துளி தீ நீயாவாய் 10(4)

அது காதில் விழவும் “அச்சோ இப்படியேவா? சுத்தி அலஞ்சு டயர்டா வந்து நிக்றேன்டா” என இவள் மறுக்க, அதற்குள் ப்ரவியோ இவளுக்கு வெகு அருகில் வந்திருந்தவன், வெகு இயல்பான தொனியில் “அதெல்லாம் அழகாதான் இருக்க” என்றபடி இவளை நெருங்கி நிற்க,

அங்கு கருண் “என்னடா இது? அட்டென்ஷன்ல நிக்றாப்ல இருக்கு” என அதற்கு கமென்ட் செய்ய, இவளை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்ட ப்ரவி, இவளது முதுகோடு கை போட்டு இவள் புயத்தை பற்றிக் கொண்டான். அதாவது ‘நான் உன்ன தொடப் போறேன், ஓகேவா?’ என சொல்லிவிட்டு தொடுவது போல இது.

இப்போது பவிக்கு வந்தது அந்தோ பரிதாப நிலை. அவன் பாட்டுக்கு தோள்ல கையப் போட்டுட்டு போய்ருக்கலாம். இதுவானால் இப்படி அவன் அனுமதி கேட்கவும், ‘ஐயையோ தொடப் போறான்’ என ஒரு ஆன்டெனா அறிவிக்கிறது என்றால், இடையிலிருந்தா அல்லது புயத்திலிருந்தேவா? இவளுக்குள் எங்கிருந்தோ இடக் காலின் இரண்டாம் விரல் வரை பாய நிற்கிறது ஒரு குறுகுறுப்பு. கூடவே அதை அப்படியே அடித்து கட்டும் வகையாய் ‘தெய்வமே தெய்வமே எதுவும் எனக்கு அருவருப்பா தோணிற கூடாதே’ என்ற பயமும் பற்றிக் கொள்கிறது. அதில் அவன் கைபட்டதும் ஊசிமுனையாய் குறுகியது அவள் தேகம்.

இப்போது இம்மியளவும் சிந்திக்க இடைவெளி தராது எழுந்து வருகிறது அடுத்த பயம். ‘ஐயோ ப்ரவிக்கு இது தெரிஞ்சிருக்குமோ? ஹர்ட் ஆகிடுவானோ?’

அதற்குள் “உன்னப் போலவே இல்ல, க்யூட்டா இருக்குடா ஃபோட்டோ” என கலாய்த்தபடி இப்போது கருண் மொபைலில் இவர்களது படத்தை நோண்டத் துவங்க, ப்ரவி இவளைவிட்டு விலகி கருணிடம் சென்றுவிட்டான்.

‘இயல்பாகத்தான் விலகினானா? அல்லது ஹர்ட் ஆகிட்டானா?’ தவிப்பாய் அவன் முகத்தை வாசிக்கலானாள் இவள். மாற்றம் எதுவுமின்றி அவன் இயல்பாய் இருப்பது போலத்தான் தெரிகின்றது ஆனாலும் இவளுக்குத்தான் மனம் அமரவே இல்லை.

“நம்ம பெரிய தலைக்கு அனுப்புறேன்டா, பார்த்து கண்ணுல தண்ணி வச்சுக்கும்” என்றபடி கருண் இப்போது அந்த படத்தை தயாளனுக்கு அனுப்ப முயன்றவன், ஏதேச்சையாய் நிமிர்ந்து இவளைப் பார்க்க,

இஞ்சி திங்கும் மங்கி போல் இருந்த இவள் முகபாவத்தை காணவும், தயாளன் பற்றிய பேச்சுக்குத்தான் இவள் வருந்துகிறாள் போலும் என தவறாகப் புரிந்து கொண்டு “என்ன நீ? இன்னுமா அதவிட்டெல்லாம் வெளிய வரல? அது உன் தயாப்பா லூசு, இப்ப என்ன? ப்ரவி கூட சந்தோஷமாத்தான இருக்க? அப்றம் அவர் மேல மட்டும் என்ன வருத்தம்?” என  அதட்டலாய் ஆறுதல் சொன்னான்.

இதில் இவள் கண்கள் அனிச்சையாய் ப்ரவியை நோக்கித் திரும்ப, அங்கு அவன் கண்களில் பாளம் பாளமாய் ஊறிப் படிகிறது பரிபூரண கோபம். அதன் அடையாளமாய் கணிசமான அளவு எரிச்சல். கூடவே அதை வெளிக்காட்டாமல் அடக்கிப் போட்டிருக்கும் அவன் முறைமையும்.

