துளி தீ நீயாவாய் 7(2)

அப்படி இருந்த சில  பெரிய குடோன்களில் பகலில் நிரம்பி வழியும் சரக்கு, மறுநாள் காலை திறக்கும் போது எந்த தடயமும் இன்றி மாயமாகத் துவங்கியதுதான் இந்த வழக்கின் ஆரம்பம்.

பொருட்கள் திருட்டுப் போகும் இந்த நிகழ்வுகளைப் பொறுத்தவரை, வெளியே இருந்து அவை திருடப்படவில்லை என்றால் குடோனின் தரை வழியாக வந்தே திருடி இருக்க வேண்டும் என்பதுதானே லாஜிக்.

பொதுவாக குடோன் தரைகள் சிமென்ட் பூச்சு கூட இல்லாத மண் தரை, அதில் தோண்டிய தடயங்களும் பெரிதாய் எதுவும் இல்லை. குடோனை சுற்றி அருகிலும் சுரங்கம் தோண்டிய அடையாளம் எதுவும் இல்லை.

அப்படியானால் சற்று தொலைவிலிருந்தாவது சுரங்கம் தோண்டி வந்து, பொருளை எடுத்துக் கொண்டு, அதாவது லாரி லாரியாய் அள்ளிப் போகும் அளவு சரக்குகளை எடுத்துக் கொண்டு போய்விட்டு, மீண்டும் சுரங்கத்தை தடயமே இன்றி மூடியும் இருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் எப்படி சில மணி நேரம் போதுமாயிருக்க முடியும்? ஒரு கூட்டமே நின்று செய்தாலும் வாரக் கணக்காகுமே சுரங்கம் மட்டும் தோண்டவே! அதுவும் யார் கண்ணிலும் படாமல் இது எப்படி சாத்தியம்? ஊர் மக்கள், சேட்டிலைட்டில் என வரைக்கும் தெரியுமே.

ஆனால் சேட்டிலைட் படங்களில் கூட தேடியாயிற்று அப்படி எந்த தடயமும் இல்லை.

அதோடு இப்படி லாரி செல்லுமளவு சுரங்கம் தோண்ட வேண்டுமென்றால் எத்தனை ஆட்கள் வேண்டும்? எத்தனை செலவாகும்? திருடப்படும் பொருட்களை திருட்டு மார்கெட்டில் பாதி விலைக்கு விற்கும் போது அதை திருட செலவழித்த பணம் கூட வராதே!

அதுக்கு பூட்ட உடச்சு ஈசியா திருடிட்டுப் போய்டலாமே!

அப்படின்னா இந்த திருட்டோட நோக்கம் பணம் இல்லைனு கூட ஆகிடுதே!

அதில் கூடங்குளம் அணுமின்நிலையம் வேறு பக்கத்தில் இருக்கிறது என சேர்த்து யோசிக்கும் போது, அதற்குள் இப்படி குடோன் திருடும் கூட்டம் சேட்டிலைட்டை கூட ஏமாற்றி, அத்தனை பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்றுவிட்டால் என்ன ஆகும் என்ற திகில் கேள்வி வருகிறது.

இப்படி நாட்டிற்கு பெரிய ஆபத்தை கொண்டு வருவதற்கான ப்ராக்டீசா இந்த குடோன் திருட்டு? என்றும் இருக்கிறது.

அதனால்தான் சென்னையில் வேலையிலிருந்த ப்ரவியை அவசர அவசரமாய் இங்கு மாற்றி ஸ்பெஷல் ஆஃபீசராக இந்த வழக்கை கையாளச் சொன்னது அரசாங்கம்.

தூத்துகுடியில் கூட வைக்காமல் இவனை திருநெல்வேலியில் அமர்த்தியது திருட்டுக் கும்பலுக்கு இவன் இதற்காகவே வந்திருக்கிறான் என தெரிந்துவிடக் கூடாதெனதான்.

ஆனால் எப்படி தெரியுமோ, அதிலிருந்து இந்த திருடன் ஒவ்வொரு குடோன் திருட்டுக்குப் பின்னும் குடோனருகில் கிடைக்கும் எதாவது ஒரு நபரின் மொபைலில் இருந்தும் இவனை அழைத்து கதை பேசுவதை வழக்கமாக்கி இருக்கிறான்.

