துளி தீ நீயாவாய் 13

எங்கும் புகை மயம். எதுவும் எங்கிருக்கிறதென புரிபடாத நிலையில், அங்கும் இங்குமாய் ஓடி அந்த புல்லட்டை காண முயன்ற ப்ரவி, அடுத்த காரியமாக ஓடிப் போய் திறந்தது பவி இருந்த மோட்டர் ரூமைத்தான்.

அவளும் அதே நேரம் “என்னாச்சு ப்ரவி?” என பதறிப் பாய்ந்து கொண்டு இவனுக்குள் வர, அத்தனை சூழலிலும் மெல்லமாய் அவளை ஒரு கணம் அணைத்தவன், “நான் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்,  நீ போய் வேணியப் பாரு, ரொம்ப பயந்துருப்பா, நான் கருணப் பார்க்கணும்” என்று அவசர அவசரமாய் தெரிவித்துவிட்டு, விலகி ஓடினான்.

பவியும் நிலைமையை உணர்ந்தவளாக வேணியைத் தேடி ஓட, அதற்குள் அந்த புகை மண்டலத்துக்கு வந்திருந்த வேணிதான் பவியைக் காண முடியாது மயங்கி விழுந்தது.

வேணி விழும் நேரம் அவளுக்கு ஓரளவு அருகில் வந்திருந்தது கருண்தான். இருந்த புகை மண்டலத்தில் அவள் குரல் போன தினுசில் அவள் விழுகிறாள் என்பதைப் புரிந்து வந்து அவளைத் தாங்கிப் பிடித்ததும் அவன்தான்

“ஏ கொடுக்கு ஒன்னுமில்ல, என்ன நீ? உன் பவியக்கால்லாம் பத்ரமாதான் இருப்பா, அப்படியே அவளுக்கு பிரச்சனைனாலும் இப்படி விழுந்து வச்சன்னா எப்படி போய் ஹெல்ப் செய்யப் போற?” என அவன் என்ன சொல்லி தேற்ற முயன்று என்ன? சரிந்தவள் அவைகளை கேட்டுக் கொண்டே கண் சொருகிப் போனாள்.

சரியாய் அந்நேரம் பவி அங்கு வந்து சேர்ந்தவள், அருகில் வந்ததும்தான் நிலையை உணர்ந்தவளாக தண்ணீர் எடுக்கவென வந்த வழியே திரும்ப ஓடினாள். இருந்த நிலவரத்துக்கு கருண் எங்கு தண்ணீரைத் தேடி ஓட? இவள் வரும் போதுதானே இன்னும் மோட்டார் பம்பின் தண்ணீர் விழும் குழிக்குள் நீர் கிடக்கிறது என்பதை பார்த்து வந்திருக்கிறாள், நேரே அங்கே போய் எடுத்து வந்துவிடலாமே என்பது இவளுக்கு.

அப்போதுதான் அந்த துர்நாற்றமும் வேணிக்கு தாங்க முடியாத ஒன்றாக இருக்கும் என உணர்ந்த கருண், அவளை கையில் அள்ளி, சற்று தள்ளி நாற்றம் குறைந்த இந்த மோட்டர் ரூம் அருகாகவே கோண்டு வந்து கிடத்த,

அதற்குள் பவி தண்ணீரோடு வந்து “வேணி, வேணி விழிச்சுக்கோ வேணி, இங்க பார், நான் இங்கதான் இருக்கேன்” என்றபடி வேணியின் முகத்தில் தெளிக்க, சுளீர் என வந்து விழுந்த நீரின் தொடுகையில் முகம் சுளிக்க சுளிக்க விழித்த வேணி, அடுத்த நொடி அருகில் ஒற்றை முட்டு ஊன்றி அமர்ந்திருந்த பவியின் முகத்தைப் பார்த்தவள், அவசரமாய் எழுந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு  “உங்களுக்கு என்னமோ ஆகிட்டோன்னு பயந்துட்டேன்கா, என்னை விட்டுட்டு எங்கயும் போய்டாதீங்கக்கா” என கதற,

