துளி தீ நீயாவாய் 12 (5)

அதுவும் அவர்கள் அமர்ந்திருந்த நிலையிலேயே “எப்படியோ ஒரு வழியா ஹனி சன்ன ஆரம்பிச்சுட்டேன், அது நியாபகமா ஒரு ஸ்னாப் எடுத்துப்போம்” என ஒரு செல்ஃபியை அவன் எடுக்க முனைய,

அவன் கையில் ஒரு அடி போட்டு “இது பேரு உனக்கு ஹனி மூனா?” என இவள் முறைப்பாய் பழிப்பம் காட்ட, அதை பதிந்து கொண்டே,

“ஐயோ இது ஹனிமூன் இல்லையா? அப்ப ஹனிமூன்னா எப்படி இருக்கும் பவிக்குட்டி? எனக்குச் சொல்லித் தாயேன்” என அவள் காதில் இவன் இதழ் உரச ஒருவித குரலில் இழைய,

அதில் நாசுக்கான நல்லவித சரவெடிகள் இப்போது பெண் தேகத்தில் செய்வினை செயப்பாட்டுவினை என எல்லாம் செய்துவைக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ள தடுத்த பெண்மையின் தவிப்பில், முறைத்த படி முன்னைவிட பலமாய் ஒன்று அவள் அவனுக்கு வைக்க,

அதையுமே பதிந்த அவன், “இந்த போட்டோவ யார்ட்ட காட்றப்பவும், ஹனிமூன்னா என்னதுன்னு தெரியலன்னு சொன்னதுக்கு பவி என்ன அடிச்சுட்டான்ற உண்மையையும் சேர்த்தே சொல்வேன்” என வேறு அவன் சீண்ட,

“யூ…” என்றபடி திரும்பி இப்போது இவன் கன்னத்தை கிள்ளினாள் அவள். வலுவாகத்தான். அதில் அவன் ஸ் எனத் துவங்கும் போதே, கிள்ளிய இடத்தை மென்மையாய் நிமிண்டி விட்டு, அங்கு அழுந்தமாய் இதழ் பதித்து, “உன்னை எனக்கு இப்படில்லாம் கூட பிடிக்கும்னு எனக்கு தெரிஞ்சதே இல்லையே” என்றபடி அவன் மார்போடு புதைந்தும் கொண்டாள் அவள்.

அதை சற்று நேரம் முழுமையாய் மௌனமாய் அவனுமே அனுபவித்தவன், அதன் பின்னே அவள் கை பற்றி, அழைத்து வந்தான்.

சர்வ நிச்சயமாய் கிணற்றுக்குள் இறங்கிய பவியை விட வெளியே வந்த பவி படு உற்சாகமாக இருந்தாள்.

கிணற்றில் இருந்து மோட்டார் அறைக்கு வந்து அங்கிருந்துதானே வெளியே வர வேண்டும், அந்த மோட்டர் அறை வரவும் ப்ரவியின் மொபைல் சிணுங்க, அதை எடுத்துப் பார்த்தவன் “ஓகே பவிமா, கடமை அழைக்குது, நான் வர கொஞ்சம் டைம் ஆகும், நம்ம ஹனிசன் கான்சப்ட் நமக்குள்ளயே இருக்கணும்னு நினச்சன்னா அதுக்குள்ள உன் சேரிய கொஞ்சம் சரி செய்துக்கோ” என இவளைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு வெளியேற, போகும் போதே அறைக் கதவை வெளிப்புறமாய் இழுத்தடைக்க,

முதல் நொடி இவளுக்கு புரியவில்லை என்றாலும் அடுத்து இவள் கடுப்பாகி முறைக்க, பின்ன காட்டன் புடவைய கட்டிட்டு இத்தனை அட்வெஞ்சர் செய்தா அது எப்படி இருக்கும்? அதுக்குப் போய் இவன் என்ன சொல்லிட்டுப் போறான்?

