துளி தீ நீயாவாய் 10(9)

ஆனாலும் அதிகமாய் வேலை இருக்கும் ஒரு நாளில் வேலைக்கு வரமாட்டேன் என எப்படிச் சொல்ல என்றும் ஒரு குற்ற உணர்வு. இதில் இவள் தயங்கித் தயங்கிக் கிளம்ப, இவள் ஒடுங்கி ஒடுங்கி நிற்பதைக் கண்ட பவித்ரா இவளிடம் வந்து “என்ன வேணி? எதுவும் முடியலையா? முகமே சரியில்ல, வீட்ல வேணா இருந்து ரெஸ்ட் எடுக்கியா?” என விசாரித்தாள்.

“கருண் கூடத்தான போறேன், அதனால எனக்கு ஹெல்புக்கு ஆள் வேணும்னு எதுவும் இல்ல” எனவும் அவள் சொல்ல,

“எனக்குத் தெரிஞ்சி கொடுக்கு என்னைப் பார்த்து பூதத்தப் பார்த்த போல மிரண்டு போயிருக்கோன்னு ஒரு கெஸ்” என கருண் சரியாகவே காரணத்தையும் யூகிக்க,

இவள் “அச்சோ சாரி அப்படில்லாம்” என தடுமாற,

இவளைப் புரிந்தவளாய் “நீ வீட்ல ரெஸ்ட் எடு வேணி, வாசல்ல செக்யூரிட்டிக்கு ஆள் இருக்கு, அதனால பயப்பட எதுவும் இல்ல, சமையல் செய்ற அக்காவ இன்னைக்கு வீட்ல இருக்க சொல்றேன், நீ வீட்டப் பார்த்துக்கோ, அவங்க உன்ன பார்த்துப்பாங்க, நாங்க சாயந்தரமா வந்துடுறோம்” என பவி விஷயத்தை முடித்துவிட்டாள்.

ஆக பவியும் கருணும் கிளம்பிப் போக, மதியம் வரை எல்லாம் சுமுகமாகவே சென்றது வேணிக்கு.

இதில் ஒரு 12 மணி வாக்கில் இவளிடம் வந்த சமையல் செய்யும் பெண், “மதியானம் ரெண்டு மூனு ஸ்கூல் பிள்ளைங்களுக்கு மதிய சாப்பாடு எடுத்துட்டு போய் கொடுக்கிற வேலை செய்றேன்பா, போய் கொடுத்துட்டு ஓடி வந்துடுறேனே” என வந்து நின்றார். இதை அந்தப் பெண் பவித்ராவிடம் சொல்லி இருக்கவில்லை போலும்.

ஆனால் இப்போது அவரைப் போகக் கூடாது என்றால் பாவம் மூன்று பிள்ளைகளுக்குச் சாப்பாடு போய் சேர வேண்டுமே! ஆக “இன்னொரு டைம் இது போல விஷயத்தல்லாம் முதல்லயே மேடத்ட்ட சொல்லிடுங்க” என்ற நிபந்தனையோடு அனுப்பி வைத்தாள்.

அடுத்து ஒரு அரை மணி நேரத்தில் ஃபோன் செய்த அந்தப் பெண்ணோ “வந்த இடத்துல வேற வேலை வந்துட்டுப்பா, நான் சாயங்காலம் வரைக்கும் அங்க இருந்ததா அம்மாட்ட சொல்லிடு” என அடுத்த கதையை சேர்த்தது.

“இதெல்லாம் நீங்க மேடத்ட்டதான் பேசணும்” என இவள் சொல்ல,

“க்கும்” என்ற நொடித்தலோடு அழைப்பு முடிந்து போனது.

ஆக அந்தப் பெண் இன்று இனி வரப் போவதில்லை என்பது புரிய, இனி ஏறத்தாள இரவு வரை இவள் தனியாக இருக்க வேண்டும் என்பது சற்று மிரட்சியாகத் தெரிகின்றது வேணிக்கு. வெளியே பாதுகாப்புக்கென ஒரு போலீஸ்காரர் உட்கார்ந்திருக்கிறார் என்றாலும், சமயத்தில் அவரை நினைத்தும் கூட பயமாக இருக்கிறது.

பவித்ராவை அழைத்து அந்த துணைக்கிருந்த பெண் சென்றுவிட்ட விஷயத்தைச் சொன்னாள் இவள். இவள் குரலை வைத்தே இவள் பதற்றத்தை உணர்ந்தாள் போலும் பவி, ஆக “தனியா இருக்க கஷ்டமா இருக்கா வேணி? SP சார்ட்ட சொல்லி தெரிஞ்ச ஆட்டோ ஒன்னு அனுப்பச் சொல்றேன், நீ புது பஸ்ஸ்டாண்ட் வந்துடு, நானும் கருணும் வயல்ல இருந்து இப்ப அங்கதான் வந்துட்டு இருக்கோம், எங்க கூட ஜாய்ன் செய்துக்கிறியா?” எனக் கேட்டாள்.

