துளி தீ நீயாவாய் 10(7)

இதுதான் இவன் பவியின் இயல்பு, இனி இவள் பார்த்துக் கொள்வாள் இந்தப் பிரச்சனையை, ஏன் இவனையுமே கூட சரி செய்து வைக்கத் தெரியும் அவளுக்கு.

தன் கைக்குள் அணைபட்டு, தன் முகம் பார்த்து கிடந்தவளின் நெற்றியை குனிந்து முட்டினான் அவன். அவள் கன்னத்திலாவது இதழ் பதிக்க வருகிறது ஒரு ஆசை.

“என்னதிது கடங்காரன் லுக்?” வேற யாரு இவன் கண்களை கவனித்துக் கொண்டிருந்த குத்துவிளக்குதான் கேட்டுக்கொண்டு இருக்கிறது. முடிந்த வரை விளையாட்டாய் நெருக்கத்தை தவிர்க்கிறாள் என இவனுக்குப் புரிகிறதுதானே!

“அடப்பாவி இத ஹஸ்பெண்ட் லுக்குன்னு சொல்லணும்” சொல்லித்தர முயன்றான். ஆனாலும் அவளைப் பிடித்திருந்த பிடியை தளர்த்தினான்.

“இல்ல சாரே! எனக்கு கடங்காரன் லுக்கா மட்டும்தான் தெரியுது” அவளும் இவனிடமிருந்து விலகிப் போய் எழுந்து கொண்டாள்.

அதை அப்படியே அனுமதித்தவன் “அப்ப ஹஸ்பண்ட்னா என்ன பவி?” சிரித்தபடி விசாரித்தான்.

“நிஜமா எனக்குத் தெரியாது, இது சைல்ட் மேரேஜ்” இப்படியாய் வருகிறது அவள் பதில். கட்டிலில் இருந்து இறங்கி இருந்தாள்.

“அடிங்க” இவனும் எழுந்து அமர்ந்து கொள்ள,

திரும்பி இவனுக்கு பழிப்பம் காட்டிவிட்டு அறையிலிருந்த வாட்ரோபை நோக்கி நடந்தவள், பாதியில் இவனிடமாக திரும்பி வந்து கன்னம் வலிக்க அழுத்தமாய் இவனுக்கு ஒரு கிள்ளு. எதிர்பாராத நிகழ்வென்றாலும் இவன் தடுக்காது அதை வாங்கியபடி, “ஸ்…” எனத் துவங்க, இப்போது கிள்ளிய இடத்தில் மெல்லியமாய் ஒரு முத்தம் அவளிடமிருந்து

அதில் வண்ணமயமாய் இவன் முகத்தில் வந்து பரவிய மலர்ச்சியை விழிகளால் பருகியபடியே “சந்தோஷமா இருக்கு” என சிறு குரலில் உணர்ந்து சொன்னாள்.

அவள் நிறைவாய்தான் சொல்வது போல் இருக்கிறது. ஆனால் இவனுக்கு அதில் ஏதோ இல்லாமல் இருப்பது போல் இருக்கின்றது. “என்னாச்சு பவி?” இவன் விசாரிக்க,

“என்னது என்னாச்சு? சந்தோஷமா இருக்கேன்னு சொன்னா அதுக்கும் இப்படியா கேட்ப? இப்படி பேசுன இனி உன்னைய நான் பக்கின்னு சொல்லிடுவேன்” என்றபடியே நகர்ந்து போய்விட்டாள்.

“பக்கி புருஷா, ஹ ஹா நல்லாதான் இருக்கு ரைமிங்கா” சொல்லிப் பார்த்துக் கொண்டே அவள் போக, அவள் சந்தோஷமாயிருக்கிறாள் எனத் தெரிந்தாலும் அதை ஆம் என முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை இவனால்.

