துளி தீ நீயாவாய் 10(5)

“என்ன நீ பேச்ச மாத்துற? நான்தான் சொன்னேன்ல இந்த டைம் முடிவெல்லாம் உன்னோடதும் நம்ம பெரியதலையோடதும்னுதான்னு” இங்கு கருண் இப்படிச் சொல்ல,

ப்ரவியோ “டேய் எத்தன தடவ சொல்லியிருக்கேன், முடிவு மட்டும் எப்பவுமே உன்னோடதாதான் இருக்கணும். யார கல்யாணம் செய்யணும்னு கூட முடிவு எடுக்கத் தெரியாதவனாடா அடுத்து அந்தப் போண்ணோட சேர்ந்து வாழ்க்கைல சின்னது பெருசுன்னு எல்லாத்துக்கும் முடிவு எடுத்துடுவ? அண்ணாவுக்கு ஃப்ரொஃபைல்ஸ அனுப்பு, ஆனா முடிவு உன்னோடதுதான்” என திருத்தினான்.

ப்ரவியின் இந்தக் கருத்தில் 100% பவிக்கு உடன்பாடுதான் என்றாலும், இதற்கும் அவள் தன்னவன் புறம் பார்வையை நகர்த்தவே இல்லை. ப்ரவி இப்போது இவளை பார்க்கிறானோ என ஒரு உந்துதல் வேறு. ஆக அவனை தவிர்ப்பதற்காக அந்த பெண்களை பற்றிய தகவல் படிவங்களை எடுத்து வர என்பது போல சட்டென தன் அறை நோக்கி நடக்கத் துவங்கிவிட்டாள்.

அடுத்து கருணும் இரவு உணவை முடித்துவிட்டு வந்திருப்பதாகச் சொல்லவும், சில பழங்களை வெட்டி ஒரு தட்டிலிட்டு இரு ஆண்களுக்குமாக வைத்துவிட்டு இயல்பு போல் தன் அறையில் வந்து படுத்துவிட்டாள் பவித்ரா.

வெகு நேரம் தன் படுக்கையில் கிடந்து அழுது கொண்டிருந்தாள் அவள். எதெற்கெல்லாமோ வருகிறது அழுகை. சில யுகங்கள் போல் தோன்றிய சில காலங்கள் கழித்து கதவைத் திறந்து கொண்டு  ப்ரவி உள்ளே வந்தான். அவன் முகம் கூட பார்க்காமல் மெத்தையில் குப்புற படுத்துக் கொண்டாள் இவள்.

அவன் நின்று இவளைப் பார்க்கிறான் என்பதை உணர முடிகிறது. அதில் ஏனோ இன்னுமாய் வெடித்துக் கொண்டு வருகிறது இவளுக்கு. “எனக்கு அழுறதுக்காவது தனியா இடம் வேணும்” என்றபடி தலையணையில் முகம் புதைத்து குலுங்கினாள் இவள்.

அவன் கடகடவென படுக்கையை, அதிலிருந்த இவளை கடந்து போய்விட்டான். சில நொடிகள் இன்னும் அழுகையில் தொடர்ந்தவள், அடுத்து எதோ கதவு திறக்கப்படும் சத்தத்தில் விலுக்கென தலை நிமிர்ந்து பார்க்க, கையில் தனது யூனிஃபார்மோடு குளியலறைக் கதவை திறந்து கொண்டிருந்தான் ப்ரவி.

அதாவது கிளம்பி அலுவலகம் செல்லப் போகிறான் இத்தனை மணிக்கு. அவ்வளவுதான் அந்தத் திருடன், மற்ற கேஸ் என எல்லாம் இப்போது இவளுக்கு ஞாபகத்தில் வர பட்டென எழுந்தவள், “என்னாச்சு? எதுவும் எமெர்ஜென்ஸியா?” என கேட்டுவிட்டாள்.

