துளி தீ நீயாவாய் 9(3)

கையிலிருந்த அந்த காகிதத்தையும் அதற்கான நோட்டையும் தங்கள் அறை கப்போர்டிற்குள் பத்திரப்படுத்திவிட்டு, ப்ரவியிடம் போக எண்ணியவள், அதற்காக கப்போர்டை திறக்கும் போது கண்ணில் படுகிறது நேற்று அவன் தந்த நகைப்பெட்டி.

‘ஹூம் நம்மளால இவ்ளவு பணம் வேஸ்ட்’ என்ற நினைவோடே அதை இவள் கையில் எடுத்தாள். இவள் மட்டும் இத்தனை ஆர்பாட்டம் செய்து வைத்திருக்கவில்லையெனில், இவள் கோபம் போனதற்காக என இப்படி செலவழித்திருக்க மாட்டானே ப்ரவி என்பது இவள் எண்ணம். சரியாய் அந்நேரம் அறை வாசலில் வந்து நின்றான் ப்ரவி.

“என்னாச்சு?” என வருகிறது அவனது கேள்வி.

முகம் விழ உள்ளே வந்தவள் நகையை கையில் எடுத்தபடி நின்றால் அவனுக்கும் கேட்க தோன்றும்தானே!

“ஒன்னுமில்லயே” என பதில் சொல்லிய பவி, அது போதுமான பதிலாக இருக்காது என்ற புரிதலில் “இல்ல இவ்வளவு காஸ்ட்லியா ஏன் நகை?னு தோணிச்சு” என்றவள், “எவ்வளவு கஷ்டமான வேலை செய்து சம்பாதிக்கிற? அதை ஏன் இதுல போய் போடுற? எதுனாலும் எப்பவும் எனக்கு சிம்ப்ளாவே பண்ணு ப்ரவி” என மனதில் பட்டதைச் சொன்னாள்.

அடுத்த நொடி இவளை பின்னிருந்து இடையோடு வளைத்தணைத்தது இரு கரங்கள். “என் ஆத்துக்காரர்” என பவி சிந்தியிடம் சவடால் பேசும் போதே தன்னவளுக்குள் தலைகுப்புற விழுந்திருந்த ப்ரவி, அடுத்த அவளது முகவாடலில் என்னவென புரியாத குழப்பத்திற்கு சென்றிருந்தாலும்,

‘உன் சம்பாத்யத்தில் சாப்பிட மாட்டேன்’ என்று கொடி பிடித்துக் கொண்டு அலைபவள் இப்போது அவளுக்கு இவன் எதை எப்படி வாங்க வேண்டும் என்றல்லவா பேசிக்கொண்டு இருக்கிறாள்! முழு மனதாய் இவர்கள் மண வாழ்வை அங்கீகரிக்கிறாள் என்றுதானே இதற்கு அர்த்தம்! அதில் சட்டென அவள் அருகில் வந்து பட்டன்ன மென்மையில் அவளை வளைத்து தன்னோடு சாய்த்திருந்தான் அவன்.

அவளோ அறைவாசலில் நின்றிருந்தவன் இதற்குள் அதுவும் இப்படி சத்தமின்றி இங்கு வந்து அணைப்பான் என எதிர்பார்த்தாளாமா என்ன? அனிச்சை செயலாய் “ஹ… அய் அம்” என்ற ஒலிகளுடன் துள்ளிப் போய் தூர நின்றிருந்தாள் பெண் ‘ஐயோ அம்மா கூட அதிர்ச்சியில் அப்படித்தான் வந்திருக்குது அவளுக்கு.

அவளது இந்தச் செயலை இவனும்தானே எதிர்பார்த்திருக்கவில்லை. “ஹே…ய்” என துவங்கியவன், அதற்குள் நடந்ததை உணர்ந்து அவள் பாவம் போல் முழித்ததில், சிரித்தபடி “சாரி” என கேட்க,

“அது ப்ரவி என்… நம்ம… நான்… கல்யாண விஷயத்தில் நான் எடுத்த முடிவ கூட நம்பல, நீ ஒழுங்கா யோசிச்சு ப்ரே பண்ணியெல்லாம் சரியாதான் முடிவெடுத்துருப்பன்னு பட்டுது” ஒருவாறு தன் மனமாற்றத்திற்கான காரணத்தை, இன்றைய மனோநிலையை சொல்லிவிட்டாள் பவி.

