துளி தீ நீயாவாய் 9

இன்று

காலை விழித்த நேரத்திலிருந்து சமையலறைக்கும் மற்ற இடங்களுக்குமாக ஓடி ஓடி பர பரவென வேலை செய்து கொண்டிருந்தாள் பவி. ஏனோ இன்று ப்ரவியைப் பார்க்கவே வெகுவாக தயக்கமாக இருக்கிறது அவளுக்கு. அவனை தவிர்ப்பதற்காகவே இப்படி இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.

அவன் மீதிருந்த கோபமெல்லாம் இவளுக்கு போய்விட்டதென ப்ரவிக்கு தெரிந்திருக்கிறதுதானே, அவன் கொடுத்த கிஃப்ட்ட வேற வாங்கி வச்சாச்சு. அப்படியானால் இன்று இவளிடம் எப்படி நடத்து கொள்வான் அவன்? காதலாய் நெருங்கி வருவனோ? அதை இவள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்ன செய்யப் போகிறாள்? ஒன்றும் புரியவில்லை இவளுக்கு.

வெறுப்பென்றோ பிடிக்கவில்லை என்றோ எதுவுமில்லை. அவன் மீது மகிழ்ச்சிதான். கூடவே ஒருவித படபடப்பும் பதற்றமும் இருக்கிறது. அதுவும் இயல்பல்லவா? ஆனால் அவன் நெருக்கம் நாடும் நேரம் அருவருத்துவிடுமோ என ஒரு ரகசிய பயம் அடி ஆழ மனதுக்குள் உள்ளிருந்து உறுத்தவும் செய்கிறது இவளுக்கு. அவன் மீது சரீரப் பிரகாரமான ஈர்ப்பு என்றைக்குமே இவளுக்கு இருந்தது இல்லை. இப்போதும் அது வந்துவிட்டதாக எதுவுமில்லை. அப்படி இருக்க நெருக்கத்தை தாங்குமா இவள் இதயம்?

ஆனால் எத்தனை நேரம் இப்படி அவள் அவனை தவிர்க்க இயலும்? “ஒரு காஃபி கிடைக்குமா பவி?” என்றபடி இப்போது அவன் உணவு அறை மேஜைக்கு வந்துவிட்டான். அவர்களுக்குள் எல்லாம் இயல்பாய் இருப்பது போன்று வெகு சாதாரணமான அணுகுமுறை அவனிடம்.அது இவளது படபடப்பை பாதியாய் குறைக்க, ஒரு கோப்பையில் காஃபியை எடுத்துக் கொண்டு தயக்கத்தை வெளிக்காட்டாது தயங்கியபடி சென்றாள் இவள்.

தன் மொபைலில் எதோ கேஸ் விஷயமாக அபிஜித்திடம் பேசிக் கொண்டே வந்த ப்ரவி, மொபைலை இப்போது ஸ்பீக்கர் மோடில் போட்டு மேஜையில் வைத்தவன், அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து பேச்சை தொடர்ந்த படியே இவள் கையிலிருந்த காஃபியை வாங்கினான் இவளுக்கான புன்னகையை சிந்தியபடி.

பதிலுக்கு இவளும் புன்னகைத்தாள்தான். அது இயல்பாய் இருக்கிறதா என்று மட்டும் தெரியவில்லை. அதற்குள் அவன் மொபைலில் இவனிடம் பேசிக் கொண்டிருந்த ஆண் குரலுக்கு இடையிலிருந்து

“ஹலோ அண்ணா லீவ் எடுத்து பவியோட ட்ரிப் எதுவும் போகலையா நீங்க?” என்று வந்தது சிந்தியாவின் குரல். ஹ ஹா ஆம் சிந்தியா இப்போது திருமதி அபிஜித் ஆகிற்றே!

அந்த கொத்தடிமை வழக்கை அடுத்து விசாரித்தது அபிஜித்தானே, அதற்காக அவன் அவ்வப்போது சிந்தி அப்பாவை சென்று சந்தித்துக் கொள்ள, அதில் கார சார பொறி பறக்க, சிந்தி அப்பா இந்த கொத்தடிமை விஷயத்தை தன் வீட்டினருக்கு தெரியப்படுத்தி இருந்தது இல்லை என்றாலும் கூட சிந்திக்கு அவரது மற்ற நேர்மையற்ற செயல்கள் காரணமாக எப்போதுமே அவரை அவ்வளவாய் பிடிக்காது, அதில் அபிஜித்தின் நேர்மை அவளை சுண்டி இழுக்க, அபிஜித்திடம் விழுந்தது அவள் மனது.