‘எப்படியும் இன்னும் ரெண்டு மூனு மணி நேரம், அதுல கருண கூட சமாளிச்சிடலாம், ஆனா இந்த வீட்ல தனியா இருக்க முடியாது போல’ எனத் தோன்ற இவள் ஆட்டோ அனுப்பச் சொல்லிவிட்டாள்.

அடுத்த பதினைந்தாம் நிமிடம் ஆட்டோப் பயணம் துவங்கி இருந்தது. மெயின் ரோட்டில் எதோ லாரி கவிழ்ந்து வழி அடைபட்டுக் கிடக்கிறதென இவளுக்குத் தெரியாத சந்தில் நுழைந்து சந்து சந்தாகவே சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒரு கட்டத்தில் நின்று போனது.

திருகத் திருக முழித்த அதன் ட்ரைவர் “டீசல் காலியாகிட்டு போலம்மா, இப்பதான் போட்டேன், என்ன ஆச்சுன்னு தெரியல, போய் வாங்கிட்டு வந்துடுறேன்மா” என்றபடி ஒரு காலி வாட்டர் கேனை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போய்விட்டார்.

நடு வீதிதான், இருபக்கமும் வீடுகள்தான், பயம் என்று எதுவுமில்லை, ஆனால் தனியாக அமர்ந்திருக்க ஒருமாதிரி இருக்க இவள் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது இவளிருக்கும் சாலைக்கு இணையாகச் செல்லும் அடுத்த தெருவில் கண்ணில் படுகிறாள் அந்தப் பெண். கையில் காய்கறி நிரம்பிய கூடையுடன் மொபைலில் பேசியபடி சென்று கொண்டிருக்கிறாள் அவள். ப்ரவியுடன் புகைப்படத்தில் இருந்தாளே அந்தப் பெண்.

சட்டென இவளுக்கு ஒரு எண்ணம். ‘அந்தப் பெண்ணிடம் விசாரித்தால் இந்த கடிதம் அனுப்பிய நபரைப் பற்றி எதாவது க்ளூ கிடைக்கலாம் இல்லையா? அந்தக் கடிதம் சொல்வது போல் இவள் தவறான ஒருவளாக இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லையே’ அவ்வளவுதான் ஆட்டோவைவிட்டு இறங்கி அந்த பெண்ணைப் பார்த்துச் செல்லத் துவங்கினாள் வேணி.

உண்மையில் வேணியிடம் பெரிதாய் திட்டம் என எதுவும் இல்லை. ஆனால் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடக் கூடாதே என்ற ஒரு அழுத்த உந்துதல். அதுதான் அவளை செலுத்திக் கொண்டிருக்கிறது.

இவளிருக்கும் சாலைக்கும் அடுத்த தெருவுக்கும் இடைப்பட்ட பகுதில் கிடந்த காலி மனை வழியாகத்தான் அவள் வேணியின் பார்வைக்குக் கிடைத்திருந்தாள். ஆக புதரும் செடியுமாய் கிடந்த அந்த காலி மனையில் இறங்கி இவள் வேக வேகமாய் நடக்க,

SP சார விட இந்த லேடி நேர்ல பார்க்கப்ப நல்லாவே மூத்ததா தெரியுது! இத வச்சு இப்படி கதை கட்டணும்னு யாருக்கு தோணி இருக்கும்?  இப்ப நான் என்ன பேச? எதை பேசினா தகவல் கிடைக்கும் என என்னவெல்லாமோ இவளுக்குள் ஓட,

அந்தப் பெண் சென்று கொண்டிருந்த வீதியை இவள் அடையும் போது, அவள்  அங்கிருந்த ஒரு சந்தில் திரும்பிவிட்டாள். அதாவது இவளது பார்வையில் அவள் இல்லை. அவளை தவறவிட்டுவிடக் கூடாதென இப்போது வேணி ஓடத் துவங்க,

“ஹேய் இங்க என்ன செய்ற நீ?” என இவள் கையை பிடித்து நிறுத்துகிறது ஒரு உருவம். பிடிபட்ட வேகத்தில் கையை உதறிக் கொண்டு இவள் அது யாரெனப் பார்க்க, ஒரு கணம் அடையாளம் தெரியவில்லை.

ப்ளாக் ஜீன், வெண்ணிற காஷுவல் ஷேர்ட், அதை டக்கின் செய்யாமல் அவன் அணிந்திருந்த விதத்துக்கும் இது பால்கனியாக இருக்கும் என அவளுக்குத் தோன்றவில்லை முதல் கணம். அவன் முடியும் முகமும் மீசையும்தான் அது யாரென காட்டியது இவளுக்கு.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 11