துளி தீ நீயாவாய் 12 (6)

அவன் மீது எதுவும் படவில்லை என்றாலும் பெரும் புகை மண்டலம். அதுவும் ஒரு முறை அல்ல, தொடர்ந்து ரெண்டு, மூன்று, நான்கு என நொடிக்கு நொடி இடைவெளிவிட்டு இந்த வெடிச் சிதறல் தொடர,

அடுத்து அந்த புகைக்குள் கேட்கிறது அந்த ஒலி. புல்லட் ஒன்றின் ஒலி. இப்போது ப்ரவி அந்த திசையை நோக்கிப் பார்க்க, அங்கு புல்லட்டில் அமர்ந்தபடி ஒரு காலை தரையில் ஊன்றி நிற்கிறான் ஒருவன் என ஊகிக்க முடிகின்றது.

அசைந்து சுழலும் புகைக்குள் அவன் கறுப்பு ஜீன், தலையையும் மறைத்தபடி கறுப்பு ஹூடட் ஜெர்கின், கீழ்பாதி முகத்தை மறைக்கும் மப்ளர் என்றிருக்கிறான் என்பது அடுத்த யூகம். ஒரு கையால் புல்லட்டின் ஹேண்டிலை பிடித்திருந்தான் எனில் மறுகையில் பளபளவென முழ நீள ரைஃபிளை பிடித்திருக்கிறான் என்பது புரிதல்.

அதாவது இவனைப் பார்த்து நீட்டி மிரட்டினான் என்று இல்லை, ஆனால் வைத்திருந்தான். அவன் நிற்கும் இடத்திற்கும் இவனுக்கும் இடையில் நன்றாகவே இடைவெளி இருக்கிறது என்றாலும் ரைபிள் முன் அது எம்மாத்திரம்.

“வணக்கம் தல, நான்தான் நான்” என ரைபிளால் ஒரு சல்யூட் வைத்து துவங்கினான் அவன்.

“உன்ன இப்படி முகமுகமா பார்க்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தல. feeling really privileged” சொல்லும் போதே தன் இட நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.

“நான் எப்பவும் சொல்றதுதான் தல, நல்லா இரு, ரொம்பவே நல்லா இரு, ஆனா என் விஷயத்துல நீ தோத்துதான் போகணும் தல, உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்தான், ஆனா அதுக்காக உன் கையால சாக ஒத்துப்பேன்னு நினைக்கியா? என் பக்கத்துல வராதன்னு சொல்லச் சொல்ல வந்துட்டே இருக்கியே தல” என்றவன்,

“இங்க பாரேன்” என இப்போது தன் ஜெர்கின் மேல் பாக்கெட்டில் இருந்து எடுத்து எதையோ அழுத்த, சட்டென தரையில் ஒரு இடத்தில் இருந்து நீள நீள துளையுள்ள ஒரு பெட்டி வெளியே வருகிறது. அதிலிருந்து துர்நாற்றம் இங்கு வரை குடலை பிறட்டுகிறது.

“அது என் ஒன் அண்ட் ஒன்லி ப்ரென்ட், பேரு ரங்கூன், by birth அது புலி, நாலு நாள் முன்னால அது செத்துட்டு தல, ஏன்னா நான்” என்றவன் சூட் செய்து விட்டேன் என்பது போல் தன் கையில் இருந்த ரைஃபிளால் ஆக்க்ஷன் செய்தவன்,

“என்னதான் க்ளோஸ் ஃப்ரென்ட்னாலும், நம்மள க்ளோஸ் செய்ய வந்தா விட முடியுமா ப்ரோ? அதான் சிக்ஸ் ஷாட்ஸ்” என திரும்பவும் சூட்டிங் ஆக்க்ஷன் காண்பித்தான்.

“சமத்தா செத்து போச்சு, அழுது அழுது என் ஆழ்ந்த அனுதாபங்கள தெரிவிச்சுட்டு, சிக்ஸ்டி தவ்சண்ட் ருப்பீஸ்க்கு வாங்கின ஸ்பெஷல் பெர்ஃப்யூம் ஊத்திதான் பரி செய்தேன் ப்ரோ, ஆனாலும் பாரு நாலே நாள்ள நாறுது. டர்டி ஃபெல்லொ, நன்றியே இல்ல” என்றவன், இப்போது புல்லட்டை கிளப்பிக் கொண்டு,

“புரியும்னு நினைக்கிறேன், யார் செத்தாலும் நாற மட்டும்தான் செய்யும்” என்றவன்,

ஆக்சிலேட்டரை அலறவிட்டுக் கொண்டே “உன் family members இருக்கிற இங்க வரைக்கும் நான் வர்றேன்னா, அவங்கள என்ன வரைக்கும் என்னால செய்ய முடியும்னு யோசிப்பன்னு நம்புறேன் தல” என்றுவிட்டு போயே விட்டான்.

