துளி தீ நீயாவாய் 7(6)

இப்படியெல்லாம் தான் தாறுமாறாய் தடுமாறுவது ஒரு பக்கம் தவிப்பாய் இருக்கிறதென்றால், தனது இந்த வகைப் பார்வைகள், எதுவும் அறியாத பவியை காயப் படுத்திவிடுமோ என்றும் இவனைக் கலவரப்படுத்த அவசரமாய் தன்னை சமனப்படுத்த முயன்றவன்,

பேயடிச்சுட்டா இவன? என ஒரு பேந்தப் பார்வை இவனையே பார்த்துக் கொண்டிருந்த பவியை நோக்கி,

“இந்த இயர் ரிங்க் எப்ப வாங்கினா பவி? உன் ஃபேஸ்க்கு ரொம்பவே பாந்தமா இருக்கு” என அவன் கண்களில் பட்ட அவள் காதணியைப் பாராட்டி கேட்டானே பார்க்கலாம்.

அவ்வளவுதான் “இதுக்கு நிச்சயமா பனிஷ்மென்ட் உண்டு” என்றபடி இவனுக்கு முதுகாட்டி நின்று கொண்டாள் இவனது பவித்ரா.

பின்ன இவன் வாங்கி அனுப்பினதுன்னு ஆசையா போட்டு காமிச்சப்ப கண்டுக்க கூட இல்லைன்றதே ஓவர், அதுல இப்படி வேற கேட்டா அவளுக்கு எப்படி இருக்குதாம்?

‘பவிமா பவிமா பவிமா நீ என் small பவிக்குட்டில, என் gold பவிக்குட்டில, என் darlz பவிச் செல்லம்ல, plz மன்னிச்சு என்ன விஷயம்னு சொல்லிடு’ வழக்கமாய் கருண் பவியை தாஜா செய்ய சொல்லும் வாசகங்களை இவன் மொபைலில் மெசேஜாக்கி அவளுக்கு அனுப்ப,

“இதுக்கு கூட கடன் வாங்குற இந்த காப்பி கேட் போலீஸ்க்கு கன்னா பின்னானே கொடுக்கலாம் பனிஷ்மென்ட்” என வருகிறது ரிப்ளை.

ப்ரவிக்கு ஒரு விஷயம் அலர்ஜி என்றால் அது அவன் கைவிரலில் சொடக்கெடுப்பது. ஏனோ கையே கூசுவது போல் இருக்கும் அவனுக்கு. அதனாலேயே பவி அதை அவனுக்கு நிரந்தர பனிஷ்மென்ட்டாய் பிக்ஸ் செய்து வைத்திருக்கிறாள்.

“காப்பினாலும் அது 100% உண்மை பவிக்குட்டி, பஸ்ல்ல போறோம்மா கொஞ்சம் பார்த்துப் போட்டு மன்னிப்பீங்களாம்” இவன் மெசேஜில் பேரத்தை தொடர,

“பஸ் என்ன லாரில போனா கூட இன்னைக்கு உனக்கு உண்டு” அவளோ உறுதியாய் நின்றவள்,

அப்போதுதான் நியாபகம் வந்துவிட்டது போலும் “ப்ரவி, இந்த டைம் பஸ்ஸுக்கு ப்ளான் போட்ட போல ஒரு நாள் லாரிக்கும் ப்ளான் போடு ப்ரவி, ரொம்ப ஆசையா இருக்கு” என அதற்கும் பிட் போட,

“சூப்பர் அப்ப நான் பின்னொருகாலத்தில் உன்னை லாரில கூட்டிட்டுப் போவனாம், நீ இன்னைக்கு என் பனிஷ்மென்டை கேன்சல் செய்துடுவியாம்” இவனோ இப்படி எஸ்கேப் ஆக வழி தேட,

“இல்ல அந்த பின்னொருநாளில் நீ கூப்பிட்டுட்டு போற வரைக்கும் உனக்கு தினமும் நான் பனிஷ்மென்ட் தருவனாம், அப்பதான் நீ என்னையும் லாரியையும் மறக்க மாட்ட” அவளோ இப்படி பாய்ண்ட் பிடிக்க,

இப்போது இவர்கள் இறங்க வேண்டிய சங்கரங்கோவில் வந்து சேர்ந்துவிட்டது.

