துளித் தீ நீயாவாய் 4(3)

“ஏன் இப்பன்னதும் மட்டும்தான் உனக்காக பயப்படுவனோ? என்னைக்கினாலும் உனக்கு என்னதாவதுன்னா என்னால நிம்மதியா இருக்க முடியாது. ஏன்னா என்னோடது நிஜ பாசம், உன்ன மாதிரி வேஷம் கிடையாது” சொல்லிக் கொண்டே விடுவிடென அவள் அறையைப் பார்த்துச் சென்றாள் அவள்.

இவன் புலம்பலும் காதில் விழுந்துவிட்டிருக்கிறது என்பது இவனுக்குப் புரிகிறது. கூடவே இவன் குற்ற உணர்வு தேவை இல்லை என்பதும்தான்.

கல்யாணம் செய்யாட்டாலும் உனக்காக நான் இப்படித்தான்டா இருப்பேன்னுதான சொல்லிட்டு போறா?!

முட்டிக் கொண்டு நின்றதெல்லாம் சட்டென இவனுக்குள் விட்டுத் தெறிக்க, காவலின்றி காதல் மட்டும் இவனுக்குள் சிறகு விரிக்க,

சட்டென கை நீட்டி அவள் மெல்லிய புஜப் பகுதியை பற்றி இழுத்தான். “ஏய் வாலு அதென்ன லவ் பண்ணா அதுக்கு பேரு வேஷம்?” என சீண்டலும் சிரிப்புமாய் விசாரித்தான்.

எதிர்பாரா இந்தப் பிடியில் அவள் சென்று கொண்டிருந்த வேகத்துக்கு சமாளிக்க முடியாது இவன் மீதே வந்து விழுந்தாள் அவள்.

அவசர அவசரமாய் தன்னை சமாளித்து, இறுகக் கூட பற்றி இருக்கவில்லையே அவன், ஆக வெகு எளிதாய் அவன் பிடியிலிருந்து உருவிக் கொண்டவள்,

“தொடாதீங்கன்னு சொன்னேன்” எனும் போது உறுமிக் கொண்டிருந்தாள்.

“ஓய் சின்ன வயசில இருந்து இப்படித்தான் பிடிச்சு இழுத்து விளையாடிருக்கோம், சின்ன வயசு போல பாசமா இருக்கேன்னு இப்பதான நீ சொன்ன? பாசத்துல இப்படில்லாம் பிடிக்கலாம்தான் தப்பில்ல” என வருகிறது இவன் பதில்.

“எங்க இப்ப சொல்லு? லவ் பண்ணா அது வேஷமா? மத்தவங்களுக்கெல்லாம் பாஞ்சு பாஞ்சு சப்போர்ட் செய்ற? என்னை மட்டும் திட்ற?” இவன் குரலில் இன்னும் சிரிப்பு குறையவில்லைதான்.

ஆனால் இவன் கண்ணோடு கண்ணாக பார்த்துக் கொண்டு நின்ற இவனவள் கண்களில்தான் இதற்குள் நீர் கோர்த்துவிட்டது. அத்தனை அத்தனை செவ்வரிகளும் அவள் விழியில் தோன்றி அவள் உள்ளுக்குள் எத்தனை உடைகிறாள் என்பதையும் இவனுக்கு உணர்த்துகிறது.

“நீயும் சொல்லி காமிச்சுட்டல்ல?” என அவள் செத்துப் போன குரலில் கேட்கும் போதுதான் இவனுக்கு தான் வார்த்தையை சிந்தி இருப்பதே புரிகிறது. இவன் என்னதைச் சொன்னால் அவள் என்னதாய் புரிந்து வைத்திருக்கிறாள்.

“ஏய் லூசு “ என இவன் ஆறுதலும் அதட்டலுமாய் தன் வார்த்தைகளை விளக்கத் துவங்க, அதற்கும் முன்னால்

ஆக்ரோஷமாய் “அடுத்தவங்க செய்றதெல்லாம் லவ், ஆனா நீ செய்றது அது வேஷம்தான், இல்ல துரோகம்” என வெடித்தவள், இதற்குள் மடை திறந்த வெள்ளமென அழுகை அவளுக்கு பொத்துக் கொண்டு வர, படீரென இவன் முகத்தின் முன்பாக தன் அறைக் கதவை அறைந்து சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.

இவன் மொத்த முகமும் இறுகிப் போனது.

