துளி தீ நீயாவாய் 13 (2)

அவன் வேணியை கையில் அள்ளிய காட்சி ஏனோ திரும்பத் திரும்ப இவன் கைகளில் அமிலத்தை அள்ளி அள்ளிக் கொட்டியது. அது முதலுதவி என முழுக்கவும் தெரிந்தாலும் இவனுக்குள் ஏக உட்சமாய் இயலாமை. இவனுக்கில்லையோ இனி இவனது வேணி?

உண்மையில் அந்த புல்லட்காரன் “புரியும்னு நினைக்கிறேன், யார் செத்தாலும் நாற மட்டும்தான் செய்யும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதை காதில் வாங்கும்  அளவு அருகில் வந்துவிட்டான் இந்த பால்கனி.

“உன் family members இருக்கிற இங்க வரைக்கும் நான் வர்றேன்னா, அவங்கள என்ன வரைக்கும் என்னால செய்ய முடியும்னு யோசிப்பன்னு நம்புறேன் தல” என்று அந்த கறுப்பு உடைக்காரன் சொல்லிவிட்டு போகும் போதெல்லாம் இவனுக்குத் தெளிவாகவே அது காதில் விழுந்தது. அடுத்து அந்த கிரிமினலைத் தேடி ப்ரவி புகைக்குள் ஓட, இவனும் கூட தேடி ஓடினான்தான்.

அதே நேரம் கருணும் வந்து சேர, புகையில் கருணை குத்து மதிப்பாய் யூகித்து “என்னது கிணறு எதுவும் தோண்டுறீங்களா?” என விசாரித்தான் இவன்.

ப்ரவி ஒரு போலீஸ், இது அவன் அலுவல் சார்ந்த பிரச்சனை, ஆக ப்ரவி இந்த மிரட்டலை இவனிடம் தெரிவிப்பானோ இல்லையோ? ஆக தனக்குத் தெரிந்தது போல் ஏன் காட்டிக் கொள்ள வேண்டும் என்று இவன் நினைத்தது காரணம்.

இத்தனைக்கும் இதயத்துக்குள்ளோ அந்த புல்லட்காரனை இழுத்துப் போட்டு இரண்டாய் கிழித்தெறியும் வெறி இவனுக்குள்.

ஆனால் இப்போது அது எதுவும் மனதில் இல்லை, வேணியை ஏந்திய கருணின் கைகளும், பவியின் கழுத்தைக் கட்டிய வேணியை பார்த்திருந்த கருணின் உருவமும்தான் இவன் மனக் கண்ணில் வந்து குதறியபடி நின்றது.

கருணுக்கு வேணியைப் பிடிக்கிறது. இந்த வேணி இப்படிப் போய் அந்த பவி அண்ணியிடம் அப்பினால் அண்ணனோடு நல்ல உறவு வேண்டும் என நினைக்கும் எந்த தம்பிக்குத்தான் இந்த காட்சி பிடிக்காது? கருணுக்கு எப்படி இந்த வேணியைப் பிடிக்காமல் போகும்?

கருண் வேணியைப் பெண் கேட்டால் உடனடியாகவே திருமணம் நடந்துவிடுமோ? இப்படியாய் ஏடாகூடமாய் நர்த்தனம் ஆடியது நாராய் நூலாய் பிரிந்திருந்த இவன் இதயம்.

பிய்த்தெறிகிறது இவனை கடும் இயலாமை.

வந்த வேகத்தில் தன் வயலில் நுழைந்தவன் முதலில் எதிர்ப்பட்ட மரத்தில் முஷ்டி மடக்கி ஓங்கி ஒன்று வைத்தான் பார்க்க வேண்டுமே! அசுர வேகம்! அதே போல் அடுத்தும் ஒன்று. அதில் தன் கையில் ரத்தம் வடிகிறது என்பதே மெல்லத்தான் இவனுக்குப் புரிகிறது.

சின்னதாய் கூட எதையும் முகத்தில் காட்டாமல் அப்படியே போய் நின்றான் இவனது சூளை மேனேஜர் விசயனிடம்.

