துளி தீ நீயாவாய் 7

சையவும் இல்லாமல் நிலைகொள்ளவும் முடியாமல் படுக்கையில் கிடந்த பவியின் கண்கள் அருகிலிருந்த மேஜை மீதிருந்த அந்த நகை பெட்டியின் மீதே போய் வந்து கொண்டிருக்கிறது.

‘இப்ப எதுக்கு இது?’ இப்போது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் இதே கேள்வியைத்தான் அவன் தரும் போதும் கேட்டாள்.

காலையில் அந்த பால்கனி வந்து போனதுமே வேணி இவளிடம் வந்தவள் “உங்கட்ட மறைச்சு ஏமாத்தணும்னு எதுவும் இல்லக்கா, ஆனா வலிக்க வலிக்க நெஞ்சில ரத்தம் வடிஞ்சுட்டு இருக்கப்ப அத வாய்விட்டு சொல்ல தெரியல” என துவங்கி அவள் செய்த காரியங்களையும் அவளுக்கு நேரந்தவைகளையும் இவளிடம் அழ அழ சொல்ல,

அத்தனையாய் ஆறுதல், அறிவுரை, தேறுதல் என எத்தனையோ சொல்லி இவள் தேற்றி வைத்தாலும் உள்ளுக்குள் வெகுவாகவே விதிர்விதிர்த்துப் போனாள் இவள். வேணிக்காய் இவள் மனம் வேதனையுறுகிறது பரிதபிக்கிறது.

தன்னை எண்ணிக் கொள்கையிலோ நெக்குருகிப் போகிறது. எத்தனை பாதுகாப்பான கைகளுக்குள் இவள் வளர்ந்திருக்கிறாள்?!

பெண்துணை இல்லாமல் மூன்று ஆண்கள் சூழ வளர்க்கப்பட்டவள் இவள்.

வேணி விஷயத்தை கேள்விப்பட்ட இந்த நொடி சிந்திக்கையில் இவளை எத்தனையாய் கண்ணுக்குள் வைத்து பார்த்திருக்கிறார் தயாப்பா என எப்போதையும்விட இன்னுமாகவே உணர முடிகிறது.

அன்று ஒருநாள் தயாப்பா சொல்லிவிட்ட வார்த்தைகளின் வலி இன்னும் கூட இவளை ரண வேதனைப் படுத்துகிறதுதான், ஆனாலும் நெகிழ்ந்தும் புலர்ந்துமாய் விரியும் மனப்ராந்தியத்தில் புது புரிதலும் வருகின்றதே!

அன்று கோபத்தில் அவர் சிந்திய வார்த்தைகளை கோபம் என்று மட்டும் பொருள் கொண்டிருக்க வேண்டுமோ இவள்? அந்த வார்த்தைகளின் பொருளை நோண்டி இருக்க கூடாதோ?

அத்தனைக்கும் பிறகும் அவர் ப்ரவியை திருமணம் செய் என்றுதான் சொல்லி இருக்கிறார், வீட்டை விட்டு வெளிய போ என சொல்ல யோசிக்க கூட இல்லையே!

இத்தனைக்கும் ப்ரவியும் அவருக்கு உயிராயிற்றே!

அதோடு கருணும் ப்ரவியும் இவளுக்கு அரண்தான், ஆனால் வேலியே பயிரை மேயும் காலம் இது. இதில் வேலி என்று சொல்வதை விடவும் அரணும் கோட்டையுமாய் இருக்க அல்லவா அவர்கள் பழக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

அவளுக்கு சொந்தமாயிருக்கும் அந்த மூவரின் மீதுமே மனம் கனிந்து படுகிறது பெண்ணுக்கு. இன்னும் பலமாய் பின்னிக் கொள்கிறது பாச மென்கோடுகள். அது இன்றைய நிலைக்கு இன்னுமே வேதனையையும் கொட்டி வைக்கிறது.

அவங்க மூனு பேருமே இன்னைக்கு இவள விட்டு ஒரு ஒரு வகையில விலகித்தானே போய்ட்டாங்க!

