துளி தீ நீயாவாய் 10(8)

“அதே அதே, அவன கல்யாணம் செய்துருக்கதே பெரிய விஷயம், இதுல அவன் சொன்னான்னு நீ என்ன வயலுக்கு போறியாமே? அவன் ஆடு வளர்க்கணும்னதும் நல்லா நாலு அப்பு அப்பியிருக்க வேண்டாமா?”

“ஏன் ஆடு வளர்க்கிறதுல என்ன கேவலம்?” வெடுக்கென வந்தது பவியின் கேள்வி. “சாப்ட மட்டும் மட்டன் சுக்கா வேணும்னு தட்டு தட்டா வாங்கி சாப்டுவ, ஆனா வளர்க்க கூடாதா? பாரு இனி உனக்கு என் வீட்ல நோ மட்டன் சுக்கா, ஒன்லி இட்லி உப்மா” அவள் எகிறினாள்.

அதற்கு விவேக் வாய்ஸில் “ஐயையோ பவிமாதா, நேக்கு நல்லாவே தெரியும் இந்த போலீஸ்காரன மட்டன் சுக்கா தர மாட்டேன்னு மிரட்டிதான் நீ ஆட்டுப்பண்ணைக்கு பெர்மிஷன் வாங்கி இருப்பன்னு, ஆனாலும் அதுக்கு ஒரு சாட்சி… எவிடென்ஸ்… கன்ஃபர்மேஷன் இப்படி எதாச்சும் வேணும்னு கொஞ்சமா துப்பறிஞ்சிட்டு போலாம்னு…” என சரண்டர் ஆனான் கருண்.

“நமக்கு மட்டன் சுக்கா முக்கியம்” அவன் சொல்லிக் கொள்ள,

அவன் பின் மண்டையில் ஒரு அடி, பவித்ராவின் செயல்.

“அங்க நம்ம வயலுக்கு அடுத்த வயல்காரன் இந்த இடத்த எப்படியும் வளச்சுப் போடணும்னு பார்க்கான்டா கரண்டி, வெத்து இடமா கிடக்கப் போய்தான இப்படி, அதுக்கு நாம அங்க உருப்படியா எதாச்சும் செய்வோமேன்னு பட்டுது” என விளக்கினாள் அவள். ப்ரவி மீதான கோபம் மறைந்த பின்னும் அவள் வயல் விஷயத்தை தொடர இது ஒன்றுதான் காரணம்.

“ஆமாந்தான் வெத்து இடமா கிடந்தா இப்படி இஷ்யூவும் இருக்குதுதான்” என கருண் இப்போது ஒத்துக் கொள்ள,

“ஆனாலும் உனக்கு கொழுப்பு ரொம்ப ஓவர்தான், வீட்ல எந்த நல்ல காரியம் நடந்தாலும் அதெல்லாம் உங்க ப்ரவியோட கம்பெல்ஷனுக்காக மட்டுமே நடக்கும்னு நினச்சுக்கிற பாரு, உன்ன நல்லா மொத்தணும்” என பவி இப்போது ஆதங்கப்பட்டாள்.

“அடப் பாவமே, எங்க வீட்டுப் பொண்ண, அவன் எதுவும் பிடிவாதம் பிடிச்சு படுத்திறகூடாதேன்னு சப்போர்ட்டுக்கு வந்தா…

சொன்னது நீதானா? ஹையோ ஹையோ கொத்துபரோட்டா

சொன்னது நீதானா?” என இறுதி வரிகளை மூக்கை சீந்துவது போல் ஆக்க்ஷனுடன் பாட,

“கொடுமையே, ஏன்டா உனக்குத்தான் பழைய பாட்டு வராதுல, ஒழுங்கா புதுசா எதாச்சும் பாடேன்” என்றபடி இப்போதும் பவி அவனுக்கு ஒன்று வைத்தாள். சரியாய்  இந்த நேரம்தான் அவர்கள் இருவர் கவனத்தில் படுகிறாள் வேணி.

அவளை கண்டதும் எடுத்தவுடன் “ஹாய் கொடுக்கு, உனக்கு இந்த சொன்னது நீதானா சாங்குக்கு மேட்ச் ஆகுற போல எதாச்சும் புது சாங் தெரியுமா? எனக்கு சட்டுன்னு நியாபகம் வர மாட்டேங்குது” என டாப் கியரில் நட்பு பாராட்டினான் கருண். வேணியைப் பற்றி அனைத்தையும் சொல்லாமல் தேவையான அளவு கருணிடம் சொல்லி இருந்தனர் ப்ரவியும் பவித்ராவும்.

