துளி தீ நீயாவாய் 7(7)

“ஐயா தம்பி தெரியாம அசந்து தூங்கிருப்பா, பால்குடிக்கிற குழந்த இருக்கதால அவளுக்கு ராவுல நல்ல தூக்கம் இல்லீங்க தம்பி, பிள்ள பெத்த பச்ச உடம்புங்க விட்டுருங்க” அங்கோ கண்ணில் வடியும் கண்ணீரை அடக்கியபடி இளவரசியின் பாட்டி மன்றாடிக் கொண்டிருந்தார் தன் மருமகனிடம்.

அதற்கு “அதுக்குன்னு கால்ல கிடக்கிற பொருள் கழன்டு விழுறது கூட தெரியாம என்ன தூக்கம்? காசுன்னா அவ்ளவு இளப்பமா இவளுக்கு? எங்க போய் ஒரு ஆயிர ரூவா சம்பாதிச்சுட்டு வரச் சொல்லுங்களேன் பார்ப்போம், பச்ச உடம்பாம், பச்ச உடம்பு, எதுக்கெடுத்தாலும் இது ஒன்னு, செத்தா போய் ஒழியட்டும்” என தன் மாமியாரிடம் எகிறிய அந்த மருமகன்,

”பஸ்ல மட்டும் கிடைக்கலையோ அப்றம் இருக்கு” என தன் மனைவியிடம் உறுமிவிட்டுப் போக,

“கொலவெறி வருது எனக்கெல்லாம், போயும் போயும் ஒரு கொலுசுக்கு இவ்ளவு ஆர்பாட்டம், ஆயிரம் ரூவா சம்பாதிக்கணுமாம், அங்க அரை கிலோ தங்கம் டவ்ரி வாங்கி இருப்பான் நாய்” இது பவியின் கோபம். தொலைந்திருப்பது கொலுசு என அவளுக்குப் புரிந்துவிட்டது.

“நமக்கே இப்படி இருக்கே பார்த்துட்டு இருக்க அந்த அம்மாவுக்கு எப்படி இருக்கும்? என்னைக்காவது நிம்மதியா தூக்கம் வருமா?” இது அவள் புலம்பல்.

இதற்குள் அவள் கண்ணில் இப்போது நீர் காணப்பட

“ப்ச் பவிமா” என இவன் ஆறுதலுக்கு போக,

“இல்ல ப்ரவி இதுல நாம அந்த ஆள எதுவுமே செய்ய முடியலையேன்னுதான் அழுகையா வருது,  இப்ப நாம என்ன ஹெல்ப் செய்தாலும் அந்தப் பொண்ணதான் அந்த ஆள் இன்னுமா அடிப்பார்” பற்கள் கடிபட யதார்தத்தை சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

அங்கோ “பாவி எமகாதகன் ஒத்தப் பிள்ளன்னு என் பிள்ளைய நான் எப்படி பொத்தி பொத்தி வச்சு வளத்தேன், என் கண்ணு முன்னாலயே அடிக்கானே, செத்தா போட்டுமாம், இவனுக்கென்ன அடுத்த நிமிஷம் புதுத்தாலி கட்டுவான் நான் எங்க போவேன் என் பிள்ளைக்கு” என இப்போது வாய்விட்டு அழத் துவங்கி இருந்தார் இளவரசியின் பாட்டி.

“ப்ச் விடுங்கம்மா, இன்னைக்கு நேத்தா இது நடக்குது? என்னமோ புதுசு போல அழுதுகிட்டு! போலீஸ்ன்றதால பொட்டு பொட்டுன்னு கை நீண்டுடுது”

அடி வாங்கி வாங்கி உடல் மட்டுமல்ல உள்ளமும் காய்த்துப் போனதோ அல்லது தான் இயல்பாய் இருப்பது போல தன் அம்மாவிடம் காட்ட நினைத்தாளோ அந்தப்பெண்? வெகு சாதாரணம் போல் இந்த நிகழ்வை நிறுத்தி பேசியவள்,

