துளி தீ நீயாவாய் 7(4)

அவள் கையிலிருந்த நகைப் பெட்டி கண்ணெதிரே இருக்கும் மேஜையில் வைக்கப் பட்டிருக்க,

படுத்து ஓரளவு சமனப் பட்ட பின், இப்போது இவள் மனம் குணம் கவனம் எல்லாம் அந்த பெட்டி மீதே ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

காரணம் சொல்ல மாட்டானே தவிர காரணம் இல்லாம வாங்க மாட்டானே! அதுவும் நேத்து வரைக்கும் இவ அவன்ட்ட கொந்தளிச்சுகிட்டு இருந்த நிலைக்கு என்ன தைரியத்தில் நகை வாங்கி இருப்பான்?

காலையில் அவன் கிளம்பிப் போறப்ப வரை கோபம் போய்ட்டுன்னு கூட அவன்ட்ட இவ காமிச்சுக்கலையே, ஆனாலும் வாங்கி இருக்கான்னா, அவன் வீட்டுக்கு வர்றதுக்கும் முன்னயே இவ சமாதானம் ஆகிட்டான்னு அவனுக்காவே தெரிஞ்சிருக்கணும்.

‘அடப் ப்ரவி நான் கருண்ட பேசுறத ஒட்டா கேட்ட? வீட்லலாம் ஒட்டு கேட்க மாட்ட, நான் மட்டும் உனக்கு இனா வானாவா?’

‘லூசு இந்த ரூம்குள்ள எத்தன ஓரத்துல போய் இருந்து பேசினாலும் அவனுக்கு கேட்காம இருக்க அவன் செவிடாதான் இருக்கணும், இது என்ன அமரகுளம் வீடா? வெறும் அரையடி சுவர் கட்டிடம்’ மனம் அங்கும் இங்குமாய் துள்ளி ஆடியதில் இதெல்லாம் இன்னுமே அவளை இலகுவாக்கிக் கொண்டிருந்த நேரம்தான்

அடுத்த போதி மர சமாசாரம் நிகழ்ந்தேறியது.

‘அட மக்கு சாம்ப்ராணி, நீ சமாதானம் ஆகின சந்தோஷத்துக்குத்தான் இதை வாங்கவே செய்துருக்கு பயபுள்ள’

ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது இவளுக்கு.

அடித்து பிடித்து எழுந்து போய் மீண்டுமாய் அந்த  நகைப் பெட்டியை திறந்து பார்த்தாள். விளக்கணைக்கப்பட்ட அந்த மங்கல் ஒளியிலும் அது மின்னும் வகையிலேயே அது நவரத்தின கற்கள் பிரிவை சார்ந்தவை என்பது உறைக்க,

பொதுவாக இவளுக்கும் சரி அவனுக்கும் சரி இப்படி வைரம் மரகதம் என கற்களில் அதீதமாய் பணம் செலவிடுவது பிடிக்காது.

“எதாவது ரொம்ப முக்கிய அக்கேஷன் ஞாபகமா வேணும்னா ஒன் ஆர் டூ வாங்கிக்கலாம் பவிமா, ஜெனரேஷனா வச்சுகலாம் பாரு, மத்தபடி வேஸ்ட் ஆஃப் மனி” என்பான் அவன்.

இவளுக்கு அப்படி கூட தோன்றி இருக்கிறதென சொல்வதற்கில்லை.

ஆக இவ கோபம் போனது அவனுக்கு அவ்வளவு முக்கிய அக்கேஷனா? என்பதில் போய் நிற்கிறது இவள் மனது.

பெரிதாய் அழுத்தப்பட்டுப் போனாள் பெண்.

மீண்டும் வந்து படுக்கையில் படுக்கும் போது அவள் கண்கள் அவனைப் பார்க்க தடுமாறவில்லை. தூங்கி இருந்தான் அவன்.

கடந்த சில நாட்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறேன் இவனை என்றிருக்கிறது அவளுக்கு. அதற்கு அவனும் இவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி இருக்கிறான்.

விவசாயம் செய்ய சம்மதித்ததிலிருந்து வேணியை வீட்டில் வைத்திருப்பது வரை அனைத்தும் இவளது பிடிவாதத்திற்காக மட்டும்தானே!

வெகு நேரம் வரைக்கும் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு கிடந்தவள் “போடா நீதான் எனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்க, மத்தபடி நான் குட் கேர்ள்” என அவனுக்கு ஒரு சர்டிஃபிகேட்டை முனங்கிவிட்டு சின்ன முறுவலுடனேயே தூங்கிப் போனாள்.

இவள் எதையெல்லாம் எண்ணியபடி கிடந்தாளோ அதைல் சிலவற்றைதான் ப்ரவியுமே நினைத்தபடி நித்திரையில் ஆழ்ந்திருந்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு

அன்று அமரகுளத்திலிருந்து அடுத்த  ஒரு மணி 52 வது நிமிடம் டவுண் பஸ் ஏறிக் கொண்டிருந்தாள் பவித்ரா.

டவ்ண் பஸ் என்றால் கூட்டம் இல்லாமலா? பெண் என்பதால் கூட்டமே அவளை உள்ளே திணித்து தள்ளி ஏற வைத்துவிட்டது. ஆனால் ப்ரவிக்கு படிக்கட்டில் நிற்க வேண்டிய நிலை.

ட்ரைவர்க்கு பின்னால் இரண்டாம் இருக்கை அருகில் இருக்கும் கம்பி மீது சாய்ந்து கொண்டு முதல் டவ்ண் பஸ் பயணம் அவளுக்கு.

அருகிலிருந்த அனைத்துப் பெண்களைவிடவும் உயரமாக இருந்த அவளையும், அவள் துப்பட்டாவை இழுத்து பிடிப்பது அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணின் குழந்தைதான் என்பதையும் ஒரு வழியாக முயன்று பார்த்துக் கொண்ட ப்ரவி,

நெரிசல் தந்த வசதியின்மையை தாண்டி சூழலை அவள் ரசிக்க முயல்வதை உணர்ந்தவனாக தான் நின்ற இடத்தில் நிம்மதியாக நின்று கொள்ள,

அந்நேரம் இவனுக்கு சற்று அருகில் இருந்து பவியை கூப்பிட்டு குசலம் விசாரித்த ஒரு பெண் குரல் இவனுக்கும் கேட்கிறது.

“ஏல நீ பெரிய வாத்தியார் பொண்ணுதான? சொகமா இருக்கியால? என்னதிது பஸ்ல கிளம்பியாச்சு? அதுவும் இந்த நேரம்?” என்றது அது.

அடுத்த பக்கம்