இவனுக்கு அவன் விசிறியாம்.

கொஞ்சம் சரி மனநிலை இல்லாத சைகிக் இஷ்யூ உள்ளவனா கூட அவன் இருக்கலாம், ஆனால் அவன் சொல்வதை செய்ய ஒரு கும்பலே அல்லவா இங்கு இருக்க வேண்டும்?

அப்படி கூட்டமே அவனுக்கு இருந்தாலும் கூட இதை எப்படி செய்கிறான் என்றே புரியவில்லை.

அல்லது இந்த திருடனே அந்த கிரிமினல் கும்பலால் இந்த திருட்டு விசாரணையை திசை திருப்ப பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் இருக்கலாம்.

அதோடு காவல்துறை அவனை தூத்துக்குடி அளவில் யோசிக்க, அவனோ இப்போது கர்நாடகாவில் கை நீட்டி இருக்கிறான்.

இதையெல்லாம் ப்ரவி சொல்லச் சொல்ல,

தன்னையே டிடெக்டிவாக்கி தாறு மாறாய் அலசி ஆராய்ந்து கொண்டு, கேள்வி மேல் கேள்வியாய் ப்ரவியை துருவிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் பவித்ரா.

அதில் அதுவரைக்கும் இருந்த எல்லாமே கவனத்தைவிட்டுப் போக ஒரே அரட்டை மோட் ப்ரவியுடன்.

அதனால் சாப்பாடு முடியும் இந்த நிமிடம் வரைக்கும் வெகுவாகவே ஒரு இயல்நிலையில் ப்ரவி முன்பு இயங்க முடிந்தது அவளுக்கு. அவர்கள் திருமணம் முடிவான நாளிலிருந்து இன்றுதான் மனம் இத்தனை இலகுவாகி இருப்பது போலும் ஒரு உணர்வு.

இதில் இரவு உணவு முடிக்கவும், அப்படியே எழும்பி வந்துவிடாமல், அங்கிருந்த பாத்திரங்களை ப்ரவியுமே இவளோடு சேர்ந்து எடுத்து வந்து சமையலறையில் வைத்தான்.

அமரகுள வீட்டில் இது பொதுவான பழக்கம்தான். கருணும் சரி ப்ரவியும் சரி இப்படித்தான். அங்கு வீட்டின் பின் கட்டில் கடைசியாய் இருக்கும் சமையல் அறை.

ஐந்து தலைமுறைக்கு முந்திய வீடு அது. சுவர் கட்டும் போது பதனீர் கடுக்காய் கருப்பட்டி எல்லாம் போட்டு சாந்தரைத்து கட்டினார்களாம், ஒரு ஆணி கூட சுவற்றில் இறங்காது. சுவரின் தடிமன் ஒன்றரை அடிக்கும் மேலாக இருக்கும்.

கத்தி கூப்பாடு போட்டாலும் மாடிக்கு எதோ கிசு கிசு போல் போய் சேர்ந்தால் உண்டு.

மற்ற நேரங்களில் வீட்டு வேலைக்கு மாரியக்கா இருந்தாலும் இரவுக்கு சமைத்து வைத்துவிட்டு அவர் வீட்டுக்கு போய்விடுவார் என்பதால் இரவு உணவுக்குப் பின் இவள் பாத்திரங்களை எடுத்து வைக்க போவதும்,

இவளுக்கு பாடிகார்ட் மற்றும் உதவி செய்யும் PA வாக அண்ணன் தம்பிகள் வருவது வழக்கம்.

அதே பழக்கத்தில் இப்போதும் வருகிறான் என முதலில் இருந்தாலும், அடுத்து அவனோடு அப்படியே படுக்கை அறைக்குள் போக வேண்டும் என்பது உறைக்கவும் இவள் உள்ளங் கைகளிலும் ஊன்றும் பாதம் படும் இடங்களிலும் மழையுணர்வு.

நேற்று போல் அவன் படுத்த பின்பு போய் அவன் முகம் பார்க்காமல் படுக்கையில் சுருண்டு கொண்டது போல் இன்றும் அமைந்தால் நன்றாய் இருக்குமே!

அவனோட போய் அவனிடம் பேசியபடி இயல்பு போல் எப்படி படுப்பாளாம் இவள்?

அடுத்த பக்கம்