“பக்கத்து வயல்ல எதோ கள்ளப் பய வந்து பாமெல்லாம் வெடிச்சுட்டு போறான், தேடி வர்ற போலீஸ் இங்க வந்து என்னத செய்யச் சொல்லி கேட்டாலும் நின்னு செஞ்சு கொடு, என்னை எதுக்கும் தொந்தரவு செய்யாத, ஃபோன கூட எடுக்க மாட்டேன்” என்றுவிட்டு நகர,

இதில் ‘பே’ என நின்றிருந்த அந்த விசயன் “அண்ணாச்சி, பாம் அது இதுன்றிய, நம்ம வயல்தான் சுத்திலும் இருக்கு, இதுல நீங்க வேற ஃபோன் எடுக்கலன்னா போலீஸ் வீணா நம்மள சந்தேகப்படுமே” என தலையைச் சொறிய,

“பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்கல்லாம் இருக்கிய வேலைக்கு?” என இதில் சுள்ளென ஏறிய பால்கனி பின் சம்பந்தமற்ற கோபத்தை சம்பந்தமில்லா இடத்தில் காட்டுகிறோம் என உணர்ந்தவனாக, ரத்தம் வடியும் தன் கையை தூக்கி காண்பித்தவன் “இதவச்சு என்னதையாவது சொல்லி வை” என்றுவிட்டு போய்விட்டான்.

அடுத்து சற்று நேரத்துக்கெல்லாம் வேணியும் பவித்ராவும் கருணுடன் காரில் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு கருண் மீண்டுமாக ப்ரவியிடம் செல்வதாக ஏற்பாடு.

ப்ரவி இந்த நிகழ்வை தனது டிபார்ட்மென்டில் கூட பெரிதாக தெரியப்படுத்த எண்ணவில்லை. காரணம் அவன் இதன் அடிப்படையில் பல காய்கள் நகர்த்த வேண்டி இருந்தது. இவன் அலுவலகத்திலிருந்து யார் எப்படி தகவல்களை எதிராளிக்கு கசியவிடுவர் என சொல்ல முடியாதுதானே! ஆக ஐஜி அளவில் சின்னதாக குறிப்பு கொடுத்துவிட்டு, செய்ய வேண்டியவற்றை பெரிதும் தான் மட்டுமாக நின்று செய்து முடித்தான். அவனை மட்டும் எப்படி தனியாகவிட? ஆக துணைக்கு கருண்.

முதல் வேலையாக இவர்கள் வயலிலும், அதைச் சுற்றி இருக்கும் இடம் முழுவதும் அந்தத் திருடன் பற்றிய தடயங்கள் எதாவது இருக்கிறதா என அங்குலம் அங்குலமாய் ஆராய்ச்சி. அதற்கும் முன்பாக அங்கு வேலையிலிருந்த அனைவரையும் வெளியேறச் சொல்லிவிட்டனர்.

சுற்றி இருக்கும் இடமெல்லாம் பால்கனியினுடையதுதானே, அவன்தான் ஏற்கனவே ஒத்துழைப்பு கொடுக்கச் சொல்லிவிட்டு போயிருக்கிறானே! ஆக அத்தனை ஆட்களும் அகலவும் அங்கு பல இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா நிறுவும் வேலை தடையின்றி நடந்தது. கேமிரா நிறுவப் போவதாக பால்கனி ஆட்களிடம் தெரிவித்துவிட்டார்கள்தான், அதை மறைக்கும் எண்ணம் எதுவுமில்லை, ஆனால் இந்த வேலை நடைபெறும் நேரம் அவர்கள் இங்கு தேவையில்லை என்பது ப்ரவியின் எண்ணம்.

நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம். மரங்கள் அடர்ந்த பகுதியும் கூட. அதன் எந்த வழியாக யார் இனி பவியின் வயலுக்கு வந்தாலும் கேமிராவிலிருந்து தப்ப முடியாது என்பது போல் ஏராள இடங்களில் நிறுவினர்.

இதற்கு தனியார் நிறுவன ஆட்களை வரவைத்துக் கொண்டனர் என்றாலும் ப்ரவிக்கு உட்கார்ந்து ஓய்வெடுக்கும் நிலை எல்லாம் இல்லை. இடம் குறிப்பதென்றும், இன்ன பிறவென்றும் மரங்களுக்கு இடையில் ஏராளமாய் அலைந்து திரிய வேண்டி இருந்தது அவன். கருணும்தான்.

ஒரு கட்டத்தில் “ஏய் கொத்துபரோட்டா உன் ஆத்துக்காரன் என்ன ஓவரா பின்னி பெடலெடுக்கிறான், காலெல்லாம் செம வலி, தாங்க முடியல, நீயாச்சும் என் மேல இரக்கப்பட்டு ஆட்டுகால் சூப் வக்சு வையேன், குடிச்சுட்டு தூங்கினாதான் நாளைக்கு ஆஃபீஸ் போக முடியும்னு நினைக்கிறேன்” என ஒரு அழைப்பு கருணிடமிருந்து வீட்டிலிருந்த பவித்ராவுக்கு.

அடுத்த பக்கம்