துளி தீ நீயாவாய் 7(3)

பொழிந்து விழும் மழைக் கோடுகளை நேரடியாக தன் நாவில் வாங்கிட வானம் பார்த்தபடி பட படவென சிறகடிக்கும் மழைக் குருவி ஒன்றை அடிவயிற்றில் உணர்ந்தவளாய் அவஸ்தையாய் தங்கள் படுக்கை அறைக்குள்  நுழைந்தாள் பவித்ரா.

இன்று கதவை பூட்டி தாழிட்டது அவன். வெகு சாதாரணமாகத்தான் செய்தான் அவன்.

ஆனால் மௌனமாய் புல்ட்ரோஸர் ஒன்று அழுந்த படிய ஓடியது அவளுள் எங்கோ சிலவெளிகளில்.

உண்மையில் ஒருவாறு உதறவே தொடங்கிவிட்டது இவளுக்கு.

அங்கு ப்ரவியோ எதாவது ட்ராவல் முடிஞ்சு வர்றப்ப டிக்கெட் பில்லலெல்லாம் எப்படி அசுவாரஸ்யமா பாக்கெட்ல இருந்து எடுத்து வெளிய  வைப்பானோ, அதே போல ஒரு பாடிலாங்வேஜில்தான் பக்கத்திலிருந்த மேஜை மீதிருந்து இந்த நகைப்பெட்டியை எடுத்து நீட்டுகிறான்.

உடை மாற்ற வந்தவன் அங்கு எடுத்து வைத்திருப்பானாய் இருக்கும்.

இருந்த திகிட தோமில் என்னதென்று கவனியாமல் கையில் வாங்கி விட்டவள், அதன் பின்புதான் நகை என புரிந்தவளாக,

“இப்ப எதுக்கு இது?” என்றபடி அவன் முகம் பார்க்க,

அவனோ “ஏன்?” என பதில் கேள்வி கேட்கிறான்.

இப்போது என்று இல்லை அவன் எப்போது இவளுக்கு இது போல எது வாங்கி வந்தாலும் கிட்டதட்ட இதே பாவனையில்தான் கொடுப்பான். அதுவும் பல நேரங்களில் எடுத்து கொடுப்பதென்பதே இருக்காது.

ஊரில் இருந்து வந்திருக்கிறானே, அழுக்குத் துணி இருந்தால் எடுத்து துவைக்கப் போடலாம் என அவன் பேக்கை குடைந்தால் கூடவே இது போன்ற இவளுக்கான பெட்டியும் கிடைக்கும்.

அதை கையில் தூக்கி பிடித்தபடி “எல்லோரும் கேட்டுகோங்க மக்களே, நம்ம போலீஸ்கார் எதோ ஒரு பொண்ணுட்ட மாட்டிருக்கார், கிஃப்ட் வாங்கி ஒளிச்சு வச்சுருக்கார், நான் கண்டு பிடிச்சுட்டேன்” என கத்திக் கொண்டே வீடு முழுவதும் ஒரு முறை இவள் ஓடியது உண்டு.

“தாயாப்பா சீக்கிரமா நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ணுங்க, இல்லனா இவன் கம்பி நீட்டிடப் போறான்” என எதிரில் வந்த தயாப்பாவிடமும் இவள் கலாய்க்க,

“அவன் பார்த்துருக்க பொண்ண அவனுக்கு காமிச்சதே நான்தானே” என அவர் மீசை முறுக்கி இவளை சீண்ட,

“அட ராஜமாதா உனக்கே இது தகுமா? தம்பி லவ் பண்றான்னு சொல்றேன், எங்கடா அந்த அருவாளன்னு எகிறாமா இப்படி டுபாக்கூர் சப்போர்ட் வேற” என இவள் கலாய்ப்பாய் அங்கலாய்க்க,

ரொம்பவும் சந்தோஷ கால்வாரல்களில் மட்டும் இவள் தயாப்பாவை இப்படி ராஜமாதா என்பது வழக்கம்,

