துளி தீ நீயாவாய் 13(3)

“நானாச்சும் பிரவாயில்ல, அவன் இன்னைக்கு என்னவிட ரெண்டு மடங்கு வேலை செய்துருக்கான், கொஞ்சம் சொல்லிவை” என ஒரு பிட் வேறு போட்டு அழைப்பை முடித்து,

“அம்மா தாயே உனக்கு செய்யத் தெரியுமா? அது தெரியாம நான் பாட்டுக்கு சொல்லிட்டேன், கஷாயம் ரேஞ்சுக்கு எதாச்சும் செஞ்சு போட்டு என்ன காலி பண்ணிடாத,  நான் எங்க வீட்டுக்கு ஒரே ஒரு கடைசிப் பையன்” என திரும்பவும் ஒரு முறை அழைத்து இப்படியும் புலம்பி,

“மாரியக்காட்ட கேட்டுக்கோ, அவங்க கிளம்ப முன்ன ஒரு கால் செய்து பேசிடு” என இவள் எதுவும் சொல்லும் முன் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவ்வளவுதான் ஆக்ரோஷமாய் அப்போதே கருணின் எண்ணை அழைத்து, “இங்க பார் உன் நாடகம், நடிப்பு, நாட்டாமை, டிராமா இதெல்லாம் இதுல வச்சுக்காத பார்த்துக்கோ” என கத்த வேண்டும் போல் வருகிறது இங்கு பவித்ராவுக்கு.

இது சூப் விஷயமே கிடையாது, தயாப்பாவிடம் பேச வைக்க இவன் போடும் நாடகம் என சட்டென புரிகிறதே இவளுக்கு. மாரியக்காவிடம் பேச வேண்டுமாமே, வீட்டில் வேலை செய்யும் அவரா வந்து ஃபோன் இணைப்பை ஏற்பார்? தயாப்பாதானே எடுத்துப் பேசுவார்? அதை வைத்து இவனுக்கு இப்படி திட்டம் வருகிறது போலும். இவளுக்கு ப்ரவியோடு திருமணம் என அவர் முடித்ததோடு சரி இன்னும் ஒரு வார்த்தை அவர் இவளிடம் பேசி இருக்கவில்லை. திருமணமும் முடித்து, தனிக்குடித்தனம் வைக்கவென இங்குவரை வந்தும் போயிருக்கிறார். எல்லாவற்றையும் ஒன்றுக்கு ரெண்டு மடங்காய் செய்து எதிலும் குறைவைக்கவில்லைதான், ஆனால் இன்னும் நேருக்கு நேராய் இவள் முகம் பார்க்கவில்லை அவர். இதில் இப்போது இவள் அழைத்துப் பேச வேண்டுமாம்!

கூர் வகை கோபம் ஒரு பக்கம், கூடவே எனக்கென யாருமே இல்லையே! என்ற வகை தாங்க இயலா தனிமை உணர்வு ஒருபக்கம், சட்டென இவளை சமாளிக்க இயலாவண்ணம் தத்தளிக்க வைக்கிறது.

ஆனால் சமையலறையில் இவள் நிற்க, இரவு உணவை தயாரித்துக் கொண்டிருக்கும் சமையலாளும், வேணியும் அங்குமிங்குமாயும் அருகிலேயே இருக்க, பல்லைக் கடித்து மௌனம் காத்தபடி தன் அறைக்குப் போனாள் பவித்ரா.

ஆனாலும் போகும் வழியிலேயே தயாப்பா வீட்டில் எப்போதுமே காலை முதல் இரவு முடிய வயல் வேலை இருக்கும் நாட்களில் இந்த ஆட்டுக் கால் சூப் சாயந்தரமே செய்யத் துவக்கப்படும் என்று நியாபகம் வருகிறது.

அங்கும் விவசாயம் உண்டுதானே, இப்படி வயலிலிருந்து இரவு வீட்டுக்கு வரவும் குளித்துவிட்டு இந்த சூப்பை குடித்துவிட்டுதான் சாப்பாடே நடக்கும். கருண் எல்லாம் சாப்பிட்ட இடத்திலேயே அன்று சுருண்டுவிடுவான். ஏனோ இதைக் குடித்தால் மறுநாளே உடல்வலி எதுவுமே இருக்காது, இல்லையெனில் ரெண்டு மூன்று நாளாவது வலி இருக்கும் என்று சொல்வதுண்டு.

