துளி தீ நீயாவாய் 10(3)

வேணியை படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவளது அறை கதவை மூடியபடி வெளியே வந்த பவிக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது. அடுத்த நொடி “எரும பன்னி பக்கி சொல்லாம கொள்ளாம வந்து இப்படியா ஷாக் கொடுப்ப” என்றபடி ஓடிப் போய் தங்கள் வரவேற்பறையில் நின்றிருந்த கருணின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள் இவள்.

பெங்களூரிலிருந்து எந்த தகவலும் கொடுக்காமல் வந்திருக்கிறான் கருண்.

இவளை விட உயரமான கருண், நின்ற நிலையில் ப்ரவியிடம் பேசிக் கொண்டிருந்தவன், இவள் அடிக்க வாகாக முதுகை சற்று குனிந்து கொடுத்து இவள் அடியை வாங்கிக் கொண்டு இவளைப் பார்த்து திரும்பினான். ஈஈஈஈஈ

சட்டென விழுந்து போனது இவள் முகம்.

“ஏன்டா என்னப் பார்த்து இரக்கப்படுற?” முகம் சுண்ட கேட்டாள். பின்ன வழக்கமா இப்படியா குனிஞ்சி கொடுத்து மொத்து வாங்குவான் அவன்?

“ஹலோ இது உங்க மேல வந்த இரக்கமில்லைங்கோ, என் மேல எனக்கு இருக்குற அக்கறை, போலீஸ்காரன் வீட்டம்மாவ அவர் கண்ணு முன்ன கை நீட்டினா அடுத்து என் கை என்னாகும்ங்க?” என வருகிறது கருணின் காரணம்.

“போடா ஃப்ராடு, முன்னயும் அவங்க முன்னாலதான அடிப்ப நீ?” ஒத்துக்கொள்ள முடியாமல் கண்டணமாய் இவள்.

வழக்கமாய் இதற்கு வாரலாய் எதாவது பதில் சொல்லும் கருண், இப்போது ஏனோ ஒரு ரசனையாய், மொத்த பூரிப்பாய் ஒரு கணம் இவளைப் பார்த்தான். எப்போதும் ப்ரவியை இவனிடம் ஒருமையில் பேசும் அவள் ‘அவங்க’ எனச் சொல்வதே இவனுக்கு விதமாய் அழகாய்படுகிறது. திருமணத்திற்குள் இது ஒருவகையில் அன்யோன்யத்தை குறிக்கும் சொல் அல்லவா நம் வழக்கத்தில். அதுதான் அவன் ரசனையையும் பூரிப்பையும் கிளறிவிட்டது.

உண்மையில் பவி அப்படி உணர்ந்தெல்லாம் சொன்னாளா என்ன? வேணியிடம் பேசிக் கொண்டிருந்த பழக்கத்தில், அதோடு ப்ரவியை இங்கு யாரிடமும் ஒருமையில் குறிப்பிட்டுவிடக் கூடாதே, அது அவனுக்கு அவமரியாதையாகிடுமே என அவள் அதீதகவனமாய் மரியாதைப் பன்மையில் பேசும் பாங்கில், அவளே உணராமல் சொல்லிவிட்டதுதான் இது. ஆக கருண் இப்படி பார்க்கும்படி இங்கு என்ன இருக்கிறது எனப் புரியாமல் பேந்த விழித்தாள்.

அதில் அரைநொடிக்குள் தன்னை சுதாரித்த கருண் “அப்பவே அவன் முறைப்பான் மை டியர் கொத்துபரோட்டா, இப்ப நிச்சயமா கும்மாங்குத்து guarentee, இல்லையா ப்ரதர்?” என தன் வழக்கத் தொனிக்கு வந்தான். ப்ரவியை பேச்சுக்குள் இழுத்தான்.

கருணின் தடுமாற்றத்தை தானும் அப்போதைக்கு அசட்டை செய்து அவனது பேச்சில் கவனத்தை திருப்பிய பவி “போடா இவனே” என ப்ரவியிடமிருந்து இதற்கு பதில் வரும் என்ற எதிர்பார்ப்போடு ப்ரவியிடம் திரும்ப, அவனோ “ஆமா பின்னிடுவேன்ல” என தன் தம்பிக்கு ஒத்து ஊதி, இவளுக்கு ஓட்டுப் போட்டான்.

இதில் இவள் ப்ரவியை முறைக்க, இவள் பார்வையை தாங்கிய இவளவனோ இவளை அணு அணுவாய் பருகுவது போல் பார்த்துக் கொண்டு நிற்கிறான். குறும்பு, சீண்டல் என எதுவுமற்ற plain & pure சைட் அடித்தல் அது.

