துளி தீ நீயாவாய் 10

மரண காயம் கண்டிருந்த நெஞ்சில் குத்து ஈட்டி சொருகியது போல் துடித்துக் கொண்டிருந்தாள் வேணி. கிடுகிடு என ஆடிக் கொண்டிருந்தது அவளது தேகம். புகைப்படத்திலிருந்த காட்சி அவளுக்குள் கொண்டு வந்திருந்த பிரளயம் அது.

கூடவே காதில் விழுகிறது பவித்ராவின் “வேணி என்னாச்சு வேணி?” என்ற தவிப்பின் குரல். அதோடு மனதில் வருகிறது காலையில் இவள் காதில் விழுந்த பவிக்கும் ப்ரவிக்குமான அந்த உரையாடல். “என் மனச நம்புறதவிட உன்னத்தான் நம்புறேன் ப்ரவி” என்ற பவியின் அந்த வார்த்தைகள்.

‘அதற்கும் இந்த புகைப்படத்துக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ? பவிக்காக்கும் SP சாருக்கும் இடையில் எதுவும் ப்ரச்சனை இருக்குதோ? அதை ஊதி பெருசாக்க யாரும் இப்படி ஃபோட்டோ அனுப்புறாங்களோ?’ இப்படியாக ஓடியது வேணியின் மனம்.

‘அப்படின்னா இந்த லெட்டர் பவிக்காக்கு வந்துருக்கணும், அவங்க பேக்கையும் சேர்த்து நான் கைல வச்சுகிட்டு இன்னைக்கு சுத்துனப்ப யாரோ அவங்களுக்குன்னு நினச்சு என் பேக்ல வச்சுருப்பானா இருக்கும், மத்தபடி எனக்கு எதுக்கு இந்த ஃபோட்டோ?’ இப்படியாய் இவள் மனம் சுதாரிக்க,

அவசர அவசரமாய் அந்த புகைப்படத்துடன் இருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். இவள் நினைத்தது சரிதான். கடிதம் பவித்ராவுக்குத்தான் எழுதப்பட்டிருந்தது.

புகைப்படத்தில் இருக்கும் அந்தப் பெண் இந்த ஊரில் விபச்சாரத்தில் பிரபலமாயிருப்பவளாம். ப்ரவி அவளது வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறானாம். எப்படியாவது பிடிவாதம் பிடித்தோ, அல்லது உன் வீட்டினர் மூலம் அவனை கட்டாயப்படுத்தியோ, இந்த ஊரிலிருந்து கூட்டிப் போய்விடு என பவிக்கு வழிமுறை சொன்னது அக்கடிதம்.

என்ன இருந்தாலும் உன் வீட்டுக்காரன இப்படி பார்க்க உனக்கு கஷ்டமா இருக்கும்னுதான் இப்படி ஒரே ஒரு சாதாரணமான ஃபோட்டோ அனுப்பி இருக்கேன். இதை நம்ப மாட்டேன், எனக்கு இன்னும் எவிடென்ஸ் வேணும்னு உனக்கு பட்டுதுன்னா மட்டும் அந்த அவளோட வீட்ல போய் பாரு. கீழ அட்ரெஸ் கொடுத்துருக்கேன். தினமும் மதியம் 2ல இருந்து 3 மணிவரை உன் வீட்டுக்காரன் அங்கதான் இருப்பான். அங்கெல்லாம் போய் நீ அலையுறத விட அவன ட்ரான்ஸ்பர் வாங்கி கூட்டிட்டுப் போக வழியப்பாரு. நான் உங்கள கஷ்டப்படுத்த இதை செய்யல, உதவி செய்ய மட்டும்தான் இருக்கேன் என்று போனது கடிதம். ஒரு முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதற்குள் இங்கு இவள் அறைக்கதவு தட்டப்படும் சத்தத்தின் அளவு அதிகரிக்க, ப்ரவியின் அழுத்தமான “வேணி என்ன செய்ற?”வும் இவள் காதில் விழ, கிடைத்த சில நொடியில் கடிதத்தையும் புகைப்படத்தையும் சுருட்டி மடக்கி அவளது பேக்கிற்குள் திணித்து மூடி வைக்கத்தான் தோன்றியது இவளுக்கு.

