துளி தீ நீயாவாய் 9 (2)

‘சிந்தியே இப்படிச் சொன்னால், ஊரிலும் எல்லோரும் இவள் ப்ரவியை காதலித்து மணந்து கொண்டதாகத்தானே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதுவும் அவசர அவசரமாய் ஒரு கல்யாணம்! என்ன கதையெல்லாம் கட்டப்படுமோ?’

‘பள்ளிகொடத்துல வச்சு அந்த கேசவன் மகா மயக்கமடிச்சு விழுந்துட்டாம்ல, அவ மொற மாமன் கூடத்தான் பழக்கம் மிஞ்சிட்டாம், அதான் அவசர அவசரமா கேசவன் கல்யாணத்த முடிச்சுட்டான்” இவள் வகுப்பு தமிழரசிக்கு பன்னிரென்டாம் வகுப்பில் பாதியில் திருமணம் நடந்ததற்கு இவள் காதுபட விழுந்த ஊர் பேச்சு ஞாபகத்தில் வந்து நிற்கிறது.

அந்த தமிழரசியின் அத்தை ‘என் பையன விட உன் பொண்ண எப்படி அதிகம் படிக்க வைப்ப?’ என அழுது புரண்டு, மருத்துவராகும் கனவில் இருந்த தமிழின் படிப்பை நிறுத்தி,  கல்யாணத்தை முடித்ததுதான் உண்மை என்பது இங்கு வேறு விஷயம்.

திகீர் என்ற திராவகமாக ஊடுருவுகிறது இதயமெங்கும் இதன் வலி. அதன் விளைவாய் சிந்தியிடம் எதுவும் சொல்லத் தெரியாமல் இவள் நின்று போனாள்.

சட்டென விழுந்து போன இவள் முகத்தைப் பார்த்த ப்ரவிதான் உதவிக்கு வந்தான். “இல்லமா இது நாங்களுமே எதிர்பார்க்காத டைம்ல நடந்த மேரேஜ்தான்” என்றவன்,

சின்ன இடைவெளிக்குப் பின் “வீட்ல ஒரு unpleasant event, அதுல அண்ணா பவில்லாம் ரொம்ப அப்செட், அதனால எங்க மேரேஜாவது நடந்தா மனசுக்கு இதமா இருக்குமேன்னு இந்த டைம்ல அரேஞ்ச் செய்தோம்” என ஒருவிதமாய் விளக்கம் கொடுத்தான்.

இவன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பவி தனது அறையை பார்த்து திரும்பிச் சென்றுவிட்டாள்.

“ஓ, அதான் பவி அப்படி இருந்தாளா? பெருசா யாருக்கும் எதுவும் பிரச்சனை இல்லயேன்ணா? இப்ப பவி தயாப்பால்லாம் சரியாகிட்டாங்கதானே?” என அடுத்து சிந்தி கேட்டதற்கெல்லாம் ப்ரவி என்ன விளக்கம் சொன்னான் என்பது இவளுக்குத் தெரியாது.

அறைக்குள் வந்தும் கூட சமாளிக்க முடியவில்லை பவிக்கு. முன்பு எந்த விகல்பமுமின்றி ப்ரவியும் இவளுமாக பழகிய பல தருணங்கள் மனதிற்குள் zoom shotல் வந்து போக, அது என்னதாகவெல்லாம் யாருக்கெல்லாம் தோன்ற முடியுமென என்னவெல்லாமாகவோ மனதில் ஓட, இறுக இறுக பிசையப்பட்டது இவள் இளநெஞ்சம்.

இப்படி இவள் தத்தளிப்பின் பாத்திரத்தை உறிஞ்சி உறிஞ்சி பருகிக் கொண்டிருந்த வேளையில், வீசிக் கொண்டிருந்த மின்விசிறியின் காற்றினால் போலும், சட்டென பறந்து வந்து இவள் முகம் மீதாய் மோதியபடி நிற்கிறது ஒரு காகிதம்.

‘I Care Very Little If I Am Judged By You Or By Any Human, It Is The LORD Who Judges Me – 1Cor4:3’ எவன் என்னைப் பத்தி என்ன நினச்சா என்ன? மேல இருக்கவருக்கு மட்டும்தான நான் கணக்கு கொடுக்கணும்?! என எழுதப்பட்டிருக்கிறது அதில்.