“போடா” என வேகமாய் ஆரம்பித்தவள், பொதுவாகவே அவனை போடா லூசு என அவள் அழைப்பது வெகு அபூர்வம் என்றாலும், இப்போது

“ம்கூம் இந்தப் பழக்கத்த நான் மாத்தணும், உன் ஐஜி உன்ட்ட போன்ல பேசிட்டு இருக்கப்ப நான் பாட்டுக்கு பக்கத்துல நின்னு போடா லூசு பக்கி புருஷான்னு சொல்லிட்டா நல்லா இருக்காது, அதனால இனி நீ போங்க பக்கிங்க… சை கல்யாணம் ஆகிட்டுன்றதுக்காக திட்ட கூட நல்லதா நாலு வார்த்தை இல்லாம போய்ட்டு” என புலம்பியபடியே, கசங்கிப் போய் கொசுவம் கொஞ்சம் ஏறி இறங்கி இருந்த அவளது மென்மஞ்சள் நிறப் புடவையை குனிந்து சரி செய்யத் துவங்கினாள்.

இவள் புடவையை மட்டும் கவனித்துக் கொண்டிருக்க,

திடுதிப்பென இப்போது மீண்டும் கதவை திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டிய ப்ரவி “பிரவாயில்ல பக்கி புருஷான்னு சொல்லலாம், கிக்காதான் இருக்கு, நீ பக்கத்துல இருக்கப்ப என்னைக்குமே நான் ஐஜி கால அட்டென் செய்யவே மாட்டேன், ஒருத்தன் ரெண்டு பாஸ ஒரே நேரத்துல சமாளிக்க முடியுமா என்ன?” என்றபடி மீண்டும் தலையை வெளியே எடுத்துக் கொண்டு கதவை அடைத்தான்.

எப்படி இருக்கிறதாம் இவளுக்கு?

“பக்கி புருஷா ஒழுங்கா கதவ பூட்டிடு, இல்ல கல்லால அடிச்சாலும் கணவன்னு நான் கல்லால உன் மண்டைய உடைச்சுடப் போறேன்” என எகிறினாள் இவள்.

மோட்டர் ரூம் என்பது யாரும் தங்க முனையும் இடம் கிடையாது. ஆக எப்போதும் வெளிப்புறம் மட்டுமே அதற்கு தாழ் இருக்கும். அவன் இப்போது சிரித்தபடியே வெளியே தாழிட்டான்.

அடுத்து ப்ரவி சிணுங்கி நிறுத்தி இருந்த தன் மொபைலில் எண்களை அழுத்தி பேசிக் கொண்டே சற்று தூரம் சென்றவன், பேச்சை முடித்துவிட்டு அதை தன் பாக்கெட்டில் வைக்கும் போதுதான் எதேச்சையாய் கண்ணில் படுகிறது அது. அங்கு தரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மண் இறங்கி இருந்தது.

அதாவது ஒரு இடத்தில் நாம் குழி தோண்டி, பின் அதில் மண் போட்டு தரை தளத்திற்கு சமமாய் மூடிவிட்டு, அடுத்து அந்த இடத்தின்  மேல் தண்ணீர் விட்டால், குழி தோண்டி மூடிய அந்த பகுதி மட்டும் சற்றாய் பள்ளமாகி, எங்கு குழி தோண்டி இருந்தோம் என காட்டிக் கொடுக்கும். அப்படி ஒரு அடையாளம் அங்கு சில மீட்டர் நீளம் உண்டாகி இருந்தது.

அதைத்தான் கவனித்த ப்ரவி, அடுத்த நொடி அந்த குழிக்கு எதிர் திசையில் மோட்டர் ரூம் நோக்கி கடும் வேகத்தில் ஓடத் துவங்க, சரியாய் அதே நேரம் காது கிழியும் கொடூர சத்தத்துடன் கல் மண் என எல்லாவற்றையும் அள்ளி சிதறிக் கொண்டு அங்கு ஏதோ வெடித்து எறிந்தது.

அடுத்த பக்கம்