அதை அவளாகவே சென்று அபிஜித்திடம் சொல்ல இயலாமல் பவியிடம் புலம்ப, பவி ப்ரவியிடம் ரெக்கமென்டேஷனுக்கு வருவாள்தானே! அதை வாவ் வெரிகுட் என ப்ரவியும் ஏற்றுக் கொள்ளமாட்டான்தானே “இதெல்லாம் வெறும் அட்ராக்க்ஷன்” என அவன் மறுக்க,

“என் சிந்திய போல உன் அபிஜித்துக்கு யார் அமைய முடியும்? அவ அப்பாவ வச்சு அவள யோசிக்காத, இது சும்மா அட்ராக்க்ஷன்லாம் இல்ல, நிஜமா அபிஜித்த நல்லா பார்த்துப்பாடா சிந்தி” என்றெல்லாம் பவி புலம்பிக் கொண்டு அலைந்தாள்.

இதற்கிடையில் அபிஜித்துக்கும் சிந்தி மீது விருப்பம் பிறக்க, அடுத்து சில பல ட்விஸ்ட் டர்ன்களுடன் நடந்தேறியது அவர்கள் திருமணம். அதில் ப்ரவி பவியின் கைகளும் உதவி இருந்தன.

இப்போது அபிஜித்தும் சிந்தியுமாக பேசவும், அதில் அவர்கள் திருமணம் நடந்த காலத்துக்கு ஒரு குட்டி வட்டம் போன பவியின் மனதுக்கு அப்போதுதான் புரிகிறது  “லவ் பண்ணா அது வேஷமா? மத்தவங்களுக்கெல்லாம் பாஞ்சு பாஞ்சு சப்போர்ட் செய்ற? என்னை மட்டும் திட்ற?” என ப்ரவி கேட்டது சிந்தியா விஷயத்தைதான் என.

‘சும்மா சும்மா இந்த ப்ரவிட்ட ஓவரா சண்டைய போட்டுட்டமோ?’ என இதில் பவி மனம் தன்னவனுக்காக இன்னுமாய் சாய்ந்துவர, இங்கோ “எங்க பவி எப்படி இருக்கா? கல்யாணத்தப்ப அவ மூஞ்சி முழி ஒன்னும் சரி இல்ல. நானும் பேசணும் பேசணும்னு பார்க்கேன் அவ லைன்லயே வரல, இந்தா இவங்கள என்னனு கேளுங்கன்னு பேசச் சொன்னா சும்மா உங்க ஓட்ட டிப்பார்ட்மென்ட பத்தியே வறுத்துட்டு இருக்காங்க. பவி சந்தோஷமாதானண்ணா இருக்கா?” என இடைவெளி இல்லாமல் சிந்தியின் குரல் பொறிந்து கொண்டிருந்தது.

இதில் இவர்கள் திருமணத்துக்கு வந்திருந்த சிந்தி குதுகலமற்ற பவி முகத்தைக் கண்டு தன்னிடம் தனிமையில் பேசிவிட தவியாய் தவித்ததும், அது கூடாமல் போனதும் பவி மனதுக்குள் வந்து விழ, அது எல்லாவற்றினாலும் இப்போது சிந்தி மீதும் பவியின் மனம் கனிந்து வர, சிந்திக்கு நிம்மதி தரும் பொருட்டு “யாரது என் ஆத்துக்காரர்டயே வந்து தைரியமா எங்க பவின்னு சட்டம் பேசுறது? ராங் அப்பீல், கேஸ் டிஸ்மிஸ்ட்” என வழக்கமாக இவள் பேசும் வெடிப் பேச்சு தன்மையிலே பதில் சொன்னாள்.

ப்ரவியிடமும் ஒருவாறு சாய்ந்திருந்ததுதானே இவள் மனம். ஆக அவன் அருகில் இருக்கிறான் எனத் தெரிந்தும் இப்படி சொல்லி வைத்தாள் இவள். ஆனால் சொல்லிவிட்டாளே தவிர இவள் சொல்லவும் இவள் காதிலேயே விழும் ஆத்துக்காரர் என்ற பதத்தையெல்லாம் எப்படி எடுக்க என்றே இவளுக்குத் தெரியவில்லை. உள்ளுக்குள் எதோ ஒரு கிடுகிடு. ஆனால் இவளை ரொம்பவும் குழம்பவிடாமல்,

“வரே வா, வாங்க என் மகனோட மாமியாரே, இதுதான வேணும், எங்கள கூட அடையாளம் தெரியாம போகலைனா அப்றம் லவ் பண்ணி கல்யாணம் செய்றதுல என்ன லாஜிக் இருக்கு? ஆனாலும் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு என்ன ஒரு அமுக்கினித்தனம்! லவ் பண்றேன், மேரேஜ் சீக்கிரம் இருக்கும்னு ஒரு வார்த்தை சொன்னியா எரும? என்னல்லாம் நினச்சு குழம்பிட்டு தெரியுமா மனசு?” என ஆழ பூரிப்பும் ஆதங்கமுமாய் திட்டினாள் சிந்தி.

இதில் சிந்தியின் அக்கறை பவிக்கு வெகுவாக பிடித்தாலும் இந்த கேள்வியில் பவிக்குள் வந்து விழுந்தது ஒரு கத்தி குத்தே!

அடுத்த பக்கம்