சரி கருண் எதற்காக இப்போது கேட்டால் என்ன? இது அவனுக்குப் பிடித்த விஷயம், அதோடு இன்றில்லை என்றாலும் இவள் முயன்று தயாப்பாவிடம் பேசித்தானே ஆக வேண்டும். ப்ரவியிடம் நேற்று பேசிய போது தெளிவாக இது புரிந்ததே! அதை இன்றே இதிலேயே துவக்கினால் என்ன? திருமணம் முடிவான அந்த நாளிலிருந்து இவளும்தானே பேசவில்லை! இப்படியாயும் தளும்புகிறது இவள் மனம்.

இந்த வகை முடிவுக்கு வந்தவள் அடுத்து ஒரு பெருமூச்செடுத்துக் கொண்டு அமரகுளம் வீட்டு எண்ணை அழைத்தாள்.

நான்காவது ரிங்கில் இணைப்பு ஏற்கப்படும் போதே இவளுக்குத் தெரியும் அது தாயாப்பா என. அவர் அறையிலிருந்து இங்கு வந்து சேர இவ்வளவு நேரம்தான் ஆகும் எப்போதுமே! இங்கு இவளுக்கு எத்தனை அடக்கியும் ஒரு புறம் பதறிக் கொண்டு வருகிறது என்றால் மறுபுறம் அழுதுவிடுவோமோ என்றும் இருக்கிறது.

முழு மொத்தமாய் தன் கழுத்தை நெறிக்காத குறையாய் தன்னைத்தானே நெறுக்கி இறுக்கி இவள் முயன்று வருவித்த ஒரு இயல்பு போன குரலில் “ஹலோ என்க, அதற்குள் இவளையும் மீறி இங்கு கண்ணில் உடைப்பெடுக்க, அங்கோ மறுமுனையில் முழு மௌனம் மற்றும் நிசப்தம்.

“ஹ..ஹலோ… நான் பவி பேசுறேன்…” இவள் சொல்லி முடிக்கவும்,

“ஏய் மாரி, பவி ஏதோ உன்ட்ட கேட்கணுமாம்” என்றபடி தயாப்பா ஃபோனை மாரியக்காவிடம் கொடுத்துவிட்டு போயேவிட்டார்.

அடக்கமாட்டாமல் வெடித்துக் கொண்டு வருகிறது இவளுக்கு.

நெஞ்செல்லாம் வலிக்க அதை சற்றும் காட்டிவிட முடியாத நிலையில் மாரியக்காவிடம் எப்படி பேசி முடித்தாள் இவள் எனத் தெரியவில்லை. அடுத்து சற்று நேரம் தன்னறை படுக்கையில் கிடந்து அழுகையில் வெடித்தாள்.

ஆக அன்று பேசிய அவர் வார்த்தைகள் வெறும் கோபம் என்று இல்லை. இன்னுமே ஒரு இம்மியளவு கூட இவளை உறவென நினைக்க அவருக்கு விருப்பம் இல்லைதானே! என்னதெல்லாமோ இவளுக்குள் குத்திக் குதறி கொந்தளிக்கிறது.

சற்று நேரம் இவள் விழுந்து கிடக்க “நான் கிளம்புறேன், மேடத்துட்ட சொல்லிடு” என வேணியிடம் சொல்லிவிட்டு சமையலாள் கிளம்பும் சத்தம் காதில் விழுகிறது.

‘இப்போ அழுது என்ன ஆகிடப் போகுது, கருண் கேட்ட சூப்பையாவது வைப்போமே’ என இவளுக்கு இதில் மனம் திரும்ப, எழுந்து போய் அந்தப் பெண்ணிடம் சூப் வைக்கத் தேவையானவைகளை அருகில் இருக்கும் கடையில் வாங்கித் தந்துவிட்டு கிளம்பும்படி கேட்டுக் கொண்டாள் பவி.

அடுத்து இவள் பொழுதுகள் எல்லாம் வேலையில் கழிந்து போக, இருந்த வேர்வை கசகசப்புக்கும் மனநிலைக்கும் இவள் மீண்டுமாய் தலைக்கு குளித்து ஈரம் சொட்ட சொட்ட நிற்கும் போது வந்து சேர்ந்தனர் ப்ரவியும் கருணும்.

“மம்மி என் கை காலல்லாம் அடிச்சு நொருக்கிட்டான் இந்தா இவன்” என ப்ரவியின் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்தபடி நடக்க மாட்டாமல் நடப்பது போல் வந்த கருணிடம் முழு சோர்வு இருந்தது.

அடுத்த பக்கம்