ப்ரவிக்கும் புரியாமல் இல்லை, ஆக அடுத்து சற்று நேரம் அவள் மனதை சமாதானப் படுத்த முயன்று தோற்ற அவன், மீண்டுமாய் கூடல் முயற்சிக்குள் இறங்க வேண்டியதாயிற்று.

எது எப்படியோ இது நடந்தேறிவிட்டால் அவள் நிம்மதியாகிவிடுவாளே என்பது நிலை.

இம்முறை என்ன ஆனாலும் வேதனை என்ற ஒன்றை வெளிக்காட்டிவிடவே கூடாதென பவி எத்தனை நினைத்தும், இறுதியில் இவளே இரண்டாக பிளக்கப்படுவது போன்ற ஒரு வலியில் இவள் வெடித்து அழுவதில்தான் முடிவு பெற்றது செயல். இணைவு மட்டும் சாத்தியப் படவில்லை.

“நிஜமாவே உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ப்ரவி, நான் வேணும்னே உன்னை இப்படி அவாய்ட் பண்ணல்லாம் செய்யல, ஆனா நான் உனக்கும் நல்லவளா இல்ல போல, அதான் நீயும் எனக்கு வேண்டாம்னுட்டுதான் என்னை உனக்கு கல்யாணம் செய்து வச்சு இப்படி விட்டுருக்கார் கடவுள்,

ஐயோ தெய்வமே எனக்கு யாருமே இருக்க கூடாதுன்னு நினச்சுட்டீங்களா? நான் அவ்வளவு  மோசமான பொண்ணா? என்னால நல்ல மகளா இருக்க முடியாதுன்னுதான் என் அம்மா அப்பாவ நான் சின்னதா இருக்கப்பவே எடுத்துட்டீங்களா? அடுத்தும் தயாப்பாக்கும் என்னால நல்ல மகளா இருக்க முடியலன்னுதான அவர்ட்ட இருந்தும் பிரிச்சுட்டீங்க” என ஏதேதோ சொல்லி கதறிக் கொண்டிருந்தாள் அவள்.

அவளைவிடவும் அவளை நினைத்து இப்போது வெகுவாக பரிதவித்துப் போனது அவன்.

அடுத்த பக்கம்