ஆம் விஷயத்தை பவியிடம் சொல்லவே வேண்டாம் என நினைத்துவிட்டாள் வேணி. எப்படியும் எதோ ஒரு ப்ரச்சனை பவிக்காவுக்கும் SPசாருக்கும் இடையில இருக்கு. அந்த சிச்சுவேஷன்ல இந்த லெட்டர் பவிக்கா மனச குழப்பிடவும் செய்யலாம். அதோட ஃபோட்டோவ பார்க்க இவளுக்கே திகீர்னு இருக்கே பவிக்காவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்! எப்படியும் SP சார் நல்ல டைப், ஆக இந்த லெட்டர இப்ப மறச்சுடலாம். இதுக்கு மேலயும் விஷயம் பெருசாச்சுன்னா அப்ப பார்த்துக்கலாம் என அவசர அவசரமாக முடிவுக்கு வந்தவள், லெட்டரையும் புகைபடத்தையும் மறைத்துவிட்டு ஓடிப் போய் கதவைத் திறந்தாள்.

“என்னாச்சு வேணி?” ஆறுதலாய் இவள் கைகளைப் பற்றிக் கொண்டு பவி அக்கறையாய் தவிக்க, ப்ரவியின் கண்களோ இவள் முகத்தையும் அறையையும் துளாவின.

“ப… பயந்துட்டேன்க்கா…மேம்” இதுவும் உண்மைதானே… சொல்லி சமாளித்தாள் வேணி.

“நாங்கல்லாம் இருக்கப்ப அப்படி என்ன பயம்?” என பவி இப்போது தாய்மை துலங்க இவளை தோளோடு பற்ற,

“கொஞ்ச நேரம் அவ கூட உட்கார்ந்து பேசிட்டு இரு” என பவியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான் ப்ரவி, சற்று நேரத்தில் ஒரு குவளையில் நீரோடு வந்தவன், “இத குடிச்சுட்டு படுக்கச் சொல்லு, நீ வர்றப்ப ப்ரே பண்ணி விட்டுட்டு வா, மனசுக்கு தைரியமா இருக்கும்” என பவிக்கே மீண்டும் இன்க்ஷ்ட்ரெக்க்ஷன் கொடுத்தான்.

அடுத்து இவளை நோக்கி “அடுத்த ரூம்லதான் இருக்கோம், சின்னதா சத்தம்னா கூட இப்ப போல உடனே வந்துடுவோம், எதுக்கும் பயந்துகிடாத, அப்றம் இன்னொன்னு, யாரும் வந்து உன்ன பத்தி எங்கட்ட எதுவும் சொன்னா, அத நம்பிகிட்டு நாங்க உன்ட்ட முகத்த தூக்குவோம்னுல்லாம் எதுவும் யோசிச்சுக்க கூடாது, பிரச்சனைல இருந்து நீ வெளியில வரணும்ன்றதுதான் பவிக்கும் எனக்கும் எதிர்பார்ப்பே தவிர, நடந்து முடிஞ்ச விஷயங்களுக்காக உன்ட்ட கோப்படுற உரிமை எங்களுக்கு இல்லைனு நினைக்கிறோம்” என அடுத்த வகுப்பின் ஆசிரியை தொனியில் சொல்லிவிட்டு, பவியைப் பார்த்து சின்னதாய் தலையாட்டிவிட்டு கிளம்பிப் போனான்.

‘யாராவது உன்ன பத்தி எதாவது எங்கட்ட போட்டு கொடுத்துடுவோம்னு மிரட்டினா பயந்துகிடாதே, நாங்க உனக்குத்தான் சப்போர்ட் செய்வோம்’ என்பதைத்தான் சற்றும் உரிமை எடுக்காமல் விலக்கி நிறுத்தி சொல்லிவிட்டுப் போகிறார் SP சார் என்பது இவளுக்கு புரிகின்றதுதானே!

அடுத்த பக்கம்