“இப்ப கொலுசு கிடைக்கலைனா அதுக்கும் வந்து ரெண்டு விழும், அப்ப நீ எதுவும் வாய கீய விட்டுடாத, அப்றம் உன் அம்மா என் வீட்டுக்கு வர கூடாதுன்னு சொல்லிட்டார்னா அத மட்டும் என்னால தாங்க முடியாதுமா” என அடுத்து முடிக்கும் போது உடைந்து அழ,

“ப்ரவி ப்ளீஸ் ப்ரவி, அவங்க போட்டுருந்த போலதான் கிட்டதட்ட என் கொலுசும், நான் போய் பஸ்ல இத கழட்டி போட்டுட்டு வந்துடட்டுமா?” என இப்போது கேட்டுக் கொண்டிருந்தாள் பவித்ரா.

அடுத்த அடிகளையாவது தடுக்க வழி தேடுகிறது அவள் பெண் மனம். இவன் தலையாட்டுதலுக்காக கூட காத்திராமல் இவன் பிடியில் இருந்து உருவிக் கொண்டு கிளம்பியவளிடம்

“அங்க வெளி வாசல் பக்கம் நிறுத்தி இருக்காங்க பஸ்ஸ” என வழி சொல்லியபடி பின்னால் நடந்தது இவன்.

தோ இப்போது பெங்களூர் செல்லும் பேருந்தில் பயணத்தை துவக்கியாகிவிட்டது. இது வல்வோ பஸ். ஜன்னலோர இருக்கை பவித்ராவுக்கு, அடுத்ததாய் ப்ரவி.

அவள் கையின் அதீத சில்லிப்பும் நடுக்கமும் ப்ரவிக்குள் இறங்கிக் கொண்டு இருக்கின்றன. இப்போதும் அவன் கையைப் பற்றி இருந்தாள்.

சாதரணம் போல் போய் இவர்கள் வந்த பேருந்தில் தன் கொலுசை கழட்டி போட்டு, அதை அந்த இளவரசியின் அப்பா எடுத்துப் போயிருந்தார்.

அதுவே எதோ அட்வென்சர் செய்தது போல் ஒரு உணர்வு பவிக்கு.

இதில் இன்னொரு விஷயமாக அந்த இளவரசியின் பெற்றோரும் மொத்த குடும்பமாக இதே பேருந்தில்தான் பயணித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆக அந்த சம்பவம் பற்றி எதுவுமே பேச விருப்பமில்லை இவளுக்கு. இரண்டு மூன்று வரிசை தள்ளி அமர்ந்திருக்கும் அவர்கள் காதில் தப்பித் தவறி விழுந்தால் இன்னும் கூட ப்ரச்சனை நீளக் கூடும்.

ஆனால் பவியின் மனம் ஓடிக் கொண்டிருக்கும் வேகத்துக்கு ப்ரவியின் கையை பிடித்து அதற்கு நிலைவரம் கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள் அவள்.

அதோடு பயணமே பிறந்தநாள் கொண்டாடவென. இதில் தீர்வில்லாத ஒன்றிற்காய் இவள் கனத்துப் போய் அமர்ந்திருப்பது எப்படி சரியாகும்?

எதிர்பாரா இந்த நேரத்தில் சட சடவென ப்ரவியின் கை விரல்களில் அவள் சொடக்கெடுக்க

“அவுச்” என முதலில் அவனை மீறி சத்தமிட்டுவிட்டான் இவன்.

“அச்சோ போலீஸ்கார் பப்ளிக் ப்ளேஸ், சத்தம் போட்டா மானம் போய்டும்” என அவள் இவன் காதில் முனுமுனுக்க,

“பனிஷ்மென்ட்ட நாங்க மறக்கலையாங்கும்” என சலுகையாய் அறிவித்தபடி

அவன் இரண்டு கைகளிலும் அவள் சொடக்கெடுத்து முடிக்க, அத்தனை கூசுதலையும் அனுபவித்துக் கொண்டு வாயை வலுக்கட்டாயமாய் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டிய நிலை இவனுக்கு.

ஆனாலும் அவள் மனநிலை மாறி இருப்பது இதமாக இருக்கிறது இவனுக்கு.

அடுத்த பக்கம்