இத்தனை காலமாய் அவனோடு வளர்ந்தவளுக்கு அவனுக்கு கோபம் வருகிறதா இல்லையா என்று கூடவா தெரியாது? தயாப்பாவை பற்றி இவள் உடைந்து போய் பேசும் போதெல்லாம் அவன் கோபப்பட்டதும் சேர்ந்து இப்போது மனதில் வர, அடுத்து ப்ரவியின் புறம் இவள் திரும்பவே இல்லை.

‘ஆக தாயாப்பா பேசினதுதான் இவனுக்கும் சரின்னு படுது, நான் செய்றதுதான் இவனுக்கு தப்பா தெரியுது. என்ன இருந்தாலும் தயாப்பா அவன் சொந்த அண்ணா, நான் வெளியாள்தான?’ இப்படி இவள் நினைவுகள் ஓடத் துவங்கியபின் இவளால் எங்கு ப்ரவியை பார்க்க இயலும்?

கருண் முன்னால் கண்ணில் நீர் விட்டுவிடக் கூடாது என்பது மட்டும்தான் இப்போது இவளுக்கு தலையாய வேலையாக இருக்கிறது. முழு மொத்தமாய் தன்னை அடக்கியபடி, சாதாரண வாயாடல் போல் “என் கையால அடி வாங்கவா எரும அவசரமா ஓடி வந்த?” என கருணிடம் மட்டும் பேசினாள்.

கருணுக்கு எது புரிகிறதோ இல்லையோ, இவன் வார்த்தைகளில் அவள் சந்தோஷம் வடிந்து போனது என்பது மட்டும் தெளிவாகத் தெரிய,

“ஓடி இல்ல, பறந்து வந்தேன், நட்ட நடு ராத்ரில போய் என் மாமனார கண்டு பிடிக்கேன்னு சொல்லிட்டு, ரெண்ண்ண்ண்டு நாளாகியும் நீ ஒன்னுமே செய்யலைனா நான் என்ன செய்ய?” அவனின் உடனடி பதில் இது. இலகுவாக்க முயன்றான்.

இது பவிக்குமே பேச்சை இலகுவாக்கும் கருவியாகப் பட “அடப்பாவி உனக்கே இது அநியாயமா இல்ல, ரெண்டு நாள்ல எப்படிடா பொண்ணு கிடைக்கும்? இன்னைக்குத்தான் இங்க ஒரு சர்ச்ல மேட்ரிமோனில பதிஞ்சுட்டு, அங்க உனக்கு சரியா இருக்கும்ன்ற போல தெரிஞ்ச மூனு ப்ரொஃபைல் எடுத்துட்டு வந்தேன். இனிதான் விசாரிக்கணும்” என பதில் கொடுத்தாள்.

இவள் விரும்பியது போலவே “ஆனாலும் கொத்து பரோட்டா நீ அண்ணி ரோல்ல அமர்க்களம் பண்ற போ” என இப்போது ஜோதியில் ஐக்கியமான கருண்,  ”இங்க இருந்து பொண்ணா? பெங்களூர்க்கு அனுப்ப சரின்னு சொல்வாங்களா என்ன?” என விசாரித்ததில் பேச்சு சந்தோஷ காரியங்கள் புறம் திசை திருப்பியது.

“இங்கன்னா, இங்க உள்ள பொண்ணுங்க, வேலை செய்றது பெங்களூர், அப்படி பார்த்து எடுத்தேன்டா, உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் வசதியா இருக்கும்ல, அதுதவிர இன்னொரு ப்ரொஃபைலும் ஏனோ பிடிச்சுது, அதையும் எடுத்துட்டு வந்தேன்”  இவள் சொல்ல,

“இங்க உனக்கு எந்த சர்ச் தெரியும் பவி?” என இப்போது பேச்சில் தலையிட்டது ப்ரவி. கோபம் எதுவும் அவன் குரலில் இல்லை. ஆனாலும் பவிக்கு அவனிடம் பேச விருப்பம் இல்லை.

“திரவியபுரம் போக புது பஸ்ஸ்டாண்ட் போனப்ப, இந்த சர்ச் பக்கத்தில் இருந்துதா, பார்க்கவும் போகணும்னு தோணிச்சு, சரின்னு திரும்பி வர்றப்ப நானும் வேணியும் போனோம், போறப்ப லேடீஸ் மீட்டிங் போய்ட்டு இருந்துது, பிடிச்சுது, சர்ச் ரொம்பவும் பெருசு, அப்பன்னா மேட்ரிமோனி சர்வீஸும் இருக்குமேன்னு தோணவும் விசாரிச்சு பதிஞ்சுட்டு ஃப்ரொபைல்ஸ் எடுத்துட்டு வந்தேன், ஆனா எதுனாலும் நீதான் நிதானமா முடிவு செய்” என கருணிடம் மட்டுமே பேசினாள் பவி.

அடுத்த பக்கம்