துளி தீ நீயாவாய் 7(5)

தயாளனை ஊரில் பெரிய வாத்தியார் என்றுதான் கூப்பிடுவது வழக்கம். இவர்கள் குடும்பத்திற்கென பல தொழில்கள் இருந்தாலும், நான்கு தலைமுறைக்கு முன்பே இவர்கள் ஊரிலும் சுற்று வட்டாரங்களிலும் முதலில் பள்ளி நிறுவியது இவர்களது குடும்பம்தான்.

ஆக அந்த குடும்பத்தின் மூத்த வாரிசெல்லாம் பெரிய வாத்தியார்.

இருந்த இட நெருக்கடியில் திரும்ப முடியாவிட்டாலும் “ஆமா, நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? நாங்க பெங்களூர் போறோம்” என பவி முறையாய் பேச,

அதற்குள் “என்னது மயினி பெரிய வாத்தியார் பொண்ணா? அவருக்கு பிள்ளை இல்லைனுல சொல்லுவாக?” என அவளை விசாரித்த பெண்ணிடம் விசாரித்தது இன்னொரு பெண் குரல்.

கிராமத்தில் இது ஒன்று முகம் பார்த்து பேசுவது இங்கிதமாய் பேசுவது என்றெல்லாம் இருக்காதே!

பவியை எதுவும் தெரியாமல் பொத்தி வைப்பதைவிட எதையும் கையாள அவளை பழக்கிவிட வேண்டும் என்றுதான் ப்ரவி எப்போதும் நினைப்பது, அதுவும் ஒரு காரணம் இப்படி அவளை அழைத்து வரவும்,

ஆனாலும் இந்தக் கேள்விக்கான பதில் பவியின் மனதை எத்தனை வாதிக்க முடியும் என்று தெரியுமாதலால் அவளை நோக்கி இவன் அவசரமாய் நகரத் துவங்க,

“ஆமா சொந்தப் பிள்ளை இல்லைதான், ஆனா கொழுந்தியாள எடுத்து வச்சு பிள்ளையாதான வளக்காக, பெரிய வாத்தியார் கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல நடந்த ஒரு விபத்துல அவர் சம்சாரமும் அதோட வீட்டாள்ங்களும் தவறிட்டாங்கன்னு தனியா நின்ன கொழுந்தியாள வீட்டோட கூட்டிட்டு வந்துட்டார்ல மனுஷன். ரெண்டாவது கல்யாணத்துக்கும் ஒத்த கால்ல முடியாதுன்னுட்டாராம்”

என இவன் குடும்ப விஷயத்தை பொது வீதியில் வைத்து அலசி முடித்தனர் அந்தப் பெண்கள். பவித்ரா பற்றி இருந்த கம்பியில் அவள் கைக்கு அடுத்ததாக சென்று இவன் கையை வைக்கும் போது, இவன் அருகாமையை உணர்ந்த பவி, அவசரமாய் இவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“ப்ச் பவிமா இதெல்லாம் யோசிச்சுக்காத நீ” என மட்டும்தான் சொல்ல முடிந்தது இவனுக்கு.

அதற்கு “ஐய இதுல என்ன இருக்கு, அவங்க சொல்லலன்னா மட்டும் அதெல்லாம் மறந்துடுமா என்ன? ஹெவன்றது நம்ம வீட்டு மேல் மாடி மாதிரி, யாராவது மாடிக்கு போய்ருக்காங்கன்னு அழுவமா?” என இவனுக்கு மட்டுமாய் கேட்கும் குரலில் இவனை அசரடித்தபடி வருகிறது பவியின் பதில்.

சொல்லும் போதே அவளுக்கு வெகு அருகில் சற்றாய் பின்னால் நின்றிருந்த இவனின் கண்களை விழி மட்டுமாய் உயர்த்தி அவள் சந்தித்தபடி பேச, இவன் பார்வையில் பிறந்தது பாராட்டுக் கரவொலி.