ஏதோ ஜனாதிபதி கையிலேயே அவார்ட் வாங்கினது போல் ஒரு புளங்காகிதத்துடன் இப்போது அவர் இவள் தலையில் தட்டியவர்,

“ஒருத்தன் வாங்கிட்டு வந்தா போய் போட்டுட்டு வந்து காமிக்றதவிட்டுடு வாயப் பாரு, போய் போட்டுட்டு வா” என கலாட்டாவை முடித்து வைக்க,

ரசனை சரிபாதி கலந்த ஒரு புன்னகை, இதழோடு தொடங்கி முகம் முழுவதும் வியாப்பித்துக் கிடக்க, மார்புக்கு குறுக்காய் கை கட்டி அருகில் இருந்த தூணில் ஒரு தோளால் சாய்ந்தபடி நின்று, இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ப்ரவியிடம் சென்ற இவள்,

“போலீஸ்காரா பார்த்தாயா என் திறமையை? உன் கண் முன்னாலேயே எப்படி உன் பொருளை  லவட்டிட்க் கொண்டு போகிறேன் என்பதை கவனித்தாயா?” என மனோகரா படம் கண்ணம்மா குரலில் ஒரு டயலாக்கையும் உதிர்க்க,

அப்போது அங்கு வந்த கருண் “என்னாதிது?” என வடிவேலு வாய்ஸில் விசாரித்தபடி வெடுக்கென இவள் கையிலிருந்ததை உருவி, அதை திறந்தவன்,

“பட்டிகாட்டு சுப்பம்மாவுக்கு போய் இப்படி ட்ரென்டியால்லாம் வாங்கினா எப்படி? வேஸ்ட் ஃபெல்லோ” என ப்ரவியிடம் கேட்டு மறைமுகமாய் இவளை வம்பிழுக்க,

இவளோ “ஐய ப்ரவி உன் கேர்ள் ஃப்ரெண்ட் பேரு சுப்பம்மாவா? ப்ச் ரொம்ப சுமாராதான் இருக்கு” என ப்ளேட்டை திருப்ப,

“ஆனாலும் பரவாயில்ல, சுபா சுபின்னு கூப்டுக்கோ, சீக்ரெட்டா செல்லப் பேர் வைப்பல்ல அத உப்மான்னு வச்சுகோ என்ன? சுப்பம்மா உப்மா மேட்சிங் மேட்சிங்” என கண் சிமிட்ட,

கூடவே “ஏன்னா உப்மாஆஆ எனக்கு பிடிக்காது” என்று நம்பியார் தொனியில் கறாராய் இப்போது அறிவிக்க,

ப்ரவி இப்பொது புன்னகையோடு நிறுத்தாமல் சிரித்தான்தான், ஆனால் கடைசி வரைக்கும் உனக்குத்தான் வாங்கினேன் என்றோ ஏன் வாங்கினான் என்ற காரணத்தையோ சொல்லவே இல்லை.

ஆனாலும் சற்று முன்பு அவன் முடித்த ஒரு கேஸ் தந்த சந்தோஷமே இந்த பரிசின் ஆரம்பம் என்பது இவளுக்கு புரியும்.

இந்த நினைவுகள் வரவும் எப்போதுமே காரணம் சொல்லாதவனிடம் இப்போது மட்டும் இவள் கேட்டால், அவன் ஏன்? என்பான்தானே என்ற ஒரு மனநிலைக்கு வந்தவள்,

எப்போதும் போலவேதான் அவனிருக்கிறான் என்பதே ஒரு இத ரக விடுதலையை இவளுக்குள் சாய்க்கவும், அதில் உதறல் எல்லாம் வெகுவாக அடைபட்டு போனாலும், கையில் வாங்கியதை பிரித்து கூட பார்க்காமல்,

இன்னுமே சின்னதா பட படன்னு இருக்குதே அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக,

“குட் நைட் ப்ரவி” அவசரமாய் முனங்கிவிட்டு படுக்கையின் அவள் புறத்தில் வந்து படுத்துக் கொண்டாள்.

அடுத்த பக்கம்