“பவி ப்ளீஸ் பவி, நான் சொல்ல வந்தது உன் ஃப்ரென்ட் சிந்திய” இவனது விளக்கத்தையெல்லாம் அவள் காது கொடுத்து கேட்கவே இல்லை எனப் புரிய, ஆயாசமாய் அருகிலிருந்த சோஃபாவில் போய் சரிந்தான்.

அறைக்குள்ளே அவள் அழுது கொண்டிருக்கிறாள் என இவனுக்கு சந்தேகமறப் புரிகின்றது. காலையிலிருந்து பவி விஷயத்தில் இவனுக்கு வந்திருந்த ஒரு நிம்மதி  முழு மொத்தமாய் தொலைந்து போனது இப்போது.

எப்படியும் சீக்கிரம் எல்லாவற்றையும் புரிந்து கொள்வாள் என்பதுதானே இவனது நம்பிக்கையே! ஆனால் அதற்குள் இவள் இப்படி எத்தனை நாள் அழுது கரைவாளோ? என்றிருக்கிறது இவனுக்கு.

அதே நேரம் மேலே மாடியிலிருந்து ‘வீல்ல்ல்ல்ல்’ எனக் காதில் விழுகிறது வேணியின் அலறல்.

“ஹெல்ப் மீ!! ஐயோ யாரோ திருடன்!! என்ன கொல்ல வந்துருக்கான்!!” என வாய்க்கு வந்ததையெல்லாம் கத்திக் கொண்டு படிகளில் தட தடவென இறங்கி வந்து கொண்டிருந்தாள் அவள்.

மாடிபடி வரவேற்பறைக்கு வெளியில் இருக்கும் சிறு அறையிலிருந்து மேலேறுவதால், வரவேற்பறை கதவை பூட்டிவிட்டாலே வேணி இவர்கள் பகுதிக்கு வர முடியாது என்ற நிலையில்,

ப்ரவி அவசரமாய் சாவியை எடுத்துக் கொண்டு கதவுக்கு சென்றடையும் முன்னாகக் கூட வேணி கதவை பட படவென தட்டத் துவங்கி இருந்தாள்.

இவன் கதவை திறக்கும் போது இதற்குள் பவியும் இங்கு வந்து சேர்ந்திருக்க, “ஐயோ அக்கா திருடன்” என்றபடி அவளை நோக்கித்தான் பாய்ந்தாள் வேணி.

இதற்குள் வீட்டின் முன் வாசல் வழியாய் காவலுக்கு இருந்த கான்ஸ்டபிளும் உள்ளே நுழைய,

“கதவ உள்ள பூட்டிக்கோங்க” என்றபடி பவியையும் வேணியையும் பவியின் அறைக்குள் இழுக்காத குறையாக கொண்டு தள்ளி, அந்த அறை கதவையும் பாய்ந்து மூடிவிட்டு, மாடியை நோக்கி ஓடினான் ப்ரவி.

நாலு நாலு படியாய் ஏறி இவன் மாடியை அடையும் போது அங்கு யாருமே இல்லை. ஆனால் ஆள் வந்து போனதன் அடையாளமாய் சிகெரெட் வாசம்.

அடுத்து ப்ரவியும் அந்த கான்ஸ்டபிளும் எவ்வளவு தேடியும் யாரையும் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதோடு வேணி தங்கி இருந்த அறைக்கு அடுத்த அறையின் பால்கனியில் புகைக்கப்பட்ட நான்கைந்து சிகரெட்களும் சாம்பலும்.

இது பழைய வீடை புதிப்பித்த கட்டிடம் அல்லவா? கொஞ்சம் அமைப்பு இங்கும் அங்குமாயும் இருப்பது போல இருக்கும்.

அங்கு அமர்ந்திருந்து கவனித்தால் வீட்டின் எந்தப் படுக்கை அறையிலிருந்து பேசுவதும் கேட்குமாயிருக்கும். ஏன் வரவேற்பறையில் இவர்கள் பேசியது கூட காதில் விழுந்திருக்கலாம்.

“சார் ரொம்ப நேரமா இங்க இருந்து வீட்ட நோட்டம் விட்ருக்கான் சார் வந்தவன்” கான்ஸ்டபிள் சொல்ல,

சன்னமாய் விரிகிறது ஒரு போலீஸ் புன்னகை ப்ரவியின் முகத்தில்.

அடுத்த பக்கம்