இந்த மொத்த நிகழ்ச்சியில் கருண் மீது வேணிக்கு வந்திருந்தது வெகு நல்ல மரியாதையே. அவன் மீது மிகவும் நல்ல உணர்வே. ஆனால் அவனுடன் எந்த சூழலிலும் பழகவே கூடாது என முடித்துக் கொண்டாள் அவள். அதுதான் அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பது அவளது புரிதல்.

ஆக “வணக்கம் சார், எனக்கு இப்ப எந்த சாங்கும் நியாபகம் வரல சார்” என பதில் கொடுத்தவள்,

“கிட்சன்ல எதாவது வேலை இருக்குதான்னு பார்க்கிறேன் மேம்” என்றபடி சமையலறையைப் பார்த்துப் போய்விட்டாள்.

இதைப் பார்த்திருந்த கருண் “என்னதிது சார் மேம்னு பழக்கி வச்சுருக்கீங்க?” என பவி ப்ரவி முகத்தை ஒரு முறை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டவன்,

“ஹேய் கொடுக்கு, இந்த சார் மேடத்தல்லாம் இவங்களோட வச்சுக்க, என் சமூகத்துக்கு நீ என்னைக்கும் கொடுக்குதான்” என சென்று கொண்டிருந்த வேணியைப் பார்த்து சத்தம் கொடுத்தான்.

“கொடுக்குன்னா தெலுங்குல ஆண் குழந்தைன்னு அர்த்தம், இவன் எங்க வீட்டுக்கு வர்ற குட்டீஸ் எல்லாத்தையும் இப்படித்தான் கூப்டுவான்” என அதற்கு விளக்கம் வந்தது சிரித்த முகமாய் இருந்த பவியிடமிருந்து.

இதுவும் ஒருவாறு நல்லுணர்வையே தருகிறது வேணிக்கு. ப்ரவி பவி சம்மதமும் இதற்கு இருக்கிறது எனும் போது, அதான் ரெண்டு பேருமே எதுவும் மறுப்பா சொல்லலையே, “தேங்க் யூ சார்” என ஏற்றாள்.

“கிழிஞ்சுது, இதுக்கும் சாரா? தெரியுது இந்த SP அவன் வீட்டம்மான்னு உன்ன மிரட்டிட்டாங்க போல, நீ சார்னே கூப்டு நான் கொடுக்குன்னே கூப்டுக்கிறேன்” என டீலை முடிக்க,

“மிரட்டல்லாம் இல்ல சார், ஆனா ஓகே சார்” என இவனது டீலை ஏற்றாள் அவள்.

“நன்றி ஹெய்” இது கருண்.

அடுத்து  காலை உணவுக்குப் பின் ப்ரவி அலுவலகம் கிளம்பிவிட, கருணுடன் பவித்ராவும் வேணியும் வயல் சம்பந்தமான வேலைகளுக்காக வெளியே சென்று வருவதாய் திட்டம்.

உண்மையில் அதிகமான வேலை இருந்ததுதான். வயல் மொத்ததிற்கும் வேலி போட்டு கேட் போட்டு மூடி விடலாம் என்ற யோசனையில் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. ஆட்டுத் தீவன புல்தான் பயிரிடப் பட இருந்தாலும் தென்னை, மா போன்ற மரக்கன்றுகளும் சில நடலாம் என்றும் எண்ணி இருந்தனர். இன்றே அவைகளை தான் வாங்கித் தருவதாக சொல்லி இருந்தான் கருண். பவித்ராவுக்கு திருமணப் பரிசாம் அது. ஆட்டுப் பண்ணைக்கான ஷெட் அமைப்பதையும் பரிசு என்ற பெயரில் தன் பொறுப்பில் எடுத்திருந்தான் அவன். ஆக அது சம்பந்தமாகவும் வெளியே ஆட்களைச் சந்திக்க வேண்டி இருந்தது.

ஆனால் வேணிக்கோ உடன் செல்ல துளியும் இஷ்டம் இல்லை. எப்படியும் முழு நாளும் இதற்குத் தேவைப்படும். அத்தனை நேரம் கருணுடன் இவள் இருக்க வேண்டி இருக்கும். அவன் கலகல என பேசிக் கொண்டே இருக்க, இவள் சார் என்ற ஒற்றை வார்த்தை பதிலில் அதை கையாள வேண்டும். இவளும் நொந்து போவாள். அவனுக்கும் அவமானப் படுத்தப்பட்டது போல் இருக்கும். எதற்கு இதெல்லாம்? என்பது இவள் நிலை.

அடுத்த பக்கம்