அந்த புல்லட்டை பார்த்த நொடியிலிருந்து தான் செய்ய எதாவது இருக்கிறதா என கண்களால் கவனிக்க கவனிக்க பார்த்துக் கொண்டு நின்ற ப்ரவி, இப்போது அங்கும் இங்கும் ஓடிப் போய்த் தேட, ஆனால் இருந்த புகை மண்டலத்தில் வெகு எளிதாக தப்பிவிட்டான் அந்த அவன்.

அடுத்து சில நிமிடங்களுக்குள் வெவ்வேறு திசையில் இருந்து தலை தெறிக்க ஓடி வந்து சேர்கின்றனர். “என்னது? என்னாச்சு?” என கருணும்,

“கிணறு எதுவும் தோண்டுறீங்களா, அளவுக்கு மீறி புகை?” என பால்கனியும்,

“ஐயோ அக்கா, அக்கா எங்க? என்னாச்சு?” என விபரீதம் உணர்ந்த அழுகைக் குரலில் வேணியும்.

தற்கெல்லாம் முன்பாக பவிக்கும் ப்ரவிக்கும் தனிமை கொடுக்கவென “அந்தப் பக்கம் போய் குழிய எண்ணிட்டு வா” என கருண் சொல்லவும்  வயலின் அடுத்த பகுதியைப் பார்த்துச் சென்றிருந்தாள் வேணி.

ஐந்து ஏக்கர் நிலம்தான் என்றாலும் சற்றாய் வளைந்து அமைந்திருக்கும் அதன் அமைப்புக்கு ஒரு பகுதியில் நின்றால் அடுத்த பகுதி சற்றும் தெரியாது. அங்கு போய் அமர்ந்து கொண்டிருந்தாள் வேணி. கையிலிருந்த கடிதம் தாறுமாறாய் அவளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

பிரித்து வாசிக்கக் கூட என்னவோ போல் இருந்தது. இவளை நம்பும் பவி ப்ரவியை ஏமாற்றி இவள் பால்கனியுடன் பேசுவது போல், தொடர்பில் இருப்பது போல் உணர்வு வருகிறது அவளுக்கு. அதுதான் தவிப்பின் முழுக் காரணம்.

இதில் சற்று நேரம் இப்படி கழிய, இவள் அமர்ந்திருந்த சிறு பாறையை ஒட்டி பின் புறம் பனை அளவு உயரமாய் ஒரு பாறை இருக்கிறது. அதன் மறைவிலிருந்தபடி “என்னாச்சு வேணி?” என விசாரிக்கிறான் பால்கனி.

பவியின் வயலில் மரம் என எதுவுமில்லை. வெட்ட வெளிதான் அது. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் இடமெல்லாம் இந்த பால்கனியினுடையதுதானே, அவனோ விவசாயத்தை பலகாலமாய் செய்து வருபவனாயிற்றே, ஏராளமான மரங்களடர்ந்து அங்கு என்ன இருக்கிறதெனவே பார்க்க முடியாத அளவு இருந்தது அது. அந்த பின் புலத்தில் நின்று கொண்டு பேசுகிறான் அவன்.

குரல் காதில் விழவும்தான் தாமதம், துள்ளி எழுந்தாள் இவள். ஒரு பக்கம் பவி வீட்டினர் பார்த்துவிட்டால் என்ன ஆகும் என கடும் பதற்றம். மறுபக்கம் இந்த பால்கனியின் மீது கடும் கோபம்.

“ஐயோ இங்க எதுக்கு வந்த?” என அடக்கப்பட்ட குரலில் ஒரு கூவல்.

“என்னதான் நினச்சுகிட்டு இருக்க நீ?” என குறைக்கப்பட்ட சத்தத்தில் ஒரு வீறிடல் இவளிடம். இதில் இதற்குள்ளும் கண்ணில் இருந்து நீர் வேறு வந்து வைக்கிறது.

“ஷ்… பயப்பட ஒன்னும் இல்ல வேணிமா, பயப்படாத, அழாத நீ முதல்ல” தடுக்க முயன்றான் அவன்.

“SP சார் அண்ணி எல்லாம் அந்த பக்கம்தான் இருக்காங்க, அங்க இருந்து இங்க பார்க்கவே முடியாது. சார் மண்ண வெட்டிட்டு இருக்கார், அண்ணி வேற பக்கத்துல கிணத்து பக்கம் வெயிட் பண்றாங்க,

இப்போதைக்கு இங்க வரமாட்டாங்க, அந்த கருண் பய மொபைல நோண்டிட்டு அந்த பக்க முகப்புல இருக்கான். நம்ம வயல்லயும் இங்க யாரும் வராத போல வேல கொடுத்துட்டுதான் வந்துருக்கேன்” என அவசர அவசரமாய் சொல்லி இவள் பதற்றத்தை தணிக்க முயன்றான் அவன்.

அடுத்த பக்கம்