துளி தீ நீயாவாய் 10(6)

“நீ உள்ள வந்து 10 நிமிஷம் கூட முழுசா ஆகல, அதுக்குள்ள மணிக்கணக்கான்ற?” அவன் விழிகள் சிரிக்க வினவ, நம்ப முடியாமல் விழித்தாலும், ஔஷத தீண்டல்கள் இவள் அடிமன வெளிகளில், காய பாரங்களில். ‘அப்படி ஒன்னும் இவள அவன் கண்டுக்காம இல்லையா?!’

“கருண படுக்கச் சொல்லி மாடில ரூம காமிச்சுட்டு ஓடி வந்துருக்கேன், அதுக்குள்ள பொண்ணு ஏங்கிப் போச்சா?” அவன் சொன்ன பாங்கில், ரம்யப்பட்ட இவள் அவயங்களில் அத்து மீறலாய் அன்னத் தூவி ஒன்று அதாக வருடிச் செல்கிறது.

வெகு அருகில் இருந்த அவன் பார்வையில், பரிமள சுகந்தம் இசையாகி, அது இவள் இதய நாளங்களில் ஊற்றப்படுவது போல் ஒரு நிலையில் இவள்.

“அப்றம் இந்த அழவிட்டுட்டு சும்மா படுக்கிறது, என்னப் பார்க்க பிடிக்காம, என் கூட இருக்கப் பிடிக்காமதான் நீ வந்து படுத்துகிட்டதா எனக்குப் பட்டுது, நான் வரவும் அழ உனக்கு தனியா இடம் வேணும்னும் சொன்ன, அதான் நான் பேசினா உனக்கு இன்னுமா கக்ஷ்டமா இருக்கும்னு நினச்சேன், இப்பதான் தெரியுது நீ எனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்துருக்கன்னு”

அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையையும், சற்று முன் வரை இருந்த அவன் செயல்களையும் இப்போது புரிந்தாலும் அதை ஒத்துக் கொள்ள இயலவில்லை இவளால்.

“சும்மா சொல்லாத, உனக்கு என் மேல கோபம்”

“ஆமா நான் இல்லைனு சொல்லலையே, ஆனா அத உன்ட்ட காமிச்சுக்க கூட நான் விரும்பலையே” சொன்னபடி அவன் இவள் முகம் அருகிலிருந்து விலகி அவன் இடத்தில் படுத்துக் கொண்டான்.

இவளோ வெடுக்கென அவன் புறமாய் திரும்பிப்படுத்தாள். “எதுக்கு என் மேல கோபம்? நான் என்ன செய்தேன்?”

“இல்ல பவிமா, இப்ப இந்த பேச்சு வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பேசலாம்” இவள் முகத்தை பார்த்தபடிதான் சொன்னான். பொறுமையின் வடிவில் அன்பு இருந்தது அவன் பார்வையில்.

“யார் மேல கோபம்னாலும், அன்னன்னைக்கு சூரியன் மறையுறதுக்குள்ள பேசி தீர்த்துடணும்னு நீதான சொல்வ? இல்லனா அது வளந்து கூடு கட்டி குஞ்சு பொறிக்கும்னுல்லாம் விளக்கம் குடுப்ப?” அவனின் பொறுமை இவளுக்குள்ளும் இறங்கத் துவங்கி இருப்பது குரலின் தொனியில் தெரிந்ததுதான். ஆனாலும் பேச்சை அவள் விடுவதாய் இல்லை.

“உனக்கே தெரியும் பவி, நீ அண்ணா பத்தி பேசினாலே டிஸ்டர்ப் ஆகுற, அது எனக்கு பிடிக்கல” ஆற அமர அவனது இயல்பான தொனியில் விஷயத்திற்கு வந்தான் அவன்.

“ஆக நீயும் தயாப்பா பேசினதெல்லாம் சரின்னு தான சொல்ல வர்ற? நான் உனக்கு யாரோதான?” சிரிக்க முயன்றபடி கேட்டாள் இவள். நேர் மாறாய் கண்ணில் இருந்து சுடச் சுடக் கொட்டுகிறது நீர். அவசரமாய் திரும்பி படுக்கையைவிட்டு எழுந்து போக என இவள் முயல,

அவன் முகம் தவிர்த்து திரும்பியவளை, அவளை விட அவசரமாய் அவள் கரம் பற்றி தன்னோடு இழுத்துச் சேர்த்திருந்தான் அவளவன்.

அன்னத் தூவியாவது, அருவருப்பாவது, அத்தனை நேரம் அழுதிருக்கிறாளே அதற்கு எழுத்தில் வடிக்க முடியாத ஏராள நிம்மதி எங்கெங்கும் பாய்ந்து சூழ்கிறது அவளுக்குள். நாளம், நரம்பு கோளம் என இவள் சரீரத்தின் சகல பள்ளங்களிலும் அவன் எனும் அமைதி ஆழ்ந்து பிரவாகிக்கிறது. அசைய வேண்டும் என்ற சிந்தனை கூட அந்த நொடியே அற்றுப் போகிறது.