“ப்ச் இல்ல, உன் கூட இருக்கக் கூடாதுன்னா, நான் வேற எங்க போக?” என வருகிறது அவனது பதில். எரிச்சல் கெஞ்சல் எதுவும் இல்லா என்னவோ ஒரு தொனி. இவளுக்கு எங்கோ பிசைந்தது. ‘உன்னவிட்டா எனக்கு யார் இருக்கா?’ என கேட்காமல் கேட்கிறான் என்பது மெல்லவே மெல்லமாய் புரிந்தது.

இவளை என்ன இருந்தாலும் அடுத்த வீட்டுப் பெண் என என்ணுகிறான் என்பதுதானே இவளது அனைத்து ஆற்றாமைக்கும் காரணம். அது இந்த வார்த்தைகளில் தலையில் அடிவாங்கி சட்டென விழுந்து போகிறது.

அதற்காக இவள் சமாதானம் ஆகிவிட்டாள் என்று இல்லை, கண்ணிலிருந்து நீர் இறங்குவது இன்னும் ஓயவில்லை என்றாலும், வேகமாய்ப் போய் அறையின் தாழை உட்புறமாக பூட்டிவிட்டு வந்து மீண்டும் படுகையில் சரணம்.

அவன போகாத, இங்க இருன்னு சொல்லியாச்சுதான!

சில நொடிகள் அவன் என்ன செய்கிறான் எனப் புரியவில்லை. படுத்ததில் கட்டிலின் குறுக்காக நீண்டு போய் கிடந்த இவள் புடவை முந்தானையை இவள் புறமாக நகர்த்திவிட்டு அவன் படுக்கையில் உட்காருகிறான் என்பதை அடுத்து உணர முடிந்தது.

ஏதாவது விசாரிப்பான், கொஞ்சமாவது ஆறுதல் சொல்ல முயல்வான் என இவள் மனம் இங்கு ஏங்கித் தவிக்க, ‘அப்படி மட்டும் விசாரிக்கட்டும் இவன பிச்சு பீஸ் பீஸாக்கிறேன்’ என ஒன்றும் இவளுக்குள் கொதிக்க, அங்கு அவனோ படுத்துவிட்டான்.

இவள் அழுது கொண்டிருக்கும் போது அவனுக்கு சும்மா படுக்க முடிகிறதென்றால் இவளுக்கு எப்படி இருக்கிறது அது?

அவ்வளவுதான் “அதான் உனக்குத்தான் என்ன பிடிக்கலியே? அப்றம் எதுக்கு என்ன கல்யாணம் செய்த?” வெடித்துக் கொண்டு வந்ததை வெளிப்படையாய் கேட்டேவிட்டாள் இவள். அவன் புறம் திரும்பவே இல்லை.

“பிடிக்கலைனு யார் சொன்னா?” இது அவன்.

“இதச் சொல்ல ஆள் வேற வரணுமா? Action speaks louder than words”

“ஓஹோ அப்படி என்ன ஆக்க்ஷன கண்ட?”

“உன்னாலதான் நான் அழுதுட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் மணிக்கணக்கா ஆளக் காணோம், இந்தா இப்ப கூட என்ன அழவிட்டுட்டு சவகாசமா படுத்துக் கிடக்க?” இவள் சுள்ளெனும் தொனியில்தான் சொன்னாள், ஆனால் அவனிடமிருந்தோ சாக்லேட் பதத்தில் வருகிறது ஒரு “ஏ லூசு”

அதிலேயே அவளது தவிப்பெல்லாம் அடைபட்டு போனது என்றால், இவளுக்குப் பின்னால் படுத்திருந்தவன் இப்போது இவளைத் தாண்டி ஒரு கையை ஊன்றி, அடுத்து அவன் முகத்தை வேறு இவள் முகப் புறம் கொண்டு வந்து, இவள் விழிகளைப் பார்த்தபடி “அவ்வளவா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த?” என்றான் கண்கள் சிரிக்க.

அவனின் அத்தனை அருகாமையாலா? அந்தக் கேள்வியாலா? அதிலிருந்த உண்மை இவளுக்குப் புரிபட்டதாலா? அல்லது அத்தனையுமினாலா? மொழுக் என அடி வயிற்றில் எதுவோ ஒரு ரம்யம் உடைப்பெடுக்கிறது இவளுக்கு.

அடுத்த பக்கம்