முன்பானால் அதோடு மட்டுமாய் நின்றிருக்கும் இவன் உணர்வு. இப்போதோ ‘எந்த சிச்சுவேஷனையும் ஈசியா ஹேண்டில் பண்ணிடும் இந்த பவி, இவ கூட யாருக்குன்னாலும் லைஃப் ரொம்பவும் ஈசியாதான் இருக்கும்’ என எதோ ஒன்று இவனுக்குள் ஓட,

வீட்டில் அண்ணன் எடுத்த திருமணப் பேச்சும் சேர்ந்து வந்து நிற்கிறது இவன் நடு மனதில்.

அவள் கண்ணின் கீழ் இழுத்திருந்த மெல்லிய மை கோட்டில் சென்று தெரிக்கிறது இவன் பார்வை.

“இதுக்கா ஓடி வந்தீங்க?” என அடுத்து அவள் முனங்கும் போதுதான் சற்றாய் திடுக்கிட்டது இவனுக்கு. ‘இவ்வளவு நேரம் அவளையேப் பார்த்துட்டு இருந்திருக்கான், அதையா கேட்கா?’ என ஒரு தர்மசங்கடம் மிக  நுண்ணிய மென் வாசமாய் பிரிய வகையில் இவனுக்குள் பிறந்து நழுவ,

அதோடு இணைந்து துளியாய் ஒரு பிரியா புன்னகை இவன் இதழில் ஏறும் போதே, இங்கு இவன் வந்து நிற்பதைத்தான் கேட்கிறாள் என புரிந்துவிடுகிறது அவனுக்கு.

வீட்டுக்குள் நீ, போ, லூசு என்றெல்லாம் வாயில் வந்தபடியெல்லாம் பவி இவனையும் கருணையும் வாயாடுவாள் என்றாலும், வெளியாட்கள் முன்பு மரியாதை பன்மையோடு சேர்த்து கஷ்டப்பட்டு கவனமாய் பேசுவாள்.

அவளது தயாப்பா சொல்லி இருப்பதற்காக அப்படி.

இவனே கூட “ஏன்ணா, அவ நீ போன்னு பேசுறதுதான் நல்லா இருக்கு, இது என்னமோ தூரமா நிறுத்றாப்ல இருக்கு” என இவனது அண்ணனிடம் இதற்கு மறுப்பு தெரிவித்தது உண்டு.

“நாள பின்ன உன் கூட வேலை பார்க்கவங்க, உன் ஆஃபீஸ் ஆட்கள் முன்னாடி அவ அப்படி சொன்னா நல்லா இருக்காதுடா” என வந்தது அவரிடமிருந்து விளக்கம்.

இத்தனைக்கும் இவன் அப்போதுதான் காலேஜில் சேர்ந்திருந்த முதல் வருடம், பவி எட்டாவது படித்துக் கொண்டிருந்திருப்பாளாக இருக்கும்.

“என்னணா நீ? எப்பயோ யாரோ எதோ சொல்வாங்கன்னு இப்ப போய் இப்படில்லாம் ரூல் போடுறீங்க, அதோட ஆஃபீஸ் ஆட்கள் இங்க அமரகுளம் வீட்டுக்கு ஏன் வர்றாங்க?” என இவன் கேட்க,

“போடா உனக்கு ரொம்ப தெரியும்” என பேச்சை முடித்தார் அண்ணா.

அன்றைய நிலையில் இவன் ஆஃபீஸ் மக்கள் பவியிடம் வந்து ஏன் பேசப் போகிறார்கள் என்ற வகையில் இருந்தது இவன் புரிதல். இப்போது யோசிக்கையில் இதெல்லாம் கூட வித்யாசமாய் படுகிறதே.

இவள்தான் இவன் மனைவி என்றானால் இவன் வீட்டிற்கு வரும் யாரையும் வரவேற்பதே அவளாகத்தானே இருக்கும்?

இவனின் இந்த நினைவோடு சேர்ந்தே, இவன் பேட்ச் மேட் அபிஜித் வீட்டு விழாவுக்கு ஒர் பச்சை நிற புடவையில் இன்னுமாய் ஒரு நறுக்கென்ற நாகரீக ஒப்பனையுடன், படு பாந்தமாய் இவன் தோளோடு இணையாக பவியும் வர, இயல்பாய் இருவருமாய் அனைவரிடமும் பேசிப் பழகுவது போல எதோ காட்சியும் ஓடுகிறது.

அடுத்த பக்கம்