வேணியிடம் பேசி தேற்றிய பின் இவள் தனிமையில் கிடந்து அழுது கொண்டிருந்தது வேணிக்காக மட்டுமில்லை, இவளவர்களோடு இவளுக்கு எப்படி இருந்த உறவு இப்படி ஆகிவிட்டதே என்பதற்காகவும் சேர்த்தேதான்.

மனம் வெகுவாக பழைய ப்ரவியை தேடியது.

எப்போதுமே அதீத பெர்சனல் விஷயங்களை வீட்டில் இருப்பவர்களை தவிர வெளியாட்கள் யாரிடமும் இவளுக்கு பேச வராது. குடும்பத்தை வெளியே விட்டுக் கொடுப்பது போல் தவிப்பாகிவிடும். ஆக நட்புகளிடம் கூட அப்படி பேசுவதை தவிர்த்துவிடுவாள்.

வீட்டில் எல்லோரிடமுமே மனம் விட்டு பேசுவாள்தான் எனினும், அது அதை அப்படியே சொல்லிக் கொள்ள இவளால் ப்ரவியிடம் மட்டுமே முடியும். அப்படி அந்த நண்ப ப்ரவியாக இவளுக்கு அவன் இன்று வேண்டுமே வேண்டும்.

ஆனால் அவன்தான் கல்யாணம் எனும் கூட்டுக்குள் போய் நிற்கிறானே என்று இவள் தகித்துக் கொண்டிருந்த நேரம்,

அதனாலேயே அவன் அழைப்பை கூட இவள் அசட்டை செய்து கொண்டிருந்த வேளை,

ஆனாலும் தனிமையில் இச் சிலுவையை இனியும் தாங்க முடியாது என இவள் நைந்து கொண்டிருந்த நொடிகளில்,

அவன் பார்வையிலாவது நின்று கொண்டிருக்கலாமே என்ற ஒரு வகையில்தான் இவள் ப்ரவி வரவும் சென்று கதவை திறந்ததும், அடுத்தும் அவன் அருகிலேயே இருந்ததும்.

அவனும் இவள் எதுவும் சொல்லாமலே இவள் தேடிய வகையிலேயே வந்து நிற்க, இவள் தனிமையுணர்வு அதில் தவிடு பொடியாக, ஆறுதல் நதி பிறக்க,

அதோடு அவனது வார்த்தைகளில் வேணி விஷயத்திற்கு தீர்வு இருப்பது போன்ற ஒரு புரிதலில் மனம் இன்னுமே இலகுவாகிவிட, அந்த தேற்றுதலை தந்தவன் மீது இன்னுமாய் ஒண்டிக் கொள்கிறது பெண்ணுளம்.

இவள் இப்படி ஆறி தேறவும் அடுத்து வந்த அவன் பார்வையில் காதல் சாரம் கனத்தே தெரிந்தாலும், சற்றாய் இவள் தவிக்கவும் அவன் சட்டென அதைக் கூட மாற்றிக் கொள்ளவும்,

உணவு மேஜைக்கு வரும் போது இவள் நடையில் துள்ளல் கூட வந்திருந்தது.

சாப்பிடும் நேரத்தில் ப்ரவி பேசிக் கொண்டே சாப்பிட்டான். தப்பித் தவறி கூட காதல் சீண்டல் என்றோ அல்லது வேணி உள்ளிட்ட எந்த ப்ரச்சனைகள் குறித்தோ அவன் பேசவில்லை. அவன் தற்போது கையாண்டு கொண்டிருக்கும் வழக்குகளைக் குறித்து சளசளத்துக் கொண்டிருந்தான்.

அந்த வள்ளல் திருடன்தான் முக்கிய டாபிக்.

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலில் வந்து இறங்கும் டன் கணக்கான சரக்குகளை, அதை இறக்குமதி செய்யும் எந்த நிறுவனமும் அப்படியே கப்பலிலிருந்து எடுத்து சென்றுவிட முடியாது.

முதலில் அந்த சரக்கை லாரிகளில் எடுத்து தூத்துக்குடியில் அதற்கென பல தனியார் நிறுவனங்கள் கட்டி வைத்திருக்கும் குடோனில் கொண்டு வைத்துவிட்டு, அங்கிருந்து தேவைக்கு ஏற்ப எடுத்து போவதுதான் வழக்கம்.

அடுத்த பக்கம்