துளித் தீ நீயாவாய் 4 (2)

அடுத்து சற்று நேரத்தில் ப்ரவியின் எண் சிணுங்கும் போது அவன் தன் குழு சுற்றி சூழ இருக்க, பெங்களூர் காவல் துறை தலைமை அதிகாரியோடு கான் காலில் ஈடுபட்டிருந்தான்.

அந்த குடோனின் தற்போதைய நிலையை பற்றி பெங்களூர் காவல்துறை தகவல்கள் பரிமாறிக் கொண்டிருந்த நேரம் அது.

அங்கு வயர்லெசில் பேசிக் கொண்டே சிணுங்கும் தன் மொபைலை எடுத்து அழைப்பது யார் எனப் பார்த்தால் KVஎன்றது அது. குத்துவிளக்கு! ‘இத்தன மணிக்கு இவ என்ன செய்துகிட்டு இருக்கா?’

‘வீட்ல எதுவும் இஷ்யூனாலும் அங்க செக்யூரிட்டிக்கு இருக்க கான்ஸ்டபிள் கூப்ட்டுருப்பார்தான், இருந்தாலும்…’

இவன் அவசரமாய் மொபைல் அழைப்பை ஏற்க, வெட்டும் பாவத்தில் வந்து விழுகிறது முதல் கேள்வி “நீ என்ன லவ் பண்றதான ப்ரவி?”

என்ன சொல்வான் இவன்?

வந்த சிரிப்பை இம்மி பிசகாமல் இதழுக்குள் சிறை செய்தபடி, இறுகியது போல் முகத்தை வைத்துக் கொண்டு, பின்ன இங்க இந்த சிச்சுவேஷன்ல சிரிச்சா எப்படி இருக்கும்? சுற்றி இருப்பவர்கள் மீது பார்வையை சுழலவிட்டுக் கொண்டே,

வயர்லெஸ் கருவியை சற்று நன்றாகவே தள்ளி வைத்துவிட்டு, “ம், ஆமான்னு உனக்கே தெரியும்” என சின்னதே சின்னதான குரலில் மொபைலில் முனங்கினான்.

அதற்கு கடகடவென பதில் வந்தது அவனுக்கு பாரியாளிடமிருந்து.

“ஆனா எனக்கு உன் மேல அப்படில்லாம் எதுவும் கிடையாது. இப்ப நான் சொல்றது உன்னை சின்ன வயசில இருந்து தெரியும்ன்ற அக்கறையில மட்டும்தான், நீ அந்த உன்ட்ட நல்லா பேசுற அந்த திருடனல்லாம் நம்பாத, நீ சொல்லிதான் அவன் இதெல்லாம் செய்றதா கூட மாட்டிவிட்டுடுவான், அவன் கூப்ட்டான்னு எங்காயவது தனியா எதுவும் போய்டாத”

இறுகிய பாவத்தில் தொடங்கிய பவியின் இந்த வாக்கியங்கள் கடைசிப் பகுதிக்கு வரும் போது அவள் தவிப்பை முழு மொத்தமாய் சுமந்துவர,

தன்னந்தனியாய் வீட்டில் இருந்து கொண்டு இந்த நேரத்தில் அவள் மனம் என்னவெல்லாம் எண்ணி பரிதவித்துக் கொண்டிருக்கிறது என்பது இதில் இவனுக்கு அச்சர சுத்தமாய் புரியும்தானே!

“அவன் தமிழ் நாட்லயே இல்ல பவிமா, நான் முழு கவனமாதான் இருக்கேன், நீ மனச போட்டு குழப்பிக்காம தூங்குமா” இருந்த சூழ்நிலையில் எதைச் சொல்ல முடியுமோ, எது அவளை சற்றாவது சாந்தப் படுத்துமோ அதை இவன் சிறு குரலில் சொல்ல,

“சொல்லிட்டேன் உன் இஷ்டம்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள் அவள்.

பவிக்கு அவன் குரலை கேட்டதே ஓரளவு ஆறுதலாக இருக்கிறது என்றால், அந்த திருடன் தமிழ்நாட்லயே இல்லையாமே, ப்ரவி இங்க திருநெல்வேலிலதான இருக்கான் என்ற இந்த செய்தி பெரும் நிம்மதியை தற்காலிகமாக வார்க்க,

தலைவலி நன்றாக குறைந்துவிட்டது. ஆனாலும் கூட ஏனோ போய் படுக்க மனம் வரவில்லை.

மேஜையில் தலை வைத்து அப்படியே சுருண்டு கிடந்தாள்.

சற்று நேரத்திலெல்லாம் ப்ரவி வீட்டுக்குள் வரும் போது அவன் கண்டது அந்தக் காட்சியைத்தான். மேஜையில் தன் கையை அணையாய் வைத்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

வரவேற்பறை கதவை தன்னிடம் இருந்த சாவியால் இயன்றவரை சத்தமின்றி திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ப்ரவி மெல்லிய உணர்வுகள் சிலவற்றால் வன்மையாய் தாக்கப்பட்டுப் போனான்.

முதல் நிலை உணர்வு அமிர்தக் கரைசலாய் இழையும் காதல் புனல்தான். இவனுக்காக அல்லவா காத்திருந்திருக்கிறாள்.

மெல்ல அருகில் போய் அவள் கை மறைவுக்குள் தெரியும் அவளது பக்கவாட்டு முகத்தைப் பார்த்தான்.

சின்னதாய் அவள் கசகசத்திருப்பதாய் தோன்ற, அப்போதுதான் கவனிக்கிறான் அவள் மின்விசிறியை போட்டிருக்கவே இல்லை.

ஓ வெளிய கேட்கிற சின்ன சத்தம் கூட காதில் விழுறதுக்காக போல இது.

‘அவ்வளவா இவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா? ரொம்பவும் பயந்துட்டா போலயே!’ யோசித்தபடியே இவன் மின்விசிறிக்கான சுவிட்சை போட,

மூடிக் கிடந்த அவள் இமைகளில் சின்னதாய் ஒரு அசைவும் பின்னாய் பரவும் இலகு நிலையும் அவளையே பார்த்திருந்த இவனுக்கு காணக் கிடைக்கிறது.

சட்டென இவனுக்குள் பாய்ந்து உயர்கிறது வந்த நேரத்தில் இருந்து இவனை வாட்டிக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு.

வேற ப்ரொஃபஷன்ல இருக்கிற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா இப்படி இழுபடாம நிம்மதியா இருந்திருப்பாளோ?!

மனசுக்குள் பரவும் கசப்பு கழுத்து வரை இறுக, “ப்ச்  இப்படி டென்ஷன்குள்ள உன்ன வந்து நான்தான் இழுத்து விட்டுட்டனோ?” என முனங்கியபடி, அவள் தலையை பட்டும் படாமலும் மயில் பீலியாய் இவன் வருட,

சட்டென விறைப்பாய் எழுந்து நின்றது இவன் குத்துவிளக்கு.

“மேல கை பட்டிச்சு கொன்னுடுவேன்” முதல் வாக்கியம் இதுதான் வெளி வந்தது அவளிடமிருந்து. இவன் தொடுகை தெரிந்துவிட்டது போலும்.

அடுத்த பக்கம்