எப்படி தாங்குவாளாம் இவள்? அவசரமாய் அவனைத் தவிர்த்து இவள் திரும்ப, இங்கு கருணின் கண்களில் இவர்கள் இருவரையுமாய் ரசிக்கும் ரசனையும் பூரண பூரிப்பும் பொங்கி நிற்பது ஏதேச்சையாய் இவள் பார்வையில் படுகிறது.

இவளுக்கு கருண் எதை கண்டு கொள்கிறான் என கொஞ்சம் புரிந்ததுபோல் இருக்கிறது.

இதற்குள் திரும்பவும் தட் ஈஈஈஈஈ மோட்க்கு அவசரமாய் முகத்தை மாற்றிக் கொண்ட கருண் “எவன்டா அவன் எங்க வீட்டு கொத்து பரோட்டாவ இப்படி ஈஸ்ட்மேன் கலர் இஸ்திரி பெட்டியா ஆக்கி வச்சது? கேட்க ஆள் இல்லைனு நினைப்பா?” என எகிறினான். பேச்சை மாற்றினான். இவளை பழையகால குடும்பப் பெண்போல் புடவை கட்ட வைத்திருக்கிறான் ப்ரவி என்கிறான்.

“டேய் கரண்டி அவங்க ஒன்னும் என்ன சேரி கட்ட சொல்லல, இங்க எங்கம்மா ஊர் தெரியும்ல, அங்க ஒரு ஆஃபீஸுக்கு போய்ட்டு வந்தேன்டா, கிராமம்ல, அங்க ஒரு ஆபீஃஸ்க்குன்னு போறப்ப இதுதான் சரியா இருக்கும்” என விளக்கம் சொன்னாள் பவி. வீட்டில் இவள் புடவை கட்டி இருப்பது அவனுக்கு வித்யாசமாய் தெரியும்தானே. அமரகுளத்திலேயே இவள் சல்வாரில்தானே சுற்றுவாள்.

இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவளை மீறி இவள் பார்வை ப்ரவியின் மீது போய் வருகின்றது. முன்பு அவனை எரிச்சல் படுத்தவே இவள் புடவை கட்டியது உண்டே! அவனோ அதையெல்லாம் யோசித்தானா என்றே புரியவில்லை. இன்னும் அதே P&P சைட் அடித்தலில் நிலைத்திருந்தான்.

தெறித்தாற் போல அவனிடமிருந்து பார்வையை உருவிக் கொண்ட இவள், இப்போது கருணைப் பார்க்க, அங்கு அவனிடம் அதே அந்த ரசனை, பூரிப்பு, இத்யாதி.

கருண் எதை கவனிக்கிறான் என இவளுக்கு முழுதுமே புரிந்து போனது

“டேய்ய்ய்ய்!” கத்த நினைத்த இவள் குரல் பாதி சிணுங்கலாயும் வருகிறது. “என்னடா உனக்கு என்னப் பார்த்தா என்னதா தெரியுது?” என இவள் கேட்கும் முன்னும்,

“சாரி கொத்து பரோட்டா வெரி சாரி, இதெல்லாம் கண்டுக்காம விடணும்னு அறிவுக்குத் தெரியுது, ஆனா பார்க்க பார்க்க ரொம்ப நிறைவா இருக்கா, அது முகத்துல வந்துடுது” என ஒரு விளக்கம் சொன்னான் கருண்.

“லூசாடா நீ? எப்பவும் போலதான இருக்கோம்?” மீட்கப்பட்ட தன் கெத்துக் குரலில் கேட்டாள் இவள்.

“ஆமா, இப்பதான் எப்பவும் போல ரெண்டு பேரும் முழு சந்தோஷமா இருக்கீங்க” என வருகிறது கருணின் பதில்.

“ரெண்டு பேரையும் இப்படி பார்க்கவே பாந்தமா இருக்கு, எப்பவும் இப்படியே இரு பவி” என்று முடித்தான். இப்போது அவன் முகத்திலிருந்த பூரிப்பு மறைக்கப்படவில்லை.

ஏனோ தன்னவனை மீண்டுமாய் நாடுகிறது இவள் நயனங்கள்.

“டேய் பவி பக்கத்துல வந்து நில்லுடா, ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்” என அதே நேரம் தன் அண்ணனை அழைத்தான் கருண்.

அடுத்த பக்கம்