இதில் ஏனோ அவனிடம் பேச உண்டான தயக்கம் பெருமளவு உடைய, “இப்ப கூட இது இப்படியா இருக்கும் அது அப்படியா இருக்கும்னு நானா எதெதோ யோசிச்சு தேத்திகிறனே தவிர எனக்கு இன்னும் எதுவும் தெளிவா தெரியல ப்ரவி, என் மனச நம்புறதவிட உன்னத்தான் நம்புறேன், ப்ளீஸ் நீயும் ஹர்ட் ஆகாம, நானும் கஷ்டபட்டுடாம நீதான் எல்லாத்தையும் ஹேண்டில் செய்யணும்” முழு பொறுப்பையும் அவன் தலையில் தூக்கிப் போட்டாள்.

எதிரிலிருப்பவனை உருக்க இந்த வார்த்தைகள் போதாதாமா? மிகவும் அவன் முகம் கனிந்துபட, அனிச்சையாய் அவள் கையை பற்ற கை நீட்டியவன், இறுதி நொடியில் தன் கையை அடக்கி “கைய பிடிச்சுக்கிறனே?” என அனுமதி கேட்க,

போன முறை இவன் தொடுகைக்கு துள்ள அல்லவா செய்தாள், ஆக ஒரு இலகு நிலைக்காய் அவன் இப்படி கேட்டு வைக்க,

அவனாக அணைத்திருந்தால் கூட ஒரு வகையில் இது இப்படித்தான் என ஏற்றிருப்பாளாய் இருக்கும் பவி, இப்படி அனுமதி கேட்டால் என்ன சொல்வாளாம் இவள்? மெல்லமாய் வெகுவாய் தயங்கி தன் கையை தூக்கி அவனிடம் நீட்டினாள்.

“இன்னும் கொஞ்ச நாள்ல இந்த குழப்பம் எல்லாம் சரியாகிடும் பவிமா” என்றபடி அவள் கையை தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டான் அவன்.

அதற்கு பவி எதுவும் பதில் சொல்லும் முன்னும் காதில் விழுகிறது அடுத்திருந்த வரவேற்பறைக்குள் ஆள் நடமாடும் அரவம். வேணி வந்திருப்பாள் எனப் புரிய, தங்கள் அறையின் கதவு திறந்திருந்த காரணத்தினால் சட்டென தம்பதியர் இருவரும் அனிச்சையாய் விலகிக் கொண்டனர்.

“வேணி” என அழைத்தபடி பவி வெளியேயும் சென்றுவிட்டாள்.

உண்மையில் வேணிதான் வந்திருந்தாள். அவளுக்கு பவி பேசிய “இப்ப கூட இது இப்படியா இருக்கும் அது அப்படியா இருக்கும்னு நானா எதெதோ யோசிச்சு தேத்திகிறனே தவிர எனக்கு இன்னும் எதுவும் தெளிவா தெரியல ப்ரவி, என் மனச நம்புறதவிட உன்னத்தான் நம்புறேன், ப்ளீஸ் நீயும் ஹர்ட் ஆகாம, நானும் கஷ்டபட்டுடாம நீதான் எல்லாத்தையும் ஹேண்டில் செய்யணும்” என்பதும்,

அதற்கு ப்ரவி கேட்ட “கைய பிடிச்சுக்கிறனே?”யும் காதிலும் விழுந்திருந்தது. ஒருவாறு பிரமித்தும் அதே சமயம் குழம்பியும் போனாள் அவள்.

‘என் மனச நம்புறதவிட உன்னத்தான் நம்புறேன்’ என பவியால் சொல்ல முடிகின்ற அளவுக்கு ப்ரவி பவியின் கண்களில் தெரிகிறான் என்பது இவளுக்கு வெகுவாக ஒரு நல்லுணர்வையும் இவளை அசைத்தாளும் நேர்மறைதன்மையையும் (positivity)  தருகிறது என்றால், தன் மனைவியின் கையை பற்ற கூட ஒரு ஆண் அனுமதி கேட்பானா? அதுவும் என்னவிட உன்ன நம்புறேன்னு சொல்லும் மனைவியிடம்?! என்பது பிரமிப்பையும் குழப்பத்தையும் ஒரு சேர தருகின்றது.

கூடவே ப்ரவியின் மீது ஒரு ஆழ்ந்த அபிமானமும் எழுப்பிக் கொள்கிறது இவளது இளநெஞ்சத்தில்.

அடுத்த பக்கம்