இரவு உடை மாற்ற என குளியலறை சென்றிருந்தவள், சற்று நேரத்தில் வந்து விளக்கணைத்துவிட்டு படுக்கையில் படுத்துக் கொண்டாள். இவன் அவள் புறம் திரும்பி பார்த்தபடி படுத்திருக்க, அவள் மேலே ரூஃபை பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் செல்லவும்

“சாரி ப்ரவி, எதுலனாலும் எது நியாயம்னு உனக்கு படுதோ அதைத்தான் சொல்லுவன்னு தெரியும், இருந்தாலும் இப்ப என்னமோ எல்லாத்திலும் touch me not ஆ ஆகிட்டேன் போல” அவள் மேலேயே பார்த்தபடி சொல்லிக் கொண்டிருக்க,

இவனுக்குத் தெளிவாய் புரிகிறது அவள் இன்னும் நடந்த முடிந்த காரியத்தின் காயத்திலிருந்து முழுதாய் வெளி வரவில்லை என. இவன் “பவிமா” என ஆறுதலாய் துவங்கும் போதே,

“இப்ப இது புரிஞ்சது மாதிரி மத்ததும் டைம் போகப் போக அதா எனக்கு புரிஞ்சிடும் ப்ரவி, நீ எதுவும்  மனச போட்டு குழப்பிக்காத” என இவனுக்கு வருகிறது ஆறுதல் அவளிடமிருந்து. அதோடு மெத்தையின் ஓரத்தில் போய் இவனுக்கு முதுகாட்டி சுருண்டு கொண்டவள்,

“சின்ன வயசில் ரூம்ல தனியா படுக்கிறப்ப முதுகு பக்கம் இருந்து பேய் வந்து பிடிச்சிடும்னு பயப்படுவேன் உனக்கு நியாபகம் இருக்கா ப்ரவி? இப்ப பாரு எனக்கு ஜாலியா தூக்கம் வருது, அதான் பாடிகார்ட் நீ இருக்கியே” என இனிமையான காரியத்தையே பேச,

“குட் நைட்” என பேச்சையும் முடிக்க,

அவள் தூங்கட்டும், எதையும் இப்போதைக்கு கிளற வேண்டாம் என விட்டுவைத்தான் இவன்.

றுநாள் காலை வேணி எழுந்து தன் அறையைவிட்டு வெளியே வரும் போது, ப்ரவி  சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்க, சற்று தள்ளி அமர்ந்து லேப்டாபை நோண்டிக் கொண்டிருந்த கருணிடம் எதோ பேசிக் கொண்டிருந்தாள் பவித்ரா.

ஐடன்டிகல் ட்வின்ஸ் இல்லையென்றாலும் பார்த்தவுடன் கருண் ப்ரவியின் சகோதரன் எனத் தெரியும் அளவு சாயலுடனேயே இருக்க, அது யார் என புரிந்து போயிற்று வேணிக்கு.

பவியும் கருணும் எதைப் பேசி கொண்டிருந்தார்களோ அதன் தொடர்ச்சியாய், “ஆனாலும் நீ அண்ணி ரோல் சும்மா அசத்துற கொத்துபரோட்டா” என சொல்லிக் கொண்டிருந்தான் கருண்.

“நானும் நேத்துல இருந்து பார்க்கிறேன், இப்படியே சொல்ற, அப்ப எந்த ரோல் சரி இல்லன்ற?” இது பவி.

“ஐயோ அப்படில்லாம் உங்கள சொல்லுவனுங்களா அம்மணி?”

“சொல்லுவியே, ஏன் சொல்லமாட்ட? நீதான் வில்லனாச்சே”

“ஆனா நீங்க எங்க வீட்டு ஹீரோயின் ஆச்சுங்களே, எப்பவுமே டாப்டக்கரா மட்டும்தான் சொல்வோமே. ஆனா அட்வைஸ்னு வேணா அர இஞ்சி சைஸுக்கு சின்னதா சொல்லிக்கிறேன்ங்க, உங்க ஆத்துக்காரி ரோல கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணலாம்”

“என்னடா வாய் ரொம்ப நீளுது? உங்க வீட்டு மாப்ளைக்கு இதுவே ஜாஸ்தி”

அடுத்த பக்கம்