அங்கிருந்து அடுத்து இவர்கள் கோவில்பட்டிக்கு பஸ் பிடிக்க, இரண்டு பேர் கொண்ட இருக்கையில் இவளும் ப்ரவியும் அமர, இவர்களுக்கு பக்கவாட்டு இருக்கையில் ஒரு அம்மாவும் அவரது மகளும் வந்து அமர்ந்தனர்.

அந்த மகளுக்கு இரு குழந்தைகள். ஒன்று பிறந்து மூன்று நான்கு மாதம் இருக்கலாம். அது தன் தாயின் கையில் தூங்கியபடி இருந்தது. மற்றொரு பெண் குழந்தைக்கு மூன்று வயது இருக்கலாம்.

அந்த பெரிய குழந்தையை அமர இடம் இல்லா காரணத்தால் பவி தன்னிடம் வாங்கிக் கொண்டாள்.

குழந்தையின் பெயர் இளவரசியாம். இவளிடம் கலகலவென சளசளத்துக் கொண்டு வந்தது.

“நான் வாக்கப்பட்டு 11 வருஷம் கழிச்சு பிறந்தாம்மா என் மக, அவளுக்கும் கல்யாணம் கழிஞ்சு 5 வருஷம் ஆச்சு பெரியவ பிறக்க, அதான் இளவரசின்னு பேர் வச்சோம்” குழந்தையின் பாட்டி அந்தப் பக்கமாக இருந்து அவ்வப்போது ஆசை ஆசையாக பேத்தியின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார்.

இதில் இவர்கள் கோவில்பட்டியில் இறங்க, அவர்களும் அங்கு இறங்கிக் கொண்டனர். அவர்களை அங்கு ரிசீவ் செய்தது அந்தப் பெண்ணின் கணவர் போலும்.

பேருந்து நிலையத்திலிருந்து அதன் நுழைவாசல் பகுதிக்குப் போய் அது அமைந்திருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தால் அங்கு பெங்களூர் செல்ல இவர்கள் டிக்கெட் பதிவு செய்திருக்கும் தனியார் பேருந்து வரும்.

அதற்காக பவியும் ப்ரவியும் நடக்கத் துவங்க, பளார் என விழுந்த அறையின் சத்தமும் சட்டென எழுந்த குழந்தையின் வீறிடலும் குத்தலாய் வந்து காதில் விழுகிறது இவர்களுக்கு.

அனிச்சையாய் திரும்பிப் பார்த்தால் அந்த இளவரசியின் அம்மா ஒற்றை கையால் சின்ன சிசுவை பிடித்தபடி அடுத்த கையால் தன் கன்னத்தை தடவிக் கொண்டு நின்றார்.

அறை விழுந்தது அவருக்கு போலும். அடித்திருந்தது அவரது கணவர். அதோடு நிற்கவில்லை, இவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அடுத்தும் மாறி மாறி நாலைந்து அறை.

ப்ரவியை பற்றி இருந்த பவியின் கை விரல் நகங்கள் அவன் கையை பதம் பார்ப்பதை அவனால் உணர முடிந்தது. அவள் கொஞ்சமாய் நடுங்குவதும் கூட இவனுக்குப் புரிகிறது.

ஆறுதல் என்பதையும் தாண்டி அவளைப் பற்றினான் இவன். அறை வாங்கும் பெண்ணிற்காக ஒரு கவளம் கங்கல்கள் இவன் தொண்டைக் குழியில் இறங்குகிறது என்றால் சட்டென சம்பந்தமே இல்லாமல் அப் பெண் நிலையில் இவனது பவி காட்சித் தர நெருப்பாறு இவன் அங்கமெங்கும்.

என்னவோ அதிலிருந்து காப்பது போலதான் பாய்ந்து போய் பற்றிக் கொள்கிறது இவனது கரம் பக்கவாட்டில் நிற்பவளை.

இப்படியும் கணவன்கள் இருக்கிறார்கள்தானே! அப்படிப்பட்ட எவனோ ஒருவனிடம் இவனது பவியை தூக்கிக் கொடுத்துவிட முடியுமா இவனால்?

அடுத்த பக்கம்