துளி தீ நீயாவாய் 7(8)

“நிஜமாவே நீ ரொம்ப நல்ல நல்லவன் ப்ரவி” ஒரு சர்டிஃபிகேட் இப்படியாய் அவள் இவனுக்கு தர,

“எது? அந்த எவ்வளவு அடிச்சாலும் தாங்குறது அதுதானே?” இவனும் கேட்க,

“ஹி ஹி நீ புத்திசாலி புரிஞ்சுக்கிற” அவளும் விளையாட

முழுவதுமாகவே இலகு நிலை போல்தான் அடுத்து சென்றது பயணம்.

ஆனால் மனதுக்குள் இவனுக்குள்தான் வேதி மாற்றம்.

பவி இப்படித்தான். அவளிடம் இவனும் கூட இப்படித்தான்.

அடிக்கிற ஒருவன்தான் அவளுக்கு வந்துவிடக் கூடாது என்று இல்லை, அவள் அனிச்சம் பூ வகை ஆசைகளை கூட அசைத்துவிடும் யாரையும் எதையும் கூட இவனால் தாங்க முடியாது.

கொலுச போய் குடுத்துட்டு வர்றேன்னு அவ சொன்னா கூடத்தான் போகணும் அவளோடு நிற்பது யாராக இருந்தாலும்.

இது ஓரளவு சலுகையோ இல்லை ஓவர் செல்லமோ? எது என்னவாய் ஆனாலும் இவனுக்கு அவள் அப்படித்தான்.

இவனது அண்ணனுக்கும் கருணுக்கும் பவி மீது உள்ள பாசமெல்லாம் அளவிட முடியாததுதான், ஆனால் அவர்களே கூட இவளை அளவைவிட சற்றாய் சீண்டினாலும் சட்டென இவன் உள்ளே புகுந்து அவளை காத்துவிட முனையும் இவன் குணமும் கவனத்தில் வந்து போகிறது இவனுக்கு.

மெல்ல எனினும் சொல்லொணா ஆழமாய் புரிகின்றது இவனால் யாரிடமும் இவனது பவியை கொடுக்கவே முடியாது.

இவனது அண்ணன் இவனை ஏன் பவிக்கென யோசித்தார் என்பதையும் இப்போது உணர்ந்து கொள்ள முடிகிறது.

இதுவரை இவனுக்கு அவள் மீதிருந்தது காதல் என்றெல்லாம் எதுவுமில்லை என்பது எத்தனை உறுதியோ, இனி அவள் மீது அப்படி ஒரு திருமண வாஞ்சை வருவதை இவனால் தடுக்க இயலாது என்பதும் அத்தனை உறுதி எனவும் அறியப்படுகிறது.

வசந்த தூரிகைகள் தொட்டுவிட்டதால் திறந்துவிட்ட சில இல்லாத கதவுகளை என்றுமே அடுத்து அடைத்து தாழிட வழி இல்லை போலும்.

இவன் உள்ளறைகளில் காதல் வாசம்.

வெளியே சள சள என மழை பெய்து கொண்டிருந்தது. சற்று அதை வேடிக்கை பார்ப்பதும் சற்றாய் இவனை வம்பிழுப்பதுமாய் அடுத்து பவி பயணத்தை கொண்டாட, கண் மூடி தன் இருக்கைக்குள் புதைந்து கொண்டான் இவன்.

காதலின் கை விரல் காற்றில்

எப்போது உதிக்கும்?

எங்கே என்னை அது எவ்விதம் திறக்கும்?

காதலின் கை விரல் காற்றில்

கலந்தே கிடக்கும்

கள்ளம் ஏதுமற்ற நுண்ணிய பிழையில்

உள்ளம் ஓரம் வெள்ளமாய் அது பிறக்கும்.

ரவு 11 மணியை தாண்டி இருக்கும். இப்போது பேருந்து ஒரு மோட்டலில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

பவி அங்கிருந்த பாத்ரூம் சென்றிருக்க, அதற்கு சற்று தூரமாய் நின்று கொண்டு இவன் அவளுக்காக காத்திருக்க, எதேச்சையாய் கண்ணில் படுகிறது அந்த பொண்டாட்டியை அடித்த போலீஸ்காரன் புகை விடுவதற்காக இடம் தேடுவது.

கையில் ஒரு சிகரெட்டோடு மோட்டலை விட்டு வெளியே சற்று தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கன்டெய்னர் லாரியைப் பார்த்துப் போனான் அவன்.

கட்டைவிரலால் உதடுக்கு கீழாக ஒரு முறை தடவிக் கொண்ட்து ப்ரவியின் கை.

“என்ன போலீஸ்கார்? போயும் போயும் ஒரு வில்லன போய் சைட் அடிச்சுட்டு இருக்கீர்?” என்றபடி பவி இவன் பக்கத்தில் வந்து நின்ற போதுதான் தன் கவனத்தை அந்த போலீஸின் மீதிருந்து எடுத்த ப்ரவி,

“டீ வாங்கிட்டு வர்றேன், இந்த க்ளைமேட்டுக்கு நல்லா இருக்கும், நீ போய் பஸ்ல இரு” என அவளை தங்கள் பேருந்து வரை கொண்டு போய்விட்டவன்,

அவள் தன் இருக்கையில் சென்று அமர்ந்து மொபைலை நோண்ட ஆரம்பிக்கும் வரைக்கும் பார்த்திருந்துவிட்டு அடுத்தே பேருந்தை விட்டு அகன்றான்.

அடுத்த பக்கம்