வாசிக்கும் போதே இவளுக்கு வடிந்து கொண்டு போகிறது இவள் தூக்கிச் சுமக்கும் பாரங்கள் எல்லாம். தத்தளிப்பெல்லாம் தானாக அடங்கிப் போகிறது. உண்மைதானே மனுஷங்க இவளப் பத்தி என்ன நினச்சா என்ன? அவங்களா இவ வாழ்க்கைய முடிவு செய்யப் போறாங்க? அவ்வளவுதான் நிம்மதிப்பட்டுப் போனாள்.

அதோடு தெய்வமே இவள் மனவலியைக் கண்டு பதில் அனுப்பியது போலும் ஒரு உணர்வு. ஆக இவளைவிட்டோ இவள் திருமண முடிவைவிட்டோ கடவுள் தூரத்தில் ஒன்றும் இல்லை என்றாய் ஒரு ஆசுவாசம்.

சற்று நேரம் அந்த நிம்மதியை அனுபவித்தவளுக்கு மெல்லத்தான் மனதில் வருகிறது,

‘எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சி வேகத்தில பெரிய டெஷிஷன்ஸ் எதுவும் எடுக்காத, அது முழு மூடத்தனம், அதிலும் மேரேஜ் மாதிரி விஷயங்கள்லாம் irreversible. அங்க உன் ஃபீலிங்க்ஸ், உன் அறிவுன்னு மட்டுமா இல்லாம ப்ரேயர்ல என்ன கைடன்ஸ் வருதுன்றத பார்த்து டைம் எடுத்து நிதானமா முடிவு செய்’ ப்ரவி கருணுக்கு திரும்பத் திரும்ப சொல்லிய அறிவுரை.

அப்படின்னா??

இதைச் சொல்லிய ப்ரவி தன் விஷயத்தில் செய்யாமலா இருந்திருப்பான்? இவளைப் போல் முட்டாள்தனமாக உணர்ச்சி வேகத்தில் ப்ரவி திருமணத்திற்கு முடிவெடுக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அவன் இவள் மீது இரக்கப்பட்டு அவசரமாக எடுத்த முடிவு இல்லையா இது? அதற்கும் முன்பாகவே நிதானமாக யோசித்து எப்போதோ முடிவு எடுத்து வைத்திருந்திருக்க வேண்டும் அவன். அதுவும் ஜெபம் செய்து.

நினைக்க நினைக்க ஒரு வகையில் நிம்மதியாகத்தான் இருக்கிறது பவிக்கு. அவன் எப்படி என்னை காதலிக்கலாம் என்ற சிந்தனைக்கு பதிலாக எப்படியோ கடவுள் விரும்பும் திருமணத்தில்தான் நான் வந்து சேர்ந்திருக்கிறேன் என்ற உணர்வு நிம்மதியைத் தருகின்றது.

கடவுள் விரும்பும் இடத்தில் இவள் இருக்கும் வரைக்கும் எந்த தீங்கும் இவளுக்கு நேரிட்டிட முடியாதுதானே!

கையிலிருந்த காகிதத்தை மீண்டும் ஆற அமர பார்த்தாள். ப்ரவியின் கையெழுத்தில் அச்சு அச்சாக எழுதப் பட்டிருந்தது வார்த்தைகள்.

அவனுக்குத்தான் இப்படி ஒரு வழக்கம் உண்டு, பைபிள் படிக்கும் போது மனதை தொட்டதை அதற்கென ஒரு நோட்டு போட்டு இப்படி குறிப்பாய் எழுதி வைப்பான். திரும்பிப் பார்த்தாள். அந்த நோட்டு மேஜையில் திறந்த நிலையில் இருந்தது. இது என்று எழுதி வைத்ததோ காற்றில் இப்போது இவளிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

இந்த வார்த்தைகள் மட்டுமா இவளுக்கானவை, அவனுமே என்றென்றும் இவளுக்கானவன் என்றல்லவா இவளிடம் அனுப்பப்பட்டிருக்கிறான்! இவள் பிறக்கும் முன்னே இவளோடு வாழ என ஒரு மனிதன் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, இப்போது இவளோடு இணைக்கப் பட்டிருக்கிறான் என சிந்தித்தால் இந்த உறவு பிரமிப்பாக இருக்கிறதுதானே!

இவளவன், இவளுக்கே இவளுக்கானவன்.

இந்த ஒரு புள்ளியில் வெகுவாக மனம் அவனிடம் தழைந்துபட்டு போகிறது பெண்ணிற்கு. இம்முறை ஒரு நிறைந்த மனதுடனேயே தன்னவனை நாடினாள்.

அடுத்த பக்கம்