இதற்குள் பதிலுக்கு தானும் அவளை இரு கைகளாலும் அணைந்திருந்த பவி “அச்சோ, எங்க வேணிப் பொண்ண விட்டுட்டு நான் எங்க போக?” என குழந்தையை சமாதானம் செய்யும் தொனியில் செய்ய, ‘பெருசா எதுவுமே நடக்கல, நீ இப்படி பயப்படுறதுக்கு’ என்பதை மறைமுகமாக இப்படி உணர்த்த,

தானும் இவர்கள் அருகில் தரையில் ஒற்றை முட்டு ஊன்றி அமர்ந்திருந்த கருண் இந்தக் காட்சியை ஒருவித ரசனையும், சுவாரஸ்யமாய் பார்த்திருந்தவன், வேணி ஒருவாறு ஆசுவாசப்படவும்

“ஆமா இது அந்த போலீஸ்காரனுக்கு தெரியுமா?” என வம்பிழுக்க,

“எதுடா?” என பவி எகிற,

“கொடுக்க விட்டுட்டு நீ எங்கயும் போக மாட்டேன்ற விஷயம்தான்” என ஒரு குறும்புச் சிரிப்போடு அவன் விசாரிக்க,

‘நங்’  வேறென்ன? பவி அவன் தலையில் வைத்த குட்டுதான்.

“எதுல ஜோக்கடிக்கதுன்னே இல்லையா உனக்கு? சின்ன பிள்ளைய போய் சீண்டிகிட்டு இருக்க? சும்மாவே வேணி அவங்கள பார்த்தாலே தெறிக்கும், இதுல இப்படி வேற சொல்லு, என்னமோ அவங்களுக்கு இவ இங்க இருக்கதே பிடிக்கலையோன்னு பயந்துட்டு இருப்பா” என தீவிரமாகச் சொன்ன பவி,

அடுத்து வேணிக்கு எதுவும் சொல்லும் முன் “ஏ கொடுக்கு, அப்படியா தாறுமாறா யோசிப்ப நீ? இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குப் பேசுறது. உன்னை பிடிக்காம யாராவது வீட்ல கூட வச்சுப்பாங்களா? இங்க எல்லோருக்கும் உன்னை பிடிக்கும் இன்க்ளூடிங் மீ, தங்குற இடத்தில் கூட இருக்கவங்களுக்கு நம்ம பிடிக்காதோன்னு நினச்சுகிட்டே இருந்தா என்ன நிம்மதியா இருப்ப நீ? நாம எல்லோருக்கும் பிடிக்கிற வகையிலதான் இருக்கோம்னு எப்பவும் கான்ஃபிடென்டா இருக்கணும் சரியா?” என சொல்லிக் கொண்டிருந்தான் கருண்.

“சரியா? இல்லையா?” கிட்டதட்ட குழந்தையிடம் பேசும் தொனிக்கு அவன் போக, பதில் சொல்லாமல் அவன் விடமாட்டான் என்ற புரிதலில் அப்பாவி ஆட்டுக்குட்டி போல் இப்போது தலையை ஆட்டியது வேணி.

இவை அனைத்தையும் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தது பால்கனி. அவன் நின்ற இடம் புகைக்காடு என்றால், வேணி விழவும் கருண் தூக்கி வந்துவிட்ட இந்தத் திசையில் புகை இல்லை என்பதால் அவனுக்கு இங்கு நடப்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது.

வேணி எழுந்து அமர்ந்து கருணின் பேச்சு புரிந்து தலையாட்டவும் முழு நினைவுக்கு வந்துவிட்டாள் எனப் புரிய கட கடவென திரும்பிப் போய்விட்டான் அவன்.

எந்த வகையிலும் அவனுக்கு இதை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. கருணைக் கண்டு இவன் பொறாமைப் படுவதை வேணி வெறுக்கிறாள் என இவனுக்குத் தெரியும். அதற்காகவே அவன் இதை அசட்டை செய்ய நினைக்கின்றான்தான். ஆனால் உள்ளுக்குள் இவனுக்கு கொந்தளித்துக் கொண்டு வருவதை அடக்க முடியவில்லை.

எல்லோருக்கும் பிடிக்குமாம் இங்க்ளூடிங் மீயாம்… காதில் நாராசமாக திரும்பத் திரும்ப இதைச் சொல்லிய கருணின் குரல் விழுகிறது என்றால்,

அடுத்த பக்கம்