துளி தீ நீயாவாய் 12

முடிந்த மட்டும் முறைத்தாள் பவித்ரா.“எல்லோர் முன்னாலயும் என் கையால அடி வாங்க உனக்கு ஆசை வந்துட்டுன்னு தெரியுது” என முனங்கினாள்.

அடுத்து அதோடு அந்த விஷயம் முடிந்தது என்பது போல் “இந்த வெயில்ல யாரும் வேலை செய்ய மாட்டாங்களாம், அதனால ஒழுங்கா சொன்னா கேளு” என தன் நோக்கத்திலேயே நின்றாள்.

“யார் வேலை செய்யமாட்டாங்க? கூலி வேலைக்கு வர்றவங்கதான் செய்ய மாட்டாங்க, சொந்த வயல்காரன் இருட்டுற வரைக்கும் வேலை செய்துகிட்டுதான் நிப்பான், நான் யாரு? ஓனரா இல்லையா?” என வருகிறது அவனது கேள்வி.

இதற்கு என்ன சொல்வாள் இவள்?

“அப்படிங்களா எஜமான், அப்ப கருவாடா காய உங்களுக்கு முழு உரிமையும் இருக்குங்க” என விட்டுக் கொடுத்தாள். அதான் ஆட்கள் வேலை செய்வாங்களாமே!

உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது பவிக்கு. இவளை இங்கு வேலை செய்யக் கூடாதென நின்றான்தானே இவன். இப்போது கேட்கும் கேள்வியைப் பார்!.

“நன்றிங்க எஜமானி அம்மா, கூடவே இன்னொரு உதவியும் வேணும்ங்க, நீங்க இவ்வளவு நேரமெல்லாம் வெயில்ல நின்னு பழக்கமில்லாதவங்க, அதனால அப்படியே போய் மோட்டர் ரூம் நிழல்ல உட்காருவீங்களாம்” என அவனின் வழக்கமான இயல்பை காண்பித்தான் அவன்.

வயலின் வேலிப் பகுதியை நோக்கி நடக்கத் துவங்கினான்.

“நோ போலீஸ்கார் நான் உன்னைய விட்டுட்டு போய்ட்டா பூச்சாண்டி தூக்கிடும்னு உன் தங்க கம்பி என்னை திட்டும்” என்றபடி இவள் பின் தொடர்ந்தாள்.

பொதுவாகவே இவளுக்கு ப்ரவியை வால் பிடித்துக் கொண்டு சுத்தப் பிடிக்குமே! இப்போதும் அவனை விட்டுப் போக மனமில்லை.

“கவலையே படாத, அவன் நாம இருக்கோம்ன்றதுக்காகவே இந்தப் பக்கமே வரமாட்டான், நீ சைல்ட் மேரேஜ் பார்டின்றது அவனுக்கு தெரியாதுல” என சற்று விஷம கிண்டலாய் மறுத்தான் இவளவன்.

சட்டென அப்போதுதான் இவளுக்குத் தைக்கிறது, ஹனி மூன், ஹனி சன் என என்னதெல்லாமோ பேசிய அவனே இவளை வராதே என்கிறான். இவள் வருவேன் என பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

“இப்பல்லாம் உனக்கு என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவே பிடிக்கலல்ல, சும்மா சும்மா பயம்காட்டி துரத்தி விடுறல்ல” இப்படி ஏடாகூடமாக ஒரு லாஜிக்கை கண்டு பிடித்து சொல்லிவிட்டு முகத்தை தூக்கிக் கொண்டு திரும்பி வந்துவிட்டாள் இவள்.

“ஹேய்” என பதில் சொல்ல ஆரம்பித்த ப்ரவி, பின் சின்ன சிரிப்போடு வேலையைப் பார்க்கப் போய்விட்டான்.

நிஜமா நமக்கு கோபம் வரலைனு கண்டு பிடிச்சுட்டோ இந்த போலீஸ்கார்? அப்டினா கூட அது எப்படி இவன் என் கோபத்த பார்த்து சிரிக்கலாம்? வரட்டும் இன்னைக்கு இவனுக்கு சொடக்குதான்! என ஒரு மார்க்கமாய் மனதுக்குள்  சண்டை போட்டபடி காத்திருந்தாள் பவித்ரா.

ப்ரவியோ வேலிப் பகுதியில் மண்ணை குவித்து கரை போல் அமைக்கும் வேலையை சற்று நேரம் செய்து முடித்தவன், அடுத்து கை கால் அலம்பிக் கொள்ளவென மோட்டர் ரூம் இருக்கும் கிணற்றுப் பகுதிக்கு வந்தான். இவன் எதிர்பார்த்தது போல் பவி அங்குதான் அமர்ந்திருந்தாள்.

கருண் இவள் ப்ரவியுடன் இருக்க வேண்டும் என விட்டுப் போயிருக்கும் நேரத்தில், இவள் ப்ரவியைவிட்டுவிட்டு கருணிடம் திரும்பிப் போய் நின்றால், கருணுக்கு எதுவும் வித்யாசமாகத் தோன்றக் கூடும் என்பதாலயே இவள் இங்குதான் இருப்பாள் என எதிர்பார்த்தபடி வந்த ப்ரவி

கோபம் சமாதானம் என எதைப் பற்றியும் பேசாது “மோட்டர ஆன் பண்ணு பவிமா” என வெகு சாதாரணமாய் சொன்னபடி தண்ணீர் குழாய் அருகில் போய் நின்றான்.

கடந்த இரண்டு நாட்களிலில்தான் நீர் இறைக்கும் மோட்டார் பொருத்தப்பட்டு, அதற்கென அறை புதுப்பிக்கப்பட்டு இருந்தது. அதனால் நீர் வந்து விழும் தொட்டி இன்னும் கட்டப்படவில்லை.

இப்போதைக்கு முற்காலத்தில் தோண்டி இருந்த ஒரு பள்ளம் மட்டுமே அதற்காக இருந்தது.

ப்ரவி அந்தப் பள்ளத்தில் நின்றிருக்க, பவி மோட்டரை இயங்கவிட்டு வந்தவள், விறைப்பாய் நடந்து போய் அந்த பள்ளப் பகுதியின் ஒரு பக்க மேட்டில் நின்று கொண்டு ப்ரவியின் சட்டையை கொடுக்க காத்திருந்தாள். அதாவது அப்படியே சண்டை பிடிக்க, அதை சொடக்கெடுத்தலில் முடிக்க நின்றிருந்தாள்.

அடுத்த பக்கம்