ஆனாலும் சின்னதாய் இவள் திமிர, அதே நேரம் இவள் முதுகோடு சூழ்ந்து இவளை இடையோடு வளைத்துப் பிடித்திருந்தவனோ “கன்னா பின்னானு கற்பனை செய்து, லூசு போல ஹர்ட் ஆக கூடாது, நீ எனக்கு அடுத்த ஆளா? அடுத்த ஆள்னு நினைக்கத்தான் கல்யாணம் செய்தனா? நீ எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம், என் வைஃப்ன்ற வகையில் எல்லோரவிட எனக்கு நீ மட்டும்தான் முக்கியம்” என்றும் எதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

அசைய முடிந்தால்தானே இவளுக்கு! ஹார்மோன்லெஸ் காதல் காலம்.

“அண்ணா பேசினத நான் சரின்னே சொல்ல வரல, அன்னைக்கு அவர் பேசினது நடந்துகிட்டது எல்லாமே தப்புதான், இன்னைக்கு வரை எனக்குமே அவர்ட்ட முன்னப் போல பேச வரலன்றத எப்பயாவது கவனிச்சியா நீ?” அவன் சொல்ல, அவளை அறியாமலே திரும்பி அவன் முகம் பார்த்திருந்தாள் இவள்.

‘ஐயோ நான் இவன், இவனப் போல கருண் இப்படி மூனு பேருமே மூஞ்ச தூக்கிட்டு அலஞ்சா தயாப்பா தாங்குவாரா?” என உள்ளே உருக்குகிறதே ஒன்று.

“ஆனா நீ அடுத்த பக்கத்தையும் யோசிக்கணும் பவி, என்னை பொறுத்தவரை அவர்தான் எனக்கும் கருணுக்கும் ஏன் உனக்குமே அப்பா போல. அவருக்கே பிடிக்குதோ இல்லையோ வயசான காலத்துல அவர் நம்ம வீட்லதான் வந்து இருக்கணும், நானும் என் மனைவிங்கிற நிலையில நீயும்தான் அவர பார்த்துக்கணும்.

அவரப் பத்தி பேச்செடுத்தாலே அப்செட் ஆவேன், அவர் படிக்க வச்சதால அந்த படிப்பையே யூஸ் செய்ய மாட்டேன்னு நீ நின்னா அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நிரந்தரமா அவர் நமக்கு வேண்டாம்னுதானே!

அவர் வளர்த்த நீயே அவர சேர்த்துக்க மாட்டேன்னா கருணுக்கு வர்ற பொண்ண அவரை வீட்ல வச்சுக்கோன்னு எதை வச்சு சொல்ல முடியும்? நம்மள தவிர வேற எந்த சொந்தமும் இல்லாதவர், நாம எப்படி அவர விட முடியும்?” பேசிக் கொண்டே போனவனை அவன் வாய் மீது கரம் வைத்து தடுத்திருந்தாள் இவள்.

இவன் சரியாக தயாப்பாவிடம் பேசவில்லை என்றதும் இவளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறதே ஒரு உருக்கம், அதன் ஒரு வகை விலாவாரி விளக்கம்தானே அவன் வார்த்தைகள்!

முழு முகத்திலும் புன்னகை தளும்ப, “நான் எங்க சொன்னேன் அவரப் பத்தி பேசினாலே எனக்கு கோபம் வருதுன்னு? இந்த கரண்டிதான் கண்டபடி புரிஞ்சுகிட்டு கடுப்பேத்திச்சுன்னா நீ வேற கோபப்பட்ட, அதுலதான் எனக்கு கஷ்டமாகிட்டு” இன்றைய நிகழ்வின் துவக்கத்தை தெளிவாய் வரையறுத்தாள் இவள்.

“ஆக்சுவலி நேத்தே பல்ப் எரிஞ்சிட்டு எனக்கு, தயாப்பா பேசினத வெறும் கோபம்னு எடுத்துருக்கணும், அதை காட்ட அவர் என்ன வார்த்தைய சொன்னார்னு கண்டுட்டு இருந்திருக்க கூடாதுன்னு யோசிச்சேன், நீயும் அப்படியே யோசி, அவர் மேல உள்ள வருத்தம் போய்ரும்” அவனுக்கும் சொல்லிக் கொடுத்தாள். வெகு வெகுவாக இலகுவாகி இருந்தாள் அவள். அவளது அடையாளமான துருதுருப்பின் துள்ளல் கூட திரும்பி வந்திருந்தது அவளிடம்.

அவள் முகத்தில் மட்டுமல்ல இப்போது இவன் முகத்திலுமே பெரிதும் அழகுமான நிம்மதிப் பூக்கள், இலகுப் புன்னகை. இனி எல்லாம் சரியாகிவிடும் என இவனுக்குத் தெரியும்.

அடுத்த பக்கம்