துளி தீ நீயாவாய் 13 (4)

வந்தவன் வரவேற்பறைக்குள் கூட நுழையாமல் “ஏ கொத்துபரோட்டா கீசர் போட்டு வச்சுருக்கதான?” என விசாரித்தபடியே மாடியில் அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைக்குப் படியேறிவிட்டான்.

இவளைப் பார்க்கவும் சின்னதாய் புன்னகைத்தபடி வந்த ப்ரவியிடமும் சோர்வு இருப்பதாகத்தான் பட்டது. ஆனால் அவன் பொதுவாகவே எதையும் அத்தனை எளிதாக வெளிக்காட்டாதவன் ஆயிற்றே, ஆக இயல்பு போலவே வந்தவன், இவர்களுக்கான அறையில் நுழையும் போது, அவனோடு நடந்து கொண்டிருந்த இவளை, சட்டென இடையோடு ஒற்றைக் கையால் வளைத்து தூக்கிக் கொண்டவன், தன் காலால் அறைக் கதவை தன் பின்னால் சாத்தினான்.

அப்படியே இவளை இரு கைகளாலும் பொதிந்து “உன்னை ரொம்பவும்…” எனத் தொடங்கி அடுத்து வார்த்தையாய் எதுவும் சொல்லாமல், இன்னுமாய் இவளை இறுகச் சூழ்ந்த வகையில், இவள் கழுத்தில் முகம் புதைத்த செயலில், எத்தனையாய் இவளை சந்திக்கும் இந்த நொடிக்காக காத்திருந்திருக்கிறான் என்பதை புரிவித்தான்.

சற்றுமே எதிர்பாராத இந்த நிகழ்வில் சட்டென திக்கித்து நின்று போனாள்தான் இவள். ஆனாலும் சம்மதமே கேட்காமல் இவளது அகவெளிக்காட்டில், விடாய்த்திருந்த காயங்களில், வெப்ப பூமிகளில் உடைந்து கொட்டின ஜில்லிட்ட ஔஷத குப்பிகள்.

‘வேண்டாம் நீ’ என்ற தள்ளப்பட்ட உணர்வும், தனிமை நிலையும், கைவிடப்பட்டவள் என்ற உறுமல் ஒன்றும் அங்கிருந்து தானாக தள்ளிவிடப்பட, முழு உலகிற்கும் இவள் வேண்டாதவள் என்றாலும் ‘இவள் இவனுக்கு வேண்டும்!’ என்ற ஒன்று அறைந்தார்ப் போல் இவள் அகம் தொட்டு, இதயத்தின் அத்தனை அறைகளிலும் இடமின்றி நிரம்பிக் கொள்கிறது.

அர்த்தம் என எதையும் தேடாமல், ஆசை என எதையும் பாராமல் சரிந்து போய் தானும் அவனுக்குள் தன்னிசையாய் புதைந்தாள் பெண். வலி தொடா அரணுக்குள் இருப்பதாய் ஒரு நிலை. இவளுக்காய் இவனிருக்கிறான்! வார்த்தையின்றி ஆர்ப்பரிக்கிறது இவளது இருதயம்.

“ரொம்ப வேலையா ப்ரவி? ரொம்பவும் டயர்டா இருக்காபா?” என அவன் மீது கரிசனையாய் கனிந்தாள்.

“உன்னைப் பார்க்கவும் எல்லாம் சரியாகிட்டு” என வருகிறது அவனது பதில். “இப்ப ரொம்ப ஃப்ரெஷா இருக்கு” எனும் போது அவள் கழுத்தில் இருந்த தன் முகம் தூக்கி, அவள் ஈரக் கூந்தல், அவள் காது மடலின் பின் புறம் என அவன் இடம் தேடத் துவங்க,

“செம்ம interesting விஷயம் இன்னைக்கு கண்டு பிடிச்சோம், உன்ட்ட சொல்லணும்” என்றபடி இன்னுமாய் இவளுக்குள் இவளைத் தேடிச் சரிய, முதிராத முடிச்சொன்று தண்மையாய் தானாய் அவிழ்ந்து கொள்கிறது இவளுக்குள். திருமண மஞ்சத்தில் அசூசையென்று எதுவுமில்லை, தாம்பத்யம் என்பது பரிபூரண அருகாமை, உனக்கென நான் இருக்கிறேன் என்ற வகை அன்யோன்யம், அறிவு தாண்டிய ஆறுதல் செயல் என மெல்லமாய் மெல்லியமாய் புரிந்து வைக்கிறது.

சரியாய் இதே நேரம் கருணின் குரல் இங்கு கேட்கிறது.

ஏதோ சத்தமாய் பாடினான் அவன். குளித்துக் கொண்டிருக்கிறானாய் இருக்கும்.

“அடபாவி பங்காளி, எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டியேடா?” இடையே இப்படி ஒரு புலம்பல் வேறு.

இதில் சின்னதாய் சிரித்தபடி சற்றாய் விலகிக் கொண்டான் ப்ரவி இங்கு. இவளுக்குமே சன்னமாய் புன்னகை ஒன்று வந்தாலும் தன்னவன் கண்களை நேருக்கு நேர் தாங்கவும் ஒரு மெல்லிய தடை உள்ளுக்குள். ஆக இமைகளை மட்டும் தாழ்த்திக் கொண்டு நின்றாள்.

அதில் என்னதைக் கண்டானோ, எதிரிலிருந்தவள் பக்கவாட்டு இட நெற்றியில் மெல்லியமாய் ஒரு இதழ் தீண்டலால் அவளை இன்னுமாய் நிறைத்தவன்,  “பசில இருப்பான், சீக்கிரம் குளிச்சிட்டு வரேன், சாப்ட போவோம்” என்றபடி தங்கள் குளியலறையைப் பார்த்துப் போனான்.

அடுத்து சற்று நேரத்தில் சாப்பாட்டு நேரம் களைகட்டியது. “ப்ளீஸ் ப்ளீஸ் இன்னைக்கு டைனிங் டேபிள் வேண்டாம்டா” என கருண் கேட்க, வரவேற்பறைதான் சாப்பாட்டு ஸ்தலமானது. அமர குளத்தில் அவ்வப்போது இப்படி செய்வதுதான்.

கருணும்  பவியும் மட்டும் அத்தனை பேர் தட்டில் இருந்தும் எடுத்துச் சாப்பிடுவர். ஒரே அமர்க்களமாய் இருக்கும். இன்றும் கலகலவென சென்றதுதான் நேரம். வேணி மட்டும் வெகு சீக்கிரமே முடித்துவிட்டு “சாரி, ரொம்ப டயர்டா இருக்கு, தூங்க போகட்டுமா மேம்?” என பவியிடம் ரகசியம் போல் அனுமதி வாங்கிக் கொண்டு எழுந்து போய்விட்டாள்.

என்னதான் கருண் கிண்டலடித்தேன் எனச் சொன்னாலும், இவள் எந்நேரமும் பவியுடன் ஒண்டிக் கொண்டு அலைவது பவித்ராவின் குடும்ப வாழ்க்கைக்கு எத்தனை அசௌகரியமாய் இருக்கக் கூடும் என்று வந்திருந்த நினைவு காரணம்.

“குட் நைட்” என பொதுவாக முனங்கிவிட்டு போன அவளுக்கு, “குட் நைட் கொடுக்கு” என பதில் கொடுத்து வழி அனுப்பிய கருண், அவள் அறைக்குள் சென்று கதவை மூடவும், சாப்பாட்டு தட்டின் அருகிலேயே தரையில் கால் நீட்டி படுத்துவிட்டான். இதுக்குத்தானே தரையில உட்கர்ந்து சாப்டணும்னே கேட்கிறது.

“டேய் போலீஸ்காரா ஒழுங்கு மரியாதையா எனக்கு மசாஜ் பண்ணி விடு, உடம்பெல்லாம் ஒரே வலி. உன் டிபார்மென்ட் வேலைக்கு எனக்கு ஏன்டா ஆப்படிச்ச?” சாப்பிட்டு முடித்த ப்ரவியைப் பார்த்து அவன் கேட்க,

“பேசாம என் முதுகுல ஏறி நடந்துடேன்” என குப்புற படுத்தும் கொள்ள,

“ஐயையோ ப்ரவி குட்டி பிள்ளைங்கதான் அப்படி நடக்கலாம், நீ எதுவும் செஞ்சுடாத அப்படி” என இப்போது பதறிய பவி,

“வேணும்னா ஒன்னு செய்யலாம், உலக்க எதுவும் கிடச்சா வச்சு நாலு சாத்து சாத்து, சரியா இருக்கும்” என அடுத்த ஐடியாவை கொடுக்க,

“அடப்பாவி பொண்ணு பார்க்க போறேன்னு வந்தவன உன் வீட்டுக்காரன் புரட்டி புரட்டி எடுத்துருக்கான், அது போதாதுன்னு அடிச்சு துவைக்க வேற நீ ஐடியா குடுக்கியா? இதெல்லாம் நியாயமா? தர்மமா? அடுக்குமா?” என அதற்கு கருண் விசாரிக்க,

“சூப் கேட்டல்ல அதுக்கே கண்டிப்பா அடுக்கும், அடிக்கலாம், அடிக்கணும்” பவி இப்போது தயாப்பா இவளை தவிர்த்த விஷயத்தை இப்படியாய்ச் சொல்ல,

“ஆனாலும் சூப் செய்றது எப்படின்னு இப்ப உனக்கு தெரிஞ்சுட்டுல்ல, அதுக்காக என்னை மன்னிச்சுடலாம்” என மாரியக்கா மட்டுமாய் பேசி இருக்கிறார் என விஷயத்தைப் புரிந்து, அதற்காக இப்படி ஒரு ஆறுதலையும் இலகுவாகவே சொன்னான